murasoli thalayangam
இத்தகைய பெருமை முரசொலி செல்வத்தை தவிர யாருக்குக் கிடைத்திருக்கிறது? - முரசொலி தலையங்கம் !
முரசொலி தலையங்கம் (12.10.2024)
முரசொலியின் செல்வமே!
முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளை ‘முரசொலி’யின் வளர்ச்சி, வரலாறு, சாதனைகள் அனைத்திலும் கலந்துள்ள மூச்சுக்காற்றாம் முரசொலி செல்வத்தின் மூச்சு அடங்கி இருக்கிறது. அவரது மூச்சும் பேச்சும் அடங்கி இருக்கலாம். ஆனால் அவர் விதைத்த விதை விருட்சமாக வளர்ந்து கொண்டே இருக்கும்.
‘முரசொலி’ செல்வம் யார்? முத்தமிழறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவரா? இல்லை. முரசொலி குடும்பத்தைச் சேர்ந்தவர். கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். செல்வம் என்ற பெயருக்கு முன்னால் ஒட்டி இருக்கும், ‘முரசொலி’ என்ற சொல்லே அவரது வரலாற்றைச் சொல்லும்!
கலைஞர் அவர்கள் ஆசிரியராக இருந்த காலத்தில், துணை ஆசிரியராக முரசொலி மாறன் அவர்கள் இருந்த நேரத்தில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த செல்வம், பகுதி நேரமாக முரசொலியில் பணியாற்ற ஆரம்பித்து முரசொலியை உயிர்ப்புடன் வளர்த்தவர். தன் மூச்சு அடங்கும் கடைசி நிமிடங்கள் வரை முரசொலிக்குப் பங்காற்றினார். அவர் மரணத்தைத் தழுவுவதற்கு இரண்டு நாட்கள் முன்புகூட முரசொலியில் கட்டுரை எழுதிவிட்டு, அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்து வைத்துவிட்டு, கண்ணயர்ந்த நேரத்தில்தான் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.
கலைஞர், முரசொலியைக் கண்ணைப் போலக் காத்தார் என்றால், செல்வமோ அதனை வளர்த்தார். கலைஞர் முரசொலியை படை வீரனாக நடத்திய போது, அவரது எண்ணத்தை வழிநடத்திச் செல்லும் படைத்தளபதியாக இருந்தார் செல்வம். முரசொலியின் ஆசிரியராக கலைஞருக்குப் பிறகு முரசொலி மாறன் இருந்தார். அவர் ஒன்றிய அமைச்சரான பிறகு, அந்தப் பொறுப்பிற்கு செல்வம் வந்தார். அதற்கான தகுதி அவரிடம் இயல்பாகவே இருந்தது. தி.மு.க.வின் கொள்கை முரசாக மட்டுமல்ல, தி.மு.க.வுக்கு எதிரான அவதூறுகளைத் தடுத்து நிறுத்தும் கேடயமாகவும், பதிலடி தரும் வாள் ஆகவும் முரசொலியை முன்நிறுத்தினார். செய்திகள், கட்டுரைகளை எல்லாம் உருவாக்கும் பொறுப்பில் இருந்ததால் முரசொலியின் பல செய்திகளை அவர் அறிந்திருந்தார். பல நிகழ்வுகளை நினைவில் வைத்திருந்தார். அதனால்தான், “முரசொலி செல்வம் முரசொலிக்கு ஆசிரியர் மட்டுமல்ல, எனக்கு வழிகாட்டியாகவும் இருக்கக் கூடியவர்’’ எனப் பதிவு செய்திருக்கிறார் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்புக்கு வந்த தொடக்க காலத்தில் ‘செல்வத்திடம்தான் மாநாட்டு உரைகளைத் தயார் செய்வது தொடர்பாக ஆலோசனை கேட்பேன்’ என்று தலைவரே சொல்லி இருக்கிறார். உரையில் என்னென்ன கருத்துக்கள் இடம்பெற வேண்டும்; அதனை எப்படிச் சொல்ல வேண்டும் என்று பயிற்சி கொடுத்தவர் செல்வம்.
ஆதித்தனார் எழுதிய ‘இதழாளர் கையேடு’தான் ஊடகத் துறைக்கு வருகிறவர்களுக்கு வழிகாட்டி எனச் சொல்வார்கள். அதே போல ஒரு வழிகாட்டிதான் ‘முரசொலி – சில நினைவலைகள்’ நூலும்! ஊடகத் துறையில் நுழைபவர்களுக்கு அது ஒரு ஆத்திசூடி. அனுபவங்களின் களஞ்சியம்: செய்திகளின் குவியல்; வரலாற்றுத் தகவல்களின் மலை எனப் பெருமைகளைக் கொண்ட அந்தப் புத்தகம் ஊடகத் துறையினருக்கான அற்புதமான பாடப்புத்தகம். இந்தி எதிர்ப்புப் போராட்டம், நெருக்கடி நிலைப் பிரகடனம், எம்.ஜி.ஆர், காலத்து அடக்குமுறைகள், ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து நடந்த தாக்குதல்கள், ஜெயலலிதாவின் அத்துமீறல்கள் என வரலாற்று நிகழ்வுகளை அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். அதனால்தான் அதனை ’செல்வம் கொடுத்த செல்வம்!’ என மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்திருக்கிறார்.
