murasoli thalayangam

“காவிரி உரிமையை அடகுவைத்த அதிமுக அரசு - புளுகு மூட்டையை அவிழ்த்த பழனிசாமி” : வெளுத்து வாங்கிய முரசொலி!

'காவிரிப் பிரச்சினைக்காக துணிச்சலாகச் செயல்பட்டது அ.தி.மு.க. அந்தத் துணிச்சல் உங்களுக்கு எங்கே போனது?' என்று கேட்கிறார் பழனிசாமி. நாடாளுமன்றத்தையே 22 நாட்கள் நடுங்க வைத்ததாம் அ.தி.மு.க. புதிய புளுகு மூட்டையை அவிழ்த்திருக்கிறார் பழனிசாமி!

நாடாளுமன்றத்தை இவர்கள் காவிரிப் பிரச்சினைக்காக முடக்கவில்லை. நாடாளுமன்றத்தை முடக்கியது பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள்தான். 2018 ஆம் ஆண்டு ரஃபேல் ஊழல் அம்பலம் ஆனது. அதற்கு பதில் சொல்ல பிரதமரை வலியுறுத்தினார்கள் எதிர்க்கட்சிகள். அவர் பதில் சொல்லவில்லை. ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி.களும் பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அப்போது பா.ஜ.க.வின் தொங்கு சதையாக இருந்த அ.தி.மு.க.வை அந்தக் கட்சி பயன்படுத்தியது.

'காவிரிப் பிரச்சினையைச் சொல்லி திசை திருப்புங்கள்' என்று சொன்னார்கள். எனவே அ.தி.மு.க.வும் அதைப் பேசியதே தவிர, இவர்களால் நாடாளுமன்றம் முடக்கப்படவில்லை. 'காவிரி ஆணையத்தை அமைக்காவிட்டால் பா.ஜ.க.வுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வாக்களிப்போம் என்று அ.தி.மு.க. சொல்ல வேண்டும்' என்று சொன்னதற்காக கே.சி.பழனிசாமியை நீக்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி. இந்த துரோக வரலாறு அவருடையது.

காவிரியில் இருந்த உரிமையை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் அடகுவைத்த அரசுதான் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இன்றைக்கு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்று பழனிசாமி சொல்கிறார். ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கும் நிலையை உருவாக்கியதே பழனிசாமிதான்.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதியில்தான் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேரத் தலைவர் நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக முழுநேரத் தலைவர் நியமிக்கவேஇல்லை. நியமிக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு அடம்பிடித்தது. அதனைத்தட்டிக் கேட்காமல் பழனிசாமியின் அரசு தலையாட்டிக் கொண்டுதான் இருந்தது.

"காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மாட்டோம்" என்று உச்சநீதிமன்றத்தில் சொன்ன அரசுதான் பா.ஜ.க. அரசு. உச்சநீதிமன்றம் அதில் உறுதியாக இருந்ததால் அதை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார்கள். அப்படி ஏற்றுக் கொண்டாலும் அதனை தனித்த அதிகாரம் பொருந்திய அமைப்பாக உருவாக்கி விடாமல் தட்டிக் கழித்து வந்தார்கள்.

ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறையின் கிளை அமைப்பாக மாற்றினார்கள். அத்தகைய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒரு நிரந்தர, முழுநேரத் தலைவரைக் கூட நியமிக்காமல் மூன்றாண்டு காலமாக காலம் கடத்தி வந்தது பா.ஜ.க. அரசு. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து, முதன் முதலாக டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதரிடம் 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார்.

ஒன்றிய நீர்வளத்துறை ஆணையரையே, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக கூடுதல் பொறுப்பு கொடுத்திருந்ததை மாற்றி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர, முழுநேர, முழுமையான தலைவரை நியமிக்க பிரதமரை வலியுறுத்தினார் முதலமைச்சர்.இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று சவுமித்ரா குமார் ஹல்தார் இதன் முழுநேரத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

“தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி மேலாண்மை வாரியத்தில் பங்கேற்கும் தங்களது பிரதிநிதிகளின் பெயரை நாளை மாலைக்குள் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மத்திய அரசு நான்கு நாட்களுக்குள் ( 4.10.2016) காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டது. இதனை உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டு போன ஒன்றிய அரசின் வழக்கறிஞர், ஒரு வார காலத்தில் தலைகீழாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

"காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டத்தில் இதற்கான பல்வேறு விதிகள் இருக்கிறது. எனவே இதுகுறித்து உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கே அதிகாரம் இல்லை. எனவே உச்சநீதி மன்றம் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. "ஒரு வாரத்துக்கு முன் ஏற்றுக் கொண்டு, இன்று மாற்றி ஏன் மனு போடுகிறீர்கள்?" என்று நீதிபதிகள் கேட்டார்கள். 'தவறாக ஒப்புதல் தெரிவித்து விட்டதாக' பா.ஜ.க. அரசின் வழக்கறிஞர் சொன்னார்.

'இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று, ஒன்றிய அரசின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் 18.10.2016 அன்றும் சொன்னார். நான்கு மாநில அரசுகளும் பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார்கள். மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று 9.11.2016 அன்று உச்சநீதிமன்றம் மகத்தான தீர்ப்பை அளித்தது. இதைத் தொடர்ந்து காவிரிப் பிரச்சினையை 2017 ஆம் ஆண்டு ஜூலை 11 முதல் செப்டம்பர் 20 வரையில் மொத்தம் 27 நாட்கள் விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம்.

இதனிடையே ஜெயலலிதா மரணம் அடைந்து பழனிசாமி முதலமைச்சர் ஆக்கப்பட்டு விட்டார். (2017 பிப்ரவரி 14) ஓராண்டு கழித்து 2018 பிப்ரவரி 16 தான் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. அப்போது தமிழகத்தின் தரப்பு வாதங்களை முறையாக, சரியாக வைக்க பழனிசாமியின் அரசாங்கம் தவறி விட்டது.

-தொடரும்

Also Read: பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : “'இந்தியா' கூட்டணியை காஷ்மீரும் வழிமொழிகிறது” - முரசொலி !