murasoli thalayangam

"பொது சிவில் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைப் பழிவாங்க கொண்டுவரப்படும் சட்டம்" - முரசொலி காட்டம் !

முரசொலி தலையங்கம் (06-11-24)

அமித்ஷாவுக்கு எதனால் பயம் ?

“பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினருக்கு விலக்கு” என்றுஉள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி இருக்கிறார். பழங்குடியினருக்கு விலக்கு என்றால், அது எப்படி 'பொது' சிவில் சட்டம் ஆகும்? ‘விலக்கு' அளிக்கும் சட்டமாகத்தானே அது இருக்க முடியும்? “இந்த நாட்டில் தனித்தனி சட்டங்கள் கூடாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்தான் இருக்க வேண்டும்” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி வந்த 'இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்' அமித்ஷா, எதற்காக பயப்படுகிறார்? தைரியமானவர் தானே? அனைவருக்கும் பொதுவான சட்டத்தில் பழங்குடியினருக்கு மட்டும் விலக்குஅளிக்கப் போகிறோம் என இறங்கி வர வேண்டிய தேவை என்ன வந்தது?

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. பழங்குடி மக்கள் வாழும் மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். அதனால்தான் ஓட்டு வேட்டைக்காக பதுங்குகிறது பா.ஜ.க. ஜார்கண்ட் மாநிலத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டு இருக்கிறார். அப்போது பேசிய அமித்ஷா... “ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். 'பொது சிவில் சட்டம் பழங்குடியினரின் உரிமையையும் கலாச்சாரத்தையும் பாதிக்கும்' என்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அது முற்றிலும் அடிப்படையற்றது ஆகும். பொது சிவில் சட்டத்திலிருந்து பழங்குடியினருக்கு முழு விலக்கு அளிக்கப்படும். பழங்குடியினர் உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

பொது சிவில் சட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்படுத்த விடமாட்டோம் -- என்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடக்கத்திலேயேசொல்லி விட்டார். “ஜார்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டமோ, தேசிய குடிமக்கள் பதிவேடோ செயல்படுத்தப்படாது” என்று ஹேமந்த் சோரன் தொடர்ந்து சொல்லி வருகிறார். எனவே, தான் பா.ஜ.க. பதுங்குகிறது. ஜார்கண்ட் என்றாலே காடுகள் அதிகம் உள்ள பகுதி என்பதுதான் பொருள். பட்டியல் பழங்குடி மக்கள் 28 விழுக்காடு இருக்கிறார்கள். பழங்குடி மக்கள் 12 விழுக்காடு இருக்கிறார்கள். பட்டியல் பழங்குடியினரில் இந்து சமயத்தினர் 67 விழுக்காடு உள்ளனர். இசுலாமியர் 14.53 விழுக்காடும், கிறித்துவர்கள் 4.30 விழுக்காடும் உள்ளனர். பழங்குடியினரில் சீக்கிய, சமண, பவுத்த மக்களும் இருக்கிறார்கள். இதையும் தாண்டிய மதங்களைச் சார்ந்தவர்களாக 12 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். எனவே பல்வேறு பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலாச்சாரங்கள், நெறிமுறைகள், சட்ட திட்டங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் மாநிலம் இது. 'அனைவருமே பழங்குடியினர்' என்று பொதுமைப்படுத்திவிட முடியாது.

பொதுசிவில் சட்டம் கொண்டு வரப் போகிறோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க. அரசு சொன்ன போதே, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பழங்குடி அமைப்பினர் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ராஞ்சியில் கூடிய ஆதிவாசி சமன்வாய் சமிதி என்ற கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.பழங்குடியினரின் உரிமைகள் அனைத்தும் பறிபோகும்என்று இவர்கள் சொல்லி இருந்தார்கள். நாகலாந்து, மிசோரம் மாநில மக்கள்இதனை எதிர்க்கிறார்கள். எனவே, பா.ஜ.க. என்ன நினைத்தாலும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியாது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்கு நிலத்தகராறுகள் மற்றும் குடும்ப விவகாரங்களைத் தீர்ப்பதற்கு தனிச் சட்டம் இருக்கிறது. தனி நீதிமன்றமும் இருக்கிறது. 'மங்கி முண்டா நியாய பஞ்ச்' என்று இதற்குப் பெயர். 'ஹோ' என்ற பழங்குடியினர் மொழியில் மட்டுமே விவாதங்கள் நடக்கும். இதனை எந்த சூழலிலும் விட்டுத் தர மாட்டோம் என்று ஜார்கண்ட் பழங்குடி மக்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் 750 பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. அதில் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் 32 பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. அவர்களது அனைத்து பழக்க வழக்கங்களும் சட்டங்களாக உள்ளன. இதனை யாரும் மாற்ற முடியாது. இசுலாமியருக்கு மட்டுமே தனிநபர் சட்டம் இருப்பதாக நினைப்பதே தவறானது ஆகும்.

இந்திய அரசியலமைப்பின் 371 ஆவது பிரிவின் கீழ் பல்வேறு இந்திய யூனியன் மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் xxi மற்றும் xii பாகங்களில் காணக்கூடிய இந்திய அரசியலமைப்பின் பிரிவு 371 ஆவது பிரிவானது, நாட்டுக்குள் சில மாநிலங்களுக்கு பல தற்காலிகம் இடைநிலை மற்றும் விதிவிலக்கான விதிகளை வழங்குகிறது. இச்சட்டமானது குஜராத், மகாராஷ்- டிரா, நாகலாந்து, மிசோரம், அசாம், ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளைவழங்குகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 371 A முதல் 371 J வரையிலான பிரிவுகளாக அமைந்துள்ளது.

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது என்றால்... 'இந்த மாநிலங்களின்வளர்ச்சியடையாத பகுதிகளின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் பொருளாதார மற்றும் பண்பாட்டு நலன்களைப் பாதுகாப்பது, உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அவர்களின் வழக்கமான சட்டங்களைப் பாதுகாப்பது' என்றே சொல்லப்படுகிறது. அதாவது அந்தந்த மாநிலங்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவுகள் இவை. இந்த சிறப்புரிமை களை பா.ஜ.க.வால் ரத்து செய்ய முடியாது. செய்தால் அந்த மாநிலத்தில் ஓட்டு வாங்க முடியாது. எனவேதான், 'பழங்குடியினருக்கு விலக்கு' என்று பதுங்குகிறது பா.ஜ.க.. அப்படியானால் பொது சிவில் சட்டத்தை எதற்காக கொண்டு வரத் துடிக்கிறீர்கள்? இசுலாமியர்களைப் பழிவாங்குவதற்காக மட்- டுமா? ஒரு குறிப்பிட்ட மதத்தினரைப் பழிவாங்க மட்டுமே கொண்டு வரப்படும் சட்டம் எப்படி 'பொதுச் சட்டம்' ஆகும்? அது சதிச் சட்டமாகத் தானே கருதப்படும்?!

Also Read: ”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!