murasoli thalayangam
மர்மமான முறையில் பெற்ற வெற்றியை மோடி சொந்தம் கொண்டாட முடியாது! : முரசொலி தலையங்கம்!
ஜார்கண்ட் மாநிலத்தில் 'மகத்தான' வெற்றியை 'இந்தியா' கூட்டணி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 'மர்மமான' வெற்றியை பா.ஜ.க.கூட்டணி பெற்றுள்ளது. உள் உண்மைகளை உன்னிப்பாகக் கவனித்தவர்கள், இதுதான் உண்மை என்பதை ஒப்புக் கொள்வார்கள்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. செய்த அரசியல் அராஜகங்கள் அனைவரும் அறிந்தது ஆகும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு வழக்கை அமலாக்கத்துறை மூலமாக தூசி தட்டி எடுத்து ஹேமந்த் சோரனை விசாரணைக்கு வருமாறு அழைத்தது. தன்னை எப்படியும் கைது செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து அவர் தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
ஹேமந்த் சோரனைக் கைது செய்து ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் பா.ஜ.க.வின் சதியாக இருந்தது. ஆனால் கட்சி உறுதியாக ஹேமந்த் பின்னால் நின்று விட்டது. ஹேமந்த் கைது செய்யப்பட்டதும் உடனே கூடிய முக்தி மோர்ச்சா கட்சி தனது அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரனை தேர்ந்தெடுத்தது. ஆளுநரிடம் அதற்கான கடிதத்தை கொடுத்ததும், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டும்.
முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்களை உடைக்க முடியுமா என்று பார்த்தார்கள். ஜார்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 உறுப்பினர்கள் தேவை. 43 உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பதாக வீடியோவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெளியிட்டது. கூட்டணியாக பார்த்தால் 48 உறுப்பினர்கள் ஆதரவு இந்த அரசுக்கு இருந்தது. ஆனாலும் உடனடியாக ஆட்சி அமைக்க இந்தக் கட்சியை அழைக்கவில்லை.
அவர்களது ஆட்சியை அமைக்க கால அவகாசத்தை நீட்டித்து பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத விளையாட்டுகளை விளையாட நேரம் கொடுத்தார் ஆளுநர். பா.ஜ.க. நினைத்தது நடக்கவில்லை. வேறு வழியின்றி அதே கட்சி ஆட்சி அமைக்க அனுமதி அளித்தார் ஆளுநர். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்தார் ஹேமந்த். அவரது மனைவி கல்பனா தேர்தல் பரப்புரையைச் செய்தார். உச்சநீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில் ஹேமந்த் வெளியில் வந்தார். சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 81. பெரும்பான்மையைநிரூபிக்க 41 உறுப்பினர்கள் தேவை. 'இந்தியா' கூட்டணிக்கு 56 உறுப்பினர்கள்ஆதரவு இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணி 24 இடங்களையே கைப்பற்றியது. மகத்தான வெற்றியை ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் கட்சி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் கட்சிகளை உடைத்து பா.ஜ.க. உருவாக்கிய ஓட்டை உடைசல் கூட்டணியானது ‘மர்மமான' முறையில் வெற்றி பெற்றிருக்கிறது. எப்போதும் அரியானா, மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல்கள் ஒன்றாகத்தான் நடக்கும். இம்முறை திட்டமிட்டு தனித்தனியாக நடத்தினார்கள். 'காஷ்மீருக்கு அதிகமான போலீஸ் தேவை என்பதால் மகாராஷ்டிரா தேர்தலை நடத்தமுடியவில்லை' என்று காரணம் சொன்னார்கள். அரியானா, மகாராஷ்டிரா தேர்தலை ஒன்றாக நடத்த முடியாதவர்கள்தான் இந்தியாவின் அனைத்து மாநிலத் தேர்தலையும் ஒன்றாக நடத்தப் போகிறார்களாம். துப்புக் கெட்ட கொள்கையல்லவா, 'ஒரே தேர்தல்' கொள்கை?
