murasoli thalayangam

அண்ணாமலை இலங்கை பயணத்துக்கு பிறகு தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகவின் நாடகம் அம்பலம்..

பா.ஜ.க.வின் இலங்கை நாடகம்!

மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றார் பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன். அவரோடு சேர்ந்து போனார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இரண்டு பேரும் இலங்கைக்குப் போய்விட்டு வந்ததையே பெரிய சாதனையாகச் சொல்லிக் கொண்டார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சினையையே தீர்த்து விட்டதைப் போலவும் - இனி தமிழ்நாட்டு மீனவர் ஒருவரைக்கூட இலங்கைக் கடற்படை எதுவும் செய்யாது என்றும், ஏதோ இலங்கை அதிபரைப் போல முருகனும் அண்ணாமலையும் பேட்டி கொடுத்தார்கள். அவர்கள் பேட்டி கொடுத்த இரண்டு வாரத்துக்குள் தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்துவிட்டது இலங்கை. இதன் மூலமாக இவர்களது இலங்கை நாடகம் அம்பலமாகி இருக்கிறது.

பிப்ரவரி 9 ஆம் தேதி இலங்கை செல்வதற்கு முன்னால் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், ''இலங்கை பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினை குறித்து இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச உள்ளோம்'' என்று சொன்னார். எல்லாத்தையும் முடித்து வைத்து விட்டுத்தான் வருவேன் என்பதைப் போல இருந்தது அவரது பேட்டி.

ரஃபேல் அண்ணாமலை இன்னும் பெரிய உயரத்துக்கு நீட்டி முழக்கினார். ''. இலங்கை மீனவர்கள் பிரச்சினையை பா.ஜ.க. அரசு திறம்பட கையாண்டு வருகிறது. பா.ஜ.க. அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளது" என்று சொன்னார் அண்ணாமலை.

இலங்கைப் பயணம் சென்று விட்டு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை விமானநிலையம் வந்து இறங்கிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், ''சர்வதேச கடல் எல்லையில் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. இலங்கைச் சிறைகளில் நேற்று வரை, ஒரு இந்திய மீனவர்கூட இல்லை." என்று சொன்னார்.

ஆனால் நடந்திருப்பது என்ன?

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். முருகனும் அண்ணாமலையும் போய்விட்டு வந்தபிறகு நடந்துள்ளது. இவர்கள் பிப்ரவரி 13 சென்னை திரும்பினார்கள். பிப்ரவரி 23 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள். பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 23.02.2023 அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள். அவர்களின் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள், என்ஜின் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் காயமடைந்த ஐந்து மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் ஒன்றிய அமைச்சர் முருகன் அல்லவா?

இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். ''இந்தத் தாக்குதல், அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துவதையும்" சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ''இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன், கண்டனத்திற்குரியது'' என்றும் தெரிவித்துள்ளார்.

''நமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும், மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள தாகவும்" மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தங்களது நாடகம் அம்பலம் ஆகிவிட்டது தெரிந்ததும் பூசி மெழுகி பேட்டி அளித்துள்ளார் அமைச்சர் எல்.முருகன்.

''தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க விரைவில் இந்திய - இலங்கை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கும்" என்று சொல்லி இருக்கிறார். இவர்கள் இலங்கை சென்று விட்டு வந்த ஒரே வாரத்தில் தாக்கி கைது செய்கிறார்கள் என்றால், இவர்கள் இலங்கைக்குத்தான் சென்றார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அமைச்சர் போய் பேசியே ஒன்றும் நடக்கவில்லையாம். இனி அதிகாரிகள் பேசப் போகிறார்களாம்?

'தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையாலும், குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானாலும் பாதிக்கப்படுகிறார்கள். “பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் இரு மாநில மீனவர்களையும் பேச வைத்து ஒரே மாதிரியான நடவடிக்கை எடுப்பேன்" என்று 2014 தேர்தலுக்கு முன்னால் இராமநாதபுரம் பொதுக் கூட்டத்தில் மோடி பேசினார். இது 2023. நடந்திருக்கிறதா இந்தச் சந்திப்பு? பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகும் தாக்குதல்கள் தொடர்ந்தது.

'1600 மீனவர்கள் எனது ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்' என்று சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி சென்னையில் பேசினார். அப்படியானால் அவரது ஆட்சிக் காலத்தில் 1600 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொருள். 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார் என்றால், அவரது ஆட்சிக் காலத்தில் 313 படகுகள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

2015 - தாக்குதல்

2016 - தாக்குதல்

2017 - தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார்.

2018 டிசம்பர் - மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் - படகுகள் சேதம்

2020 அக்டோபர் - இலங்கை கடற்படை, மீனவர்களைத் தாக்கியது. 28 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோ வெளியானது.

2021 ஜனவரி - மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

''இந்திய மீனவர்கள் எல்லை மீறி வருகிறார்கள். இந்திய மீனவர்கள் எல்லை மீறி வந்து வடக்கு மாகாண தமிழ் மீனவர்களின் சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள்" என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொக்கரித்து வந்தார். அந்த டக்ளஸ் தேவானந்தாதான், ஒன்றிய அமைச்சர் முருகனுக்கு இலங்கையில் வரவேற்பு கொடுத்தவர். இவர்களது நாடகங்கள் இதன் மூலம் அம்பலம் ஆகவில்லையா?

Also Read: "இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல,ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி!" -முதலமைச்சர் அறிக்கை!