murasoli thalayangam

“துருப்பிடித்துப் போன மோடியின் கடைசி அஸ்திரம் - ‘CAA’ நப்பாசை நிறைவேறாது”: காட்டமாக விமர்சித்த முரசொலி !

மோடியின் கடைசி அஸ்திரம் !

இதுவரை ஏவிய அனைத்தும் முழுப்பயனைத் தராததால் தனது கடைசி அஸ்திரத்தை ஏவிவிட்டார் பிரதமர் நரேந்திரமோடி. அதுதான் குடியுரிமைச் சட்டம் ஆகும். அதுவும் துருப்பிடித்துப் போன பழைய அஸ்திரம் என்பதால் இதுவும் பலனைத் தரப்போவது இல்லை.

குடியுரிமைச் சட்டமானது இந்தியாவுக்குள் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தத்தான் பயன்படுமே தவிர, அமைதியை ஏற்படுத்தாது. தனது பதவியை விட்டு இறங்கும் போது தீராப் பழியைப் பெற்றுக் கொண்டு விடைபெறப் போகிறார் மோடி. பதவிக் காலம் முடியும் நேரத்தில் பதற்றம் காரணமாக, எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதானது, அவர் எத்தகைய குழப்பத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆகும். சுருக்கமாக சி.ஏ.ஏ. அதற்கு 2024 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடுகிறது பா.ஜ.க. ஐந்து ஆண்டுகள் ஏன் ஆனது? எதற்காக அது அமுக்கி வைக்கப்பட்டு இருந்தது? மக்களின் எதிர்ப்பு காரணமாக அமுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது தேர்தல் வரப் போவதால், அதைக் கையில் எடுப்பதன் மூலமாக வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்தப் பார்க்கிறது பா.ஜ.க.

« இசுலாமியர்களையும்

« இலங்கைத் தமிழர்களையும் கைவிடும் சட்டம்தான் பா.ஜ.க.வின் இந்த குடியுரிமைச் சட்டம். இதனை தொடக்கத்தில் இருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது. மக்கள் மன்றத்தில் அந்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்துகளைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. இதுபோன்ற போராட்டங்களால்தான் அந்தச் சட்டத்தை கையில் எடுக்காமல் வைத்திருந்தார்கள்.

குடியுரிமை வழங்கும் நோக்கம் உன்னதமானது. ஆனால் இன்னார்க்கு மட்டும்தான் குடியுரிமை என்பதுதான் மோசமானது. சிறுபான்மையினரான இசுலாமியரை புறக்கணிக்கும் வகையில், குடியுரிமைச் சட்டத்தையே ஓரவஞ்சனை கொண்ட சட்டமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிவிட்டது. இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கிறது இந்தச் சட்டம். மதத்தின் பேரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது அரசியலமைப்புச் சட்டம். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஆனால் மதச் சிறுபான்மை மக்களைப் புறக்கணிக்கும் ஒரு சட்டத்தை எப்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்?

இந்தியாவுக்குள் யார் எல்லாம் வரலாம், வந்தால் யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த சட்டம் வரையறுக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். அனைவரும் வரலாம் என்று சொல்லவில்லை. அந்த நாட்டைச் சேர்ந்த இசுலாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். இசுலாமிய சிறுபான்மையினரை எதற்காக புறக்கணிக்க வேண்டும்?

பாகிஸ்தானில் இருந்து, வங்க தேசத்தில் இருந்து, ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இசுலாமியர் நீங்கலான மற்ற மதத்தவர்கள் வரலாம் என்றால் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்குத் தடை விதித்தது ஏன்? இதுதான் ஈழத்தமிழர்க்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.

ஈழத்தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து முகாம்களிலும் வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் அவர்கள் அபலைகளாக தமிழ்நாட்டில் வந்து தங்கி இருக்கிறார்கள். அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்றால் இலங்கை அண்டை நாடு அல்லவா? மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம் என்றால் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை இந்துக்களாக இந்த மத்திய அரசு நினைக்கவில்லையா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களால் தொல்லைக்குள்ளாக்கப்படும் மற்ற மதத்தவரைக் காப்பாற்றுவது இச்சட்டத்தின் நோக்கம் என்றால், பவுத்த சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி பா.ஜ.க. அரசு கவலைப்படாதது ஏன்? ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்களாக இருந்தாலும் அவர்களது சமய நம்பிக்கை இந்து, சைவம் தானே? ‘இந்து மதத்தைக் காப்பாற்ற வந்தவர்களாக தங்களை உருவகப்படுத்திக் கொள்ளும் பா.ஜ.க. அரசு, இலங்கை இந்துக்களைக் கைவிட்டது ஏன்? இதுவே அவர்களது போலித்தனத்தைக் காட்டவில்லையா?

தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1983ம் ஆண்டு வந்தவர்கள் முதல் 2002ம் ஆண்டு வந்தவர்கள் வரை இதில் இருக்கிறார்கள். இவர்களால் மீண்டும் இலங்கைக்குச் செல்ல முடியாது. இலங்கையில் போர் முடிந்தாலும் அங்கு தமிழர்கள் உரிமை பெற்றவர்களாக வாழும் நிலைமை ஏற்படவில்லை. தமிழர்கள் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படாத ஆட்சிதான் அங்கு உருவாகி இருக்கிறது.

எனவே, முப்பதாண்டு காலமாக இங்கு அகதிகளாக வந்து தங்கி இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவதுதானே சரியானது? அவர்கள் மீண்டும் இலங்கைக்குச் செல்ல விரும்பவில்லை. அவர்களது விருப்பத்துக்கு மாறாக அனுப்பவும் முடியாது. இதனை விட தமிழினத்துக்கு துரோகம் இருக்க முடியுமா? தமிழனின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் இருக்க முடியுமா?

சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை விதைப்பதன் மூலமாக வாக்கு அறுவடை செய்வதே இதன் நோக்கம் ஆகும். இப்படி எல்லாம் எந்தப் பெரும்பான்மை மக்களும் நினைக்க வில்லை. தாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் பெரும்பான்மை மக்கள் நினைக்கிறார்களே தவிர, அடுத்தவர்கள் வாழக் கூடாது என்று நினைப்பது இல்லை. ஆனால் அப்படி ஒரு எண்ணத்தை விதைத்து, பெரும்பான்மை மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறது பா.ஜ.க. நாடு அமைதியாக இருப்பதை விரும்பவில்லை பா.ஜ.க. குழப்பங்களை ஏற்படுத்துவதன் மூலமாக அப்படியாவது வாக்கு கிடைத்துவிடுமா என நப்பாசைப்படுகிறது பா.ஜ.க. அதுவும் கைவிடப் போகிறது என்பதுதான் உண்மை.

Also Read: “பிரதான் மந்திரி புஸ்வானத் திட்டம் : பெண்ணின் அடையாளம் சமையலறை சிலிண்டர்தானா?” - முரசொலி விமர்சனம் !