அரியானா மகாராஷ்டிரா தேர்தலை ஒன்றாக நடத்தாதது முதல் மர்மம். இரண்டாவது, பெண்களுக்கு 1500 ரூபாய் கொடுப்பதற்காகவே, தேர்தல் தேதியை தள்ளிப் போட்டார்கள். மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு, 1500 ரூபாய் கொடுப்பதற்காகவே தனியாக இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்கள்.
இரண்டு மாதத் தொகை முன்கூட்டியே கிடைக்கும் வகையில் உத்தரவுகள் போட்டார்கள். பணம் கிடைத்த மக்களிடம், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 4000 ரூபாயாகத் தரப் போகிறோம்’ என்று பரப்புரை செய்தார்கள். இந்த மர்மப் பொய்தான் இரண்டாவது காரணம்.
288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு பெரும்பான்மையைநிரூபிக்க 144 உறுப்பினர் தேவை. பா.ஜ.க.132 இடங்களைத்தான் பெற்றுள்ளது. ஷிண்டேவின் சிவசேனா, அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியோர்தயவில்தான் பா.ஜ.க. ஆட்சியை அமைத்தாக வேண்டும். ' கூட்டணி இல்லாமல்காங்கிரசால் இனி வெல்ல முடியாது' என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார்.
இத்தகைய தைரியசாலி, மராட்டியத்தில் தனியாக நின்றிருக்கலாமே? சிவசேனாவை உடைத்து ஒரு கட்சியையும், சரத்பவார் கட்சியை உடைத்து ஒரு கட்சியையும் உருவாக்கி, அந்தக் கட்சிகளின் தயவுடன்தானே அவரால் வெல்ல முடிந்தது? எதிரிகளை உடைத்தது மூன்றாவது காரணம்.
மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டியத்தில் 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை 'இந்தியா' கூட்டணி கைப்பற்றியது. மீதம் தான் பா.ஜ.க.கூட்டணி கைப்பற்றி இருந்தது. இதுதான் 'மோடிக்கான' வாக்குகள் ஆகும். இப்போது நடந்தது மோடியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. எனவே இந்த வெற்றியை மோடி சொந்தம் கொண்டாட முடியாது. 'யார் முதலமைச்சர்?' என்பதை 'இந்தியா' கூட்டணி அறிவிக்காத பலவீனமேதோல்விக்கான காரணம் ஆகும்.
மேற்கு வங்க சட்டசபையில் 6 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில்பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 6 இடங்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. தலைவர் பசவராஜ் பொம்மை மகனும் தோற்றுப் போனார். பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர் குமாரசாமியின் மகனும் தோற்றுப் போனார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 4 இடத்திலும் பா.ஜ.க. தோற்றுள்ளது. அதுமட்டுமல்ல; மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஒரு தொகுதிக்கு நடந்த) இடைத்தேர்தலில் 2 ஆயிரம் வாக்கில்தான் பா.ஜ.க. வெற்றி பெற முடிந்தது. மத்திய பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளில் ஒன்றைத் தான் பா.ஜ.க. கைப்பற்றியது. கேரளாவில் தேர்தல் நடந்த இரண்டையும் மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரசும் பிடித்துவிட்டது. வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வென்றுள்ளார். மூன்றாவது இடத்துக்குப் போயிருக்கிறது பா.ஜ.க.
உ.பி., பீகார், ராஜஸ்தான் நீங்கலாக மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. தோற்றுள்ளது. இவை அனைத்தும் பா.ஜ.க. மீதான மக்கள் மனநிலையைக் காட்டும் செய்திகள் ஆகும். மகாராஷ்ரா மாநில அமைச்சர்களே 377 வாக்குகள், 1523 வாக்குகள், 1509 வாக்குகள், 2161 வாக்குகள் என மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். இதை 'சமூகநீதி' வெற்றி என்கிறார் பிரதமர் மோடி.
அதுதான் புரியாத 'மர்மமாக' இருக்கிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!