கொள்கைவாதி என்பதைத் தாண்டி பத்திரிகையாளராக தன் கடமையை துணிச்சலோடு செய்தவர். அதற்காகவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைக்கு ஆளானார். இரண்டு ஆட்சியிலும் செல்வம் கைது செய்யப்பட்டார். திருச்செந்தூர் கோவில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மர்மக் கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை எம்.ஜி.ஆர். அரசு வெளியிடாமல் பதுக்கி வைத்திருந்த போது, எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர் வெளியிட்டார். இதனால் கோபடைந்த எம்.ஜி.ஆர். அரசு, முரசொலி அலுவலத்துக்குள் சோதனை நடத்தியது. அரசு அதிகாரி சதாசிவம், கலைஞர் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோரோடு சேர்ந்து செல்வத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முன்னும் பின்னும் நடக்காத நிகழ்வு; செல்வத்தை கூண்டில் ஏற்றி தண்டித்தது. செய்யாத தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி நின்றார். தி.மு.க. உறுப்பினர் பரிதி இளம்வழுதி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார் சபாநாயகர். முற்பகலில் நடந்த உரையை பிற்பகலில் நீக்கினார் சபாநாயகர். முரசொலியின் வெளியூர் பதிப்பு பகல் 2 மணிக்கு முடிக்கப்பட்டதால், அதுவரை நீக்கப்படாத உரையுடன் முரசொலி வெளியூருக்கு அனுப்பப்பட்டது.
‘சபாநாயகர் காலம் தாழ்த்தி எடுத்த முடிவால் வெளியூர் பதிப்பில் செய்தி வெளியாகிவிட்டது’ என முரசொலி ஆசிரியர் செல்வம் கொடுத்த விளக்கத்தை ஏற்காமல் போலீஸார் செல்வத்தை கைது செய்து சபாநாயகர் முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவையின் உரிமையை மீறிய குற்றத்திற்காக அவையின் கண்டனத்தைப் பெற சட்டப்பேரவை கூடும் நாளில் நேரில் ஆஜராக முரசொலி செல்வத்துக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனை கலைஞரிடம் காட்டினார் செல்வம். “சென்று வா. ஆனால், உன் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து செல்’’ என ஆலோனை கொடுத்தார் கலைஞர். சட்டமன்றத்தில், நீதிமன்றத்தில் இருப்பது போன்ற சிறப்புக் கூண்டு தயாரிக்கப்பட்டு செல்வத்தை கூண்டில் ஏறி நிற்க வைத்தனர். ‘இந்தியத் துணைக் கண்டத்தில் இத்தகைய பெருமை யாருக்குக் கிடைத்திருக்கிறது? எந்தப் பத்திரிகையாளருக்கு இந்தப் பதவி கிடைத்திருக்கிறது? பூனைக்கல்ல. புலிக்கும். சிங்கத்துக்கும்தான் ‘கூண்டு’ கிடைக்கும். எங்கள் சிங்கமே! செல்வமே! சென்று வருக!’ என கழக முன்னோடி இராம. அரங்கண்ணல் வாழ்த்தினார். கலைஞரோ “கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன்” என அகமகிழ்ந்தார்.
திராவிட இயக்கத்தின் தீரமிகு தளகர்த்தரான சர் ஏ.டி.பன்னீர் செல்வம் நினைவாக ‘செல்வம்’ என்று பெயர் சூட்டியது முதல், அண்ணா அவர்கள், ‘செல்வா’ என்று செல்லமாக அழைப்பது வரை, அனைத்தையும் சொல்லி மகிழ்ந்தார் கலைஞர். அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபை நடவடிக்கைகள் குறித்து எழுதியதற்காக 2003 நவம்பரில் முரசொலி, இந்து பத்திரிகையாளர்கள் 6 பேருக்கு 15 நாள் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் செல்வமும் ஒருவர். கலைஞரும், மாறனும் இல்லாத நிலையில், அவர்களது இடத்தில் இருந்து முரசொலியை வழிநடத்தக் கூடியவராக செல்வம் இருந்தார். அன்றைய முரசொலியில் என்னென்ன வர வேண்டும், நம்மை விமர்சிப்பவர்களுக்கு என்ன மாதிரியான பதிலடி தர வேண்டும் என கவனத்தோடு களமாடி வந்தார். அவரது ‘சிலந்தி’ கட்டுரைகள்; எதிரிகள் பதில் சொல்ல முடியாத மறுப்பாக இருக்கும். இனி சிலந்தியைத் தேடும் ஒவ்வொரு கண்ணும் கண்ணீர் சிந்தும். ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்தும். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? எல்லார்க்கும் ஆறுதல் சொல்லும் முரசொலிக்கு யார் ஆறுதல் சொல்வது?
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!