murasoli thalayangam

9 ஆண்டுகளில், தான் செய்த எதையும் சொல்லமுடியாததால் வழக்கம் போல 'வடை' சுட்டுள்ளார் மோடி- முரசொலி விமர்சனம்!

முரசொலி தலையங்கம் (22.8.2023)

அள்ளிவிட்ட பிரதமர்

2014

2015

2016

2017

2018

2019

2020

2021

2022 - என ஒன்பது ஆண்டுகளாக ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றிப் பேசி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 2023 ஆகஸ்ட் 15 அன்று அவர் கொடியேற்றிப் பேசுவது பத்தாவது முறையாகும்.

கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் என்ன சாதனைகளை எல்லாம் செய்துள்ளோம் என்று அவர் வரிசைப்படுத்தி இருந்தால் பாராட்டலாம். ஆட்சி முடியப் போகிற காலத்தில் செய்யப் போவதாக பல ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர்.

ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஆட்சி முடிவில் திறப்பு விழாக்கள் செய்ய வேண்டும்.

மோடி இதில் வித்தியாசமானவர். ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெளிநாட்டுப் பயணங்களில் இருந்தார். ஆட்சி முடியப் போகும் போது திட்டங்களை அறிவிக்கிறார். 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை. அதற்கான டெண்டர் விடும் அறிவிப்பு 17.8.2023 அன்று தான் வந்துள்ளது. மோடி ஆட்சி எத்தகைய வேகமும் அக்கறையும் கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று எதையும் சொல்ல அவரால் முடியவில்லை. வழக்கம் போல வார்த்தைகளால் 'வடை' சுட்டுள்ளார்.

* ஆயிரம் ஆண்டு அடிமைத் தனத்தை முடிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

* நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது.

* எல்லா வாய்ப்புகளும் இந்தியாவில் உள்ளது.

* உலகின் புதிய சக்தியாக நாம் பார்க்கப்படுகிறோம்.

* 140 கோடி மக்களையும் நான் கவுரவிக்க விரும்புகிறேன்.

* நமது பன்முகத்தன்மையை உலகம் வியக்கிறது.

* இந்தியாவைப் பாராட்டாத நாடுகளே இல்லை.

* பந்து நம் பக்கம் உள்ளது, வாய்ப்பை தவற விடக் கூடாது.

* அடுத்த 1000 ஆண்டுக்கான அடித்தளத்தை அமைக்க உள்ளோம்.

* ஐந்தாவது இடத்துக்கு பொருளாதாரம் வந்துவிட்டது.

* 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டு விட்டார்கள்.

* ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்பட்டு விட்டது.

* வந்தே பாரத் ரயில் இன்று நாடு முழுவதும் ஓடுகிறது.

- இதை வாசிக்கும் போதே தலை சுற்றுகிறது என்றால், கடந்த 16 ஆம் தேதி 'தினமலரை' முழுமையாக வாசியுங்கள். மூன்று பக்கம் முழுமையாக வாசித்தால் எவ்வளவு பெரிய வடை என்பதையும், அதில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்கலாம்.

ஆட்சி முடிகிற காலத்தில் விஸ்வகர்மா யோஜனாவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியில் திட்டமாம். நகரங்களில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இனிமேல் தான் திட்டம் தீட்டப் போகிறாராம். இலவச வீடு என நினைக்க வேண்டாம். வட்டிக்கு கடன் தர யோசித்து வருகிறாராம். 2022 ஆம் ஆண்டு வீடில்லாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னது இவர் தான்.

நாடாளுமன்றத்தில் பேசி இருக்க வேண்டிய மணிப்பூரைப் பற்றி, நாட்டின் கொடியை ஏற்றி வைத்துப் பேசுகிறார். பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச வேண்டியதை செங்கோட்டையிலா பேசுவது? ஒன்பது ஆண்டுகளாக இந்திய நாட்டை ஆள்வது அவர் தான். ஊழலை ஒழிக்கப் போகிறாராம். அப்படியானால் அவரது ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டதா? ஒன்பது ஆண்டுகளாக அதனை ஒழிக்க முடியவில்லையாம்.

குடும்ப அரசியலை ஒழிக்கப் போகிறாராம். பா.ஜ.க.வில் வாரிசுகள் எவரும் பதவிகளில் இல்லையா? நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினராக இல்லையா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே கட்சியில் இருக்கக் கூடாதா? பா.ஜ.க.வில் இருப்பவர்கள் வேறு கட்சியில் தான் பொறுப்பில் இருக்க வேண்டுமா? இப்படி அபத்தமாக ஒரே உரையை ஒன்பது ஆண்டுகளாக பேசி வருபவரை என்ன சொல்வது?

சமரச அரசியல் அவரை தூங்கவிடாமல் செய்கிறதாம். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தூக்கி அதானிக்குக் கொடுக்கும் போது எதிர்க்கக் கூடாது. இந்தியைத் திணிக்கும் போது இந்தி பேசாத மாநில மக்கள் எதிர்க்கக் கூடாது. குடியுரிமை சட்டம், பொது சிவில் சட்டம் மூலமாக சிறுபான்மை மக்களைப் பிரிக்கும் போது யாரும் எதிர்க்கக் கூடாது. மூன்று வேளாண் சட்டத்தை கொண்டு விவசாயிகளை முடக்கும் போது அதனை எதிர்த்து போராடக் கூடாது.

அவர் மணிப்பூர் போக மாட்டார். கேள்வி கேட்கக் கூடாது. அவர் நாடாளுமன்றத்துக்கு வர மாட்டார். அதை யாரும் கேட்கக் கூடாது. அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடனை கண்ணை மூடி ரத்து செய்வார். யாரும் கேட்கக் கூடாது. மக்களுக்கு விரோதமான செயல்பாடுகளைக் கேள்வி கேட்டால் சமரச அரசியலாம். ஒற்றை மனிதரின் போக்கில் விட்டால் அது நியாய தர்மமாம். 1000 ஆண்டுக்கான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறாராம்! 10 என்று போடுவதற்கு பதிலாக 1000 என்று போட்டுவிட்டார்கள் போலும்! 1000 என்று போட முடிவெடுத்த பிறகு 10,000 என்றே போட்டிருக்கலாமே!

ஒன்பது ஆண்டுகளாக சுதந்திர தினத்தன்று அவர் அணியும் டர்பன் மாறி இருக்கிறதே தவிர, இந்தியாவில் வளர்ச்சிக்கான மாற்றம் ஏதுமில்லை. அடுத்த ஆண்டு மாற்றத்துக்கான ஆண்டு மாற்றியாக வேண்டிய ஆண்டு!

Also Read: சென்னை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா?.. காவல்துறை விளக்கம் !