murasoli thalayangam

"விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகம் என்பதற்கு அடையாளம் வ.உ.சி-யின் முகம்": முரசொலி புகழராம்!

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகம் என்பதற்கு அடையாளமாகக் காட்டக் கூடிய திருமுகம் வ.உ.சிதம்பரனாரின் முகம்! கப்பலோட்டிய தமிழன்,- செக்கிழுத்த செம்மல், - தியாகத்தின் திருவுரு வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் ( செப்டம்பர் -5) இன்று. அதுவும் 151 ஆவது பிறந்தநாள். அவரது 150 ஆவது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட முதலமைச்சர் அவர்கள் 14 முக்கியமான அறிவிப்புகளைச் செய்தார்கள். அதுவும் சட்டமன்றத்திலேயே செய்தார்கள். அவை கடந்த ஆண்டில் செயல்வடிவம் பெற்றன.

வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்தநாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால், வ.உ.சி.யின் நூற்றாண்டு விழாவை (1972 ஆம் ஆண்டில்) சிறப்பாகக் கொண்டாடியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்களை அழைத்து வந்து விழாவை நடத்தினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

1975 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட கப்பல் தளங்களுக்கு வ.உ.சி. அவர்களின் பெயர் வைக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு வ.உ.சி.யின் அனைத்து நூல்களையும் நாட்டுடைமை ஆக்கினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

இரண்டாம் உலகத் தமிழ்நாடு நடந்தபோது பத்து தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதில் வ.உ.சி. அவர்களின் திருவுருவச் சிலையும் ஒன்று. இப்படி செக்கிழுத்த செம்மலின் புகழ் பாடுவதை பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அரசு தொடர்ந்து செய்து வந்துள்ளது. அதன் வழித்தடத்தில் இன்றைய முதலமைச்சர் அவர்களும் செயல்பட்டு வருகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமல்ல; தமிழ்ச் சமூகத்தில் எழுந்த பிற அரசியல் இயக்கங்களுக்கும் தூண்டுகோலாக முன்னோடியாக இருந்தவர்தான் வ.உ.சி. அவர்கள்.

பிரிட்டிஷாருக்கு எதிராக வீதியில் நின்று போராட்டங்கள் நடத்தி வந்த காலத்தில் பிரிட்டிஷாரின் பொருளாதார வலிமையைக் குலைக்கும் நோக்கத்துடன் சுதேசிய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளூர் தொழிலை ஊக்கப்படுத்த முனைந்த பொருளியல் மேதை அவர். கோரல் மில் தொழிலாளர் உரிமைக்காகப் போராடிப் பெற்றுத் தந்ததன் மூலமாக தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி. பொதுவுடமை - தனியுடமை குறித்து 1920 காலக் கட்டத்திலேயே பேசிய பொதுவுடமைவாதி. அனைத்து சமயங்களுக்கும் கடவுள் ஒருவரே என்ற சமத்துவ - சகோதரத்துவவாதி. சென்னை மாகாணம் என்பதாக இல்லாமல் ‘தமிழ்நாடு’ என்று தனது உரைகளில் பயன்படுத்தியதன் முலமாக தமிழிய முன்னோடி.

சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்கிய போது, அதற்குத் துணையாக இருந்து சுயமரியாதை இயக்க - பார்ப்பனரல்லாதார் மாநாடுகளில் பங்கெடுத்து உரையாற்றியதன் மூலமாக சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக போற்றத்தக்கவர். காங்கிரசுக்குள் இடஒதுக்கீடு,- சமூகநீதித் தத்துவத்தை தீர்மானமாகக் கொண்டு வருவதற்கு பெரியாருக்கே ஊக்கமளித்தவர் வ.உ.சி. அவர்கள்.

‘ஜாதி வேற்றுமைக்கு எதிராகவும், பெண்ணடிமைத் தனத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். ‘சைவன்’ என்று சொல்லியபடியே இச்சீர்திருத்தங்களைச் செய்ய முனைந்தவர். அதனால் சீர்திருத்தச் சைவர் எனவும் அடையாளம் காணப்பட்டவர். பிரிட்டிஷார் கொடுத்த பட்டங்களை வாங்காத, - பதவிகளைப் பெறாத’ - அவர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல்களில் கூட பங்கேற்க விரும்பாத சுத்தச் சுதேசியனாக வாழ்ந்தவர் சிதம்பரனார் அவர்கள். தியாகத்துக்கான உதாரணம் வ.உ.சி. மட்டும் தான்’ என்று எழுதினார் தந்தை பெரியார்.

‘நாட்டுப் பற்றுடன் இனப்பற்றும் இருக்க முடியும் என்பதற்கு வ.உ.சி. ஓர் எடுத்துக்காட்டு’ என்று எழுதினார். ‘’ இந்நாளில் வ.உ.சி. இருந்தால் நம் கட்சியில்தான் இருப்பார் என்று கூறுவது மட்டுமல்ல, தலைமை வகித்து நடத்துவார். ஆரியம் இந்நாள் கப்பலேறியிருக்கும், அவர் கப்பலோட்டியாதலால்! திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு வ.உ.சி.யாகவே இருந்து புரட்சி செய்து மாள்வதையே பெரும் பேறாகக் கொள்வர்” என்று 1947 ஆம் ஆண்டு தலையங்கம் தீட்டினார் பெரியார்.

‘வீரர் சிதம்பரனார்’ என்று ‘திராவிட நாடு’ இதழில் ( 1949 இல்) தீட்டினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். ‘’ வெள்ளையன் இந்நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டுமானால் அவனுடைய ஆதிக்கத்தின் ஆணிவேரான வியாபாரத் துறையைத்தான் முதலில் கைப்பற்ற வேண்டுமென்ற சிறந்த திட்டத்தை முதலில் வகுத்த பெருமை சிதம்பரனாருக்கே உரியதாகும். அதனால் அவர் சிறை வைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் பொறுத்து வீரர் சிதம்பரனார் சிறையில் இருந்து வந்த போது வறுமை அவரை வரவேற்றது. நாட்டின் விடுதலைக்காக ஒரு பெரிய அரசாங்கத்தோடு போராடிய சிதம்பரனார் கடைசியாக வறுமையோடு போராடி, அதில் வெற்றி பெற முடியாமல் 1936 இல் உயிர் நீத்தார்” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அவருக்கே உரிய பாணியில் வ.உ.சி.அவர்களை அடையாளம் காட்டினார்.

வ – வழக்கறிஞர்

உ –- உரிமைக்காகப் போராடி வாதாடிய வழக்கறிஞர்

சி– உரிமைக்காக போராடி, வாதாடி சிறை சென்ற வழக்கறிஞர் –

என்றார் கலைஞர் அவர்கள்.

இத்தகைய தியாகத்தின் திருவுருவாய் இருக்கக் கூடிய வ.உ.சி.யின் புகழ் வாழ்க! அவரது கருத்துக்களும் - கொள்கைகளும் - கோட்பாடுகளும் வெல்க!

Also Read: அரசின் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக பச்சை வர்ணாசிரம - சனாதன அரசியல் செய்யும் பாஜக: முரசொலி தாக்கு!