murasoli thalayangam

‘2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்ற பரிமாணங்கள் இவை..’ பிறந்தநாள் நாயகனுக்கு முரசொலி புகழாரம் !

"Stalin is more dangerous than karunanidhi" என்று எச்.ராஜா சொல்வதற்கும் - "Stalin's cultural and political line ages are fluxed Thiruvalluvar and Periyar are the joint, back to back icons on his Dravida pantheon, with the great C.N. Annadurai and Mu.Karunanidhi embossed on its plinth. No chance of his getting lost in it" என்று கோபாலகிருஷ்ண காந்தி எழுதி இருப்பதும் தமிழ் நாட்டு முதலமைச்சர் குறித்த இரண்டு மிக முக்கியமான படப்பிடிப்புகள்.

"கலைஞரை விட இன்றைய முதலமைச்சர் மிக ஆபத்தானவர்" என்கிறார் எச்.ராஜா. யாருக்கு என்பதில்தான் முதலமைச்சரின் அடையாளம் அடங்கி இருக்கிறது.

“ஸ்டாலினின் பண்பாட்டுப் பாரம்பரியமும் அரசியல் பாரம்பரியமும் திருவள்ளுவர் மற்றும் பெரியார் எனும் இருவரால் இணைக்கப்பட்டது. அண்ணா, கலைஞர் எனத் தொடரும் திராவிட இயக்கப் பெருந்தலைவர்கள்தான் அவரது பாரம்பர்யத்தின் அடித்தளத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றனர். ஸ்டாலினுடைய சிந்தனை உறைவிடம் இவை ஒன்றிணைந்தது. அதில் அவர் தவறிப் போவதற்கான வாய்ப்பே இல்லை" - என்று சொல்லி இருப்பவர் சாதாரண மனிதரல்ல. அண்ணல் காந்தியடிகளின் பேரன் அவர். அதுமட்டுமல்ல, இராஜாஜியின் பேரனும் அவர். காந்தியடிகளின் நான்காவது மகன் தேவதாஸ் காந்திக்கும் இராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் பிறந்தவர் இவர். மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர்.

எச்.ராஜா கண்ணுக்கு எதிரியாகவும் கோபாலகிருஷ்ண காந்தியின் கண்ணுக்கு திருவள்ளுவர் - பெரியார் - அண்ணா - கலைஞர் வரிசையில் சொல்லத் தக்கவராகவும் தமிழ்நாடு முதலமைச்சர் - திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார் என்பதையும் அறிவதில்தான் முதலமைச்சரின் பெருமை அடங்கி இருக்கிறது.

1. திராவிட மாடல்

தனது ஆட்சியின் இலக்கணமாக “திராவிட மாடல்' என்பதை அறிவித்தார் முதலமைச்சர். சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இந்த திராவிட மாடல் கோட்பாட்டை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். வளர்ச்சியின் இலக்கணத்தையே பகுத்தாய்ந்து சொன்னார். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

“பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்" என்றார் முதலமைச்சர். இன்று தீட்டப்பட்டு வரும் திட்டங்களும் இந்த ஐந்தையும் சம அளவில் கலந்து உருவாக்கப்படுவதாக அமைந்துள்ளன!

2. முன்னேறும் தமிழ்நாடு

தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது தமிழ்நாடு. அதேபோல் அண்மையில் "ஸ்டார்ட் அப் இந்தியா" வெளியிட்ட தரவரிசைப் பட்டியலிலும் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக "லீடர்" அங்கீகாரத்தினை பெற்றுள்ளது தமிழ்நாடு.

ஒட்டுமொத்த வளர்ச்சியில், பொருளாதாரத்தில், உள்கட்டமைப்பில், சுகாதாரத்தில், தூய்மையில், கல்வியில், சட்டம் ஒழுங்கில், சுற்றுச்சூழலில், தொழில் முனைப்புகளில் என அனைத்திலும் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டு இருக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

3. இந்தியா முழுமைக்கும் சமூகநீதி

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று தீர்ப்பு அளித்தது. இதனை ஒன்றிய அரசு அமல்படுத்தவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு இதனைக் கண்டித்தவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள். மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீட்டின் அளவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடாக இருந்தாலும், பட்டியலின இடஒதுக்கீடாக இருந்தாலும் அமைய வேண்டும் என்பதே அக்கூட்டத் தீர்மானத்தின் இறுதி முடிவு ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ததும் தி.மு.க.வே. இந்த நிலையில் வேறு வழியில்லாமல் 27 சதவிகிதத்துக்கு தலையாட்டியதுதான் பா.ஜ.க. அரசு.

