murasoli thalayangam

உயர்ஜாதி பணக்காரர்களுக்காகவே 10% இடஒதுக்கீடு.. வரலாறு திரும்பட்டும்: தீர்ப்புகள் திருத்தப்படட்டும்!

இன்றைய முரசொலி தலையங்கம் (11.11.2022)

சமூகநீதிக்கு உலை வைக்கலாமா? -2

இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை அடைவதே தவிர பொருளாதார நீதியல்ல” என்றும் தி.மு.க. வாதிட்டது!

‘‘சமூகசமத்துவத்தை அடைய இடஒதுக்கீடு ஏற்படுத்தினால் மட்டும்தான் அது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமே தவிர, பொருளாதாரக் காரணிகளை ஏற்படுத்துவதால் அதனை சரி செய்ய முடியாது. இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. பொது நிர்வாகம் அல்லது கல்வி ஆகியவற்றை அணுகிட முன்பு தடை செய்யப்பட்ட மக்களின் வகுப்புக்கு பாகுபாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் உருவானதுதான் சமூகநீதியாகும். ஒருவர் தனது பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் சாதியினால் ஆன சமூகநிலையை மாற்ற முடியாது. இந்த பாகுபாட்டை உயர் ஜாதியினர் அனுபவிக்கவில்லை.

இடஒதுக்கீடு எனும் கருத்து நூற்றாண்டுகளின் பாகுபாட்டினை நிவர்த்தி செய்து, சமூகநீதி அடைந்து, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் பங்கேற்புக் கொள்வது என்று மட்டுமே கொள்ள வேண்டும்” என்று தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதங்களை வைத்தார்.

உயர்ஜாதி ஏழைகள் என்ற வகைப்பாடே நியாயமான வகைப்பாடு அல்ல என்று வாதிட்டது தி.மு.க. இப்போது ஏழையாக இருப்பவர், முன்பு ஒரு தலைமுறைக்கு முன்னர் வளமாக இருந்திருக்கலாம். அப்படியானால் அவர்களை எப்போது எந்த வகையில் வைப்பீர்கள்?

சமூகநீதிக்கும், பொருளாதார நீதிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் கேசவானந்த பாரதி வழக்கு –

பொருளாதார அளவுகோல்கள் படி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்பதைச் சொல்லும் இந்திரா சாஹ்னி வழக்கு- –

பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் வகைப்படுத்துவது ஒரே மாதிரியான வகுப்பாக இருக்க முடியாது என்று சொல்லும் அசோக்குமார் தாகூர் வழக்கு –

–ஆகிய பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு வாதங்கள் வைக்கப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டத்தில் 15 -4, 16- 4 ஆகியவை வரலாற்றுப் பாகுபாட்டை ஈடு செய்ய ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டையே சொன்னது. ஆனால் இவர்கள் முன்னேறிய சாதியினரை வறுமையில் இருந்து உயர்த்துவதற்காக என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டையே மாற்றிவிட்டார்கள். சமூகத்தில் பங்கு பெறவும், கல்வியில் பங்கு பெறுவதற்குமான நீதியை, வறுமையில் இருந்து வெளியேறுவதற்கான பாதையாக மாற்ற நினைக்கிறார்கள்.

வறுமைக்கோட்டில் இருப்பவர்களுக்காக நீதி செய்கிறோம் என்றால், வறுமைக்கோட்டில் உயர்ஜாதியினர் மட்டும்தான் இருக்கிறார்களா? மற்ற ஜாதியினர் இல்லையா? இந்தக் கேள்வியை உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட்டின் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது.

‘‘நாடு முழுவதும் 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளார்கள். இதில் பட்டியலினத்தவர் எண்ணிக்கை 7.74 சதவிகிதம் ஆகும். அதாவது அந்த சமுதாய மக்களில் 38 சதவிகிதம் பேர் வறுமையில் உள்ளனர். பழங்குடியினரில் 4.25 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். அதாவது அந்த சமுதாய மக்களில் 48 சதவிகிதம் பேர் வறுமையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோரில் 13.86 கோடிப்பேர் வறுமையில் இருக்கிறார்கள். அதாவது அந்த சமுதாயத்தில் 33.1 சதவிகிதம் பேர் வறுமையில் இருக்கிறார்கள்.

இதேபோல் பொதுப்பிரிவினரில் 5.5 கோடிப் பேர் வறுமையில் இருக்கிறார்கள். அதாவது 18.2 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். அப்படியானால் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டில் மற்ற பிரிவினரைச் சேர்க்காதது ஏன்? அதனால் இந்த 10 சதவிகித இடஒதுக்கீடு பாரபட்சமானது. இதில் சமத்துவம் இல்லை” என்று தனது தீர்ப்பில் எழுதி இருக்கிறார் நீதிபதி ரவீந்திரபட். இந்தத் தீர்ப்பை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்றால், அனைத்து நலிந்த பிரிவினருக்கும் தந்திருக்க வேண்டும். அதில் உயர் ஜாதி என்ன உயர் ஜாதி?

அப்படியாவது உயர் ஜாதி ஏழைகள் பலனடைவார்களா என்று பார்த்தீர்கள் என்றால் அதுவும் இல்லை. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8 லட்சம் என்றால் மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர் ஆவார். மாதம் 65 ஆயிரம் ஊதியம் பெறுபவர் ஏழையா? இந்த இடஒதுக்கீடானது உயர்ஜாதியில் உள்ள பணக்காரர்கள் அனுபவிக்க மட்டுமே பயன்படப் போகிறது. எனவே எந்த வகையில் பார்த்தாலும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டம் சமூகநீதிக்கு எதிரானது. சமத்துவத்துக்கு எதிரானது. ஏழைகளுக்கு எதிரானது. அந்தக் கட்சிக்கு மட்டுமே சாதகமானது. உயர்ஜாதியினரை அரசியல் ரீதியாக ஏமாற்றுவதற்கு இந்தச் சட்டம் பயன்படலாமே தவிர வேறு பயன் இல்லை!

அதனால்தான், ‘சமூகநீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிராக பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குரல் எழுப்பி உள்ளார்கள். சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணில் இருந்து சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு முதல் கட்டமாக தமிழக சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டியுள்ளார் முதலமைச்சர்.

சட்டமாக இருந்தாலும், தீர்ப்புகளாக இருந்தாலும் மக்கள் எண்ணப்படி திருத்தப்பட்டுள்ளதே கடந்த கால வரலாறு ஆகும். வரலாறு திரும்பட்டும். தீர்ப்புகள் திருத்தப்படட்டும்

Also Read: 10% இடஒதுக்கீடு: “தகுதி போச்சு, திறமை போச்சு என்று சொன்னவர்கள், இப்போது மௌன சாமியாராக இருக்கிறார்கள்?"