murasoli thalayangam

பணமதிப்பிழப்பு: ஒன்றிய அரசை Left Right வாங்கிய நீதிபதி நாகரத்னாவின் மகத்தான வரலாற்று தீர்ப்பு: முரசொலி!

முரசொலி தலையங்கம் (04-01-2023)

மாறுபட்ட தீர்ப்பல்ல அது!

பெரும்பான்மை நீதிபதிகள் எடுக்கும் முடிவுடன் முரண்பட்டு அளிக்கப்படும் தீர்ப்பானது, ‘மாறுபட்ட தீர்ப்பு’, ‘முரண்பட்ட தீர்ப்பு’ என அழைக்கப்படுகிறது. அத்தகைய மாறுபட்ட தீர்ப்பானது மகத்தான தீர்ப்பாக வரலாற்றில் இடம்பெறும். அந்த வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா அளித்துள்ள தீர்ப்பானது மகத்தான தீர்ப்பாக அமைந்துள்ளது. அதனை விட முக்கியமாக அவர் எழுப்பியுள்ள கேள்விகள் இன்றைய பொதுவெளியில் பேச வேண்டியவையாக உள்ளன.

பணமதிப்பிழப்பு தொடர்பாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் வழங்கிய தீர்ப்புக்கு நீதிபதிகள் அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். “பண முடக்கம் மேற்கொள்ளப் பட்டதை திருப்பி மாற்றியமைக்க இயலாது என்றும், பண முடக்கம் மேற்கொண்ட முறை குறைபாடுடையது அல்ல” என்றும் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. “பணமுடக்கம் மேற்கொண்டதன் நோக்கம் எட்டப்பட்டதா இல்லையா என்பதை பார்ப்பது பொருந்தாது” என்றும் பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். ‘‘நிர்வாக நடைமுறைப்படி பணமுடக்கம் மேற்கொண்டது தவறு” என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ‘‘இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார். ‘‘24 மணி நேரத்தில் எப்படி முடிவு எடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய அவர், ‘ஒன்றிய அரசின் பதிலுக்கும், ரிசர்வ் வங்கியின் பதிலுக்கும் அதிக முரண்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார். ‘‘பண மதிப்பிழப்பால் பொதுமக்கள் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகினர்’’ என்றும் அவர் கூறினார். பணமுடக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்ற அவர், பணமதிப்பிழப்பு விளைவுகளை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டதா என்று கேள்வி எழுப்பினார். ஒரு அரசாணை மூலம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்ததை ஏற்க முடியாது என்றும், பண மதிப்பிழப்பு அரசாணை சட்டவிரோதமானது என்றும் நீதிபதி நாகரத்தினா தெரிவித்தார்.

மக்கள் அடைந்த துன்பங்களை நீதிபதி பி.வி.நாகரத்னாவின். தீர்ப்பு பேசுகிறது. இதுதான் மிக முக்கியமானது. ஒன்றிய அரசுக்கு இந்த நடவடிக்கையை செய்வதற்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்று மற்ற நீதிபதிகளின் தீர்ப்பு சொல்கிறது. ஆனால் மக்களைக் கவனிப்பதாக இருக்கிறது நீதிபதி பி.வி.நாகரத்னாவின் தீர்ப்பு.

* இந்த நடவடிக்கையால் மக்கள் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகினர் என்று நீதிபதி நாகரத்னா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி இன்னலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களில் வேதனைகளை இந்த தீர்ப்பு பேசுகிறது.

* இந்த சட்டம் எந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது என்று சொல்லப்பட்டதோ, அந்த நோக்கத்தை பணமுடக்கம் நிறைவேற்றவில்லை என்பதையும் நீதிபதி நாகரத்னா வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சட்டத்தின் நோக்கமும், பயன்பாடும் முக்கியம் என்பதை அவரது தீர்ப்பு வலியுறுத்தி இருக்கிறது. பின்னர் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளாலும் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை. நாடு முழுக்க ஏராளமான கள்ள நோட்டுகள் இருப்பதாகச் சொல்லப்பட்டுத்தான், அதனை ஒழிக்கத்தான் இதனைச் செய்தார்கள். இதனை நீதிபதியும் வேறுமாதிரியான ஒரு கேள்வியாகக் கேட்டுள்ளார். ‘‘98 சதவிகிதம் பேர் முறையாக ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டுவிட்டார்களே?’’ என்பது நீதிபதியின் கேள்வி.

* ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை நீதிபதி நாகரத்னா கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார். பணமுடக்கத்தால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை ரிசர்வ் வங்கி ஆலோசித்ததா என்று தெரியவில்லை என்று கேட்டுள்ளார் நீதிபதி. அரசாங்கம் சொல்வதும் ரிசர்வ் வங்கி சொல்வதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்ற மறுநாளே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதைக் கேள்வி எழுப்பினார். ‘‘24 மணி நேரத்தில் எப்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் கேட்டுள்ளார்.

* இது தொடர்பாக ஏன் சட்டம் நிறைவேற்றவில்லை என்பது மிகப்பெரிய கேள்வி. இதனை நீதிபதி நாகரத்னா கேட்டுள்ளார். அவசர சட்டம் போட்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார் நீதிபதி. நிர்வாக நடை முறைப்படி பணமுடக்கம் மேற்கொண்டது தவறு என்றும் நாடாளுமன்றம் மூலம் சட்டம் இயற்றி அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். இதற்கு முன்னால் இரண்டு முறை பணமதிப்பிழப்பு இந்தியாவில் நடந்துள்ளது. இரண்டு முறையும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பங்கு குறித்து அவர் பேசியது, மிகமிக முக்கியமான பகுதி ஆகும்.

*நாடாளுமன்ற நடைமுறைப்படி பண முடக்கம் மேற்கொண்டிருந் தால்தான் அது ஜனநாயகத்துக்கு உட்பட்டதாக இருக்க முடியும்.

இது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் முன் விவாதம் நடந்திருக்க வேண்டும் என்பது நீதிபதியின் வரிகள்.

* ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 26(2)இன்படி பணமதிப்பு இழப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதை இவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஒன்றிய அரசுக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் இல்லை என்பதையும் any all ஆகிய இரண்டு சொற்களையும் வைத்து விளக்கி உள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை மவுனிக்க வைத்தது பா.ஜ.க. அரசு. நாடாளுமன்றத்தின் ஜனநாயகச் செயல்பாடுகளை அனைத்து பிரச்சினைகளிலும் முடக்கி வருகிறது பா.ஜ.க. எனவே, நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பின் முக்கியமான வரிகள், இந்த பிரச்சினைக்கு மட்டுமல்ல எந்தப் பிரச்சினைக்கும் பொருத்தமானது ஆகும். பக்கம் 117 முதல் 124 வரை அவர் எழுதியுள்ளவை மிகமிக முக்கியமானவை.

இவை அனைத்துக்கும் மேலாக நீதிமன்றத்துக்கே ஒரு முக்கியமான அறிவுரை இந்தத் தீர்ப்பில் இருக்கிறது. ‘’நீதிமன்றம் என்பது பொருளாதாரம் அல்லது நிதி தீர்ப்புகளின் அடிப்படையில் பண மதிப்பிழப்பை அணுகக் கூடாது. என்பதுதான் அது.

எனவே இது மாறுபட்ட தீர்ப்பல்ல, மகத்தான தீர்ப்பு!

Also Read: 6 ஆண்டுகள் கடந்தும் தொடரும் மர்மம்.. பணமதிப்பிழப்பால் நாட்டில் கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா?: முரசொலி!