4.மாநில சுயாட்சி முழக்கம்

நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி, " இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. "india that is bharat shall be a union of states" என்றுதான் இருக்கிறது. அதைத்தான் முதலமைச்சர் அவர்கள் பயன்படுத்துகிறார்களே தவிர இல்லாததை அல்ல. மாநில அரசுகளை மதிக்க வேண்டும், அவர்களது விருப்பங்களை நிறைவேற்றித் தரவேண்டும், கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம். அதற்கு முரணானவை அனைத்தையும் நேருக்கு நேராகக் கண்டிக்கிறார் முதலமைச்சர். பிரதமர் முன்னிலையில் ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டுகள் வைத்தார். ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதுகிறார். சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்.

5. கொள்கை அரசியல்

வார்த்தைக்கு வார்த்தை - சொல்லுக்குச் சொல் - கேள்விக்கு கேள்வி எனப்படும் விதண்டாவாத அரசியலை முதலமைச்சர் செய்யவில்லை. கொள்கை அரசியலை மட்டுமே செய்கிறார். கொள்கை பூர்வமான கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கிறார். அக்கப்போர் அரசியலுக்கு இடமளிப்பது இல்லை. 'மக்களுக்கு நல்லது செய்யவே நேரமில்லை, இதில் இவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு எங்கே நேரம்?' என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுகிறார். 'வாழ்க வசவாளர்கள் என்பது அவரது பாணியாக இருக்கிறது. அவரை வசவு செய்தால் பெரிய ஆள் ஆகலாம் என்று நினைப்பவர் நினைப்பில் மண்ணைப் போடுகிறார்.

6.மீட்டெடுக்கப்படும் இளைய சக்திகள்

நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, கல்லூரிக் கனவு. நம் பள்ளி நம் பெருமை, பள்ளி மேலாண்மைக் குழுக்கள், ஒலிம்பிக் தங்கப் பதக்க வேட்டை, முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பை - போன்றவை தமிழ்நாட்டின் இளைய சக்தியை மீட்டெடுக்கும் செயல்கள் ஆகும்.

படித்தவர்களுக்கு வேலை இல்லை என்பதை விட, வேலைக்குத் தகுதியான இளைஞர்கள் இல்லை என்பது சில தொழில்களைப் பொறுத்தவரையில் உண்மையான நிலைமையாக இருந்தது. அதனை மாற்றவே ‘நான் முதல்வன்' திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கினார்கள். அமைச்சர் உதயநிதி அவர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் துறையின் செயல்பாடு என்பது தமிழ்நாட்டு இளைஞர்களை புதிய புத்தெழுச்சி கொள்ள வைத்துள்ளது. கல்வியும் அறிவும் விளையாட்டுத் திறனும் உடல் வலிமையும் இணைந்தால் தமிழ்நாட்டு இளைஞர்களது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இவை சரியாகப் புகட்டப்பட்டால் பிரிவினை எண்ணங்கள், போதை போன்ற தவறான பழக்க வழக்கங்களில் இருந்து இளைஞர்கள் செல்லாமல்; தடுக்கப்படுவார்கள்.

7. இந்தியாவை மீட்கும் பயணம்!

மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை. சமதர்மத்தை, சமூக நீதியை வலிமைப்படுத்த இந்தியா முழுமைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவைப்படுகிறார். காஷ்மீரத்து பரூக் அப்துல்லா முதல் தென் முனையில் பினராயி விஜயன் வரை அவரை அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவை மீட்கும் பயணத்தில் முக்கியப் பங்கு ஆற்ற இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இரண்டாண்டுகளில் திராவிட நாயகன் அவர்கள் பெற்ற பல்வேறு பரிமாணங்கள் இவை. இன்று பிறந்தநாள் காணும் திராவிட நாயகன் - தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரை வாழ்த்துகிறோம்!

Also Read: கணவரை கொலை செய்து விட்டு கணவர் நீண்ட நாள் வாழ விரதம் மேற்கொண்ட பெண்கள்.. உ.பி சிறையில் நடந்த விசித்திரம்