murasoli thalayangam
“தோல்வி நமைச்சல், புகைச்சலாக வெளிப்படுகிறது...” -திமுக அரசு பற்றி குறை கூறிய பழனிசாமிக்கு முரசொலி பதிலடி!
பழனிசாமிக்குத்தான் புகைச்சல் !
தி.மு.க. கூட்டணி வலிமையாக - உறுதியாக இருப்பதை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கழகத்தின் பவளவிழாப் பொதுக்கூட்டத்தின் மூலமாக அனைத்துத் தலைவர்களும் உறுதிப்படுத்தி விட்டார்கள். இதன் மூலமாக பழனிசாமிக்குத் தான் புகைச்சல் அதிகமாகி வருகிறது. பாவம், தூக்கமில்லாமல் தவிக்கிறார்.
“தி.மு.க. கூட்டணிக்குள் புகைச்சல் தொடங்கி விட்டது” என்று புலம்பி இருக்கிறார் பழனிசாமி. தனது ஆளுகைக்கு அ.தி.மு.க. வந்தது முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று மண்ணைக் கவ்வியவர் பழனிசாமி. அந்த தோல்விக் காய்ச்சலில் இருந்து அவர் இன்னமும் மீளவில்லை. அந்த பிதற்றலைத்தான் தினமும் நாம் கேட்டு வருகிறோம்.
ஜெயலலிதா மறையும் போது இவரிடம் ஆட்சி இருந்தது. இப்போது ஆட்சி இருக்கிறதா? இல்லை. ஜெயலலிதா இவரிடம் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொடுத்துச் சென்றார். இப்போது ஒரு நாடாளுமன்றத் தொகுதியாவது இருக்கிறதா? அதுவும் இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் தோற்றவர்தான் பழனிசாமி. 7 தொகுதியில் டெபாசிட் போய்விட்டது. 12 தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு பழனிசாமியின் கட்சி போனது. கன்னியாகுமரி தொகுதியில் நான்காவது இடம் போனது பழனிசாமியின் கட்சி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை 234 சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுத்துப் பார்த்தால் 222 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இப்படி அ.தி.மு.க.வின் செல்வாக்கை மொத்தமாகச் சரித்த சாதனைக்குச் சொந்தக்காரர்தான் பழனிசாமி.
அ.தி.மு.க.வையாவது முழுமையாக வைத்திருக்கிறாரா என்றால் இல்லை. பன்னீர்செல்வம் ஒரு அணியை வைத்துள்ளார். தினகரன் ஒரு கட்சியைத் தொடங்கிவிட்டார். அ.தி.மு.க.வுக்கு நான்தான் பொதுச்செயலாளர் என்று சசிகலா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பத்தில் பாதியைத்தான் பழனிசாமி வைத்துள்ளார். அவர் வைத்துள்ளது, அரைகுறை அ.தி.மு.க. தானே தவிர, முழுமையான அ.தி.மு.க. அல்ல.
கூட்டணி என்று இருந்தார்களே, அவர்களையாவது ஒழுங்காக வைத்துக் கொண்டாரா பழனிசாமி என்றால் இல்லை. அண்ணாமலைக்கும் - பழனிசாமிக்கும் ஏரியாவைப் பிரிப்பதில் சண்டை ‘கடப்பா உன்னிது - ரேணிகுண்டா என்னிது’ என்பதைப் போல மேற்கு மண்டலத்தில் யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்ற சண்டையில் மோதி மோதி மண்டை உடைந்ததுதான் மிச்சம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருந்தது. ஏன் உடைந்தது?
1991-96 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சிக்காலம் ஊழலில் மிக மோசமான காலக்கட்டமாக இருந்ததா என்று ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை கேட்கிறது. அப்போது அண்ணாமலை, “தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் மலிந்தன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுள்ளனர். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் நம்பர் ஒன் என்று சொல்வேன்,” என்றார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குப் போனவர் - – பதவியை இழந்தவர் ஜெயலலிதா மட்டும்தான். அவரது பெயரைச் சொல்லாமல் சொல்லி இருந்தார் அண்ணாமலை. கூட்டணியில் இருக்கும் போதுதான் அண்ணாமலை இப்படி பேட்டி அளித்தார். இந்தப் பேட்டிக்கு எதிராக அ.தி.மு.க. கொந்தளித்தது. அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் போடப்பட்டது.
“ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாகவும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேட்டி அளித்துள்ளார். இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 20 ஆண்டுகளாக சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத பா.ஜ.க.வுக்கு 4 உறுப்பினர்கள் கிடைக்கச் செய்தவன் நான். 1998 இல் பா.ஜ.க. ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. போற்றுதலுக்குரிய ஜெயலலிதாவை பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் அற்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டமிட்ட வகையில் உள்நோக்கத்தோடு பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்தது கண்டனத்துக்குரியது” என்று பழனிசாமி பேட்டி அளித்தார். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் போதுதான் இவை நடந்தன.
‘தவழ்ந்து காலில் விழுந்து பதவியைப் பிடித்தவர் பழனிசாமி’ என்று அண்ணாமலையே கிண்டல் அடித்தார். தான் சொன்னது சரிதான் என்றார் அண்ணாமலை. இவ்வளவு தான் பழனிசாமிக்கு பா.ஜ.க. தரப்பில் இருந்த மரியாதை ஆகும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தது. பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது பா.ம.க. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்குப் போய்விட்டது பா.ம.க. ‘அ.தி.மு.க. நாலாக உடைந்து விட்டது’ என்று பா.ம.க. விமர்சனம் செய்தது. அதனால் அவர்களோடு கூட்டணி இல்லை என்கிறது பா.ம.க. 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பா.ம.க.வை தன்னோடு வைத்துக் கொள்ள பழனிசாமி என்னென்னவோ எல்லாம் செய்தார். ஆனால் எதையும் மதிக்கவில்லை பா.ம.க. இவ்வளவுதான் பழனிசாமிக்கு இருந்த மரியாதை ஆகும்.
இப்படி சொந்தக் கட்சியில் - கூட்டணிக் கட்சிகளின் மத்தியில் - பொதுமக்களிடத்தில் செல்லாக்காசு ஆகி வரும் பழனிசாமி வாய்க்கு வந்ததை வார்த்தை என்று உளறிக் கொண்டிருக்கிறார். தோல்வி நமைச்சல், புகைச்சலாக வெளிப்படுகிறது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!