முரசொலி தலையங்கம்

அரசின் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக பச்சை வர்ணாசிரம - சனாதன அரசியல் செய்யும் பாஜக: முரசொலி தாக்கு!

பச்சை வர்ணாசிரம- சனாதன அரசியலைத்தான் அர்ச்சகர் நியமனத்திலும் செய்து வருகிறார்கள்.

அரசின் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக  பச்சை வர்ணாசிரம - சனாதன அரசியல் செய்யும் பாஜக: முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (செப்.03, 2022) தலையங்கம் வருமாறு:

கருவாட்டுக்கடையை பூனை சுற்றிவருவதைப் போல கோவிலையே சுற்றிக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கு இருப்பது அரசியல் பகல் வேஷம்தான்.

‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்பது மாபெரும் சமூகநீதித் தத்துவம் ஆகும். சாதியின் பெயரால் கோவில் அர்ச்சகர் நியமனங்கள் கூடாது என்பதுதான் அதன் உள்ளடக்கம் ஆகும். அதனை அனுமதிக்க மறுப்பதன் மூலமாக, சாதியைக் காப்பாற்ற நினைக்கிறது பா.ஜ.க. அதன் மூலம், பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருக்கிறது பா.ஜ.க.

‘அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்’ என்று வழக்குப் போட்டு இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்ரமணியம் சுவாமி. உச்சநீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோயில் விவகாரங்கள் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக் காட்டினர். குறிப்பாக தயானந்த சரஸ்வதி 2012 ஆம் ஆண்டு, “கோயில்கள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குடன் இதனையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

அப்போது, வழக்கு விசாரணை முடியும்வரை அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் அல்லது புதிய நியமனங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி கோரிக்கை வைத்தார். இதற்கு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அமர்வு திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துவிட்டது. பின்னர் வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர். தமிழ்நாடு அரசு பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

எப்படியாவது தடை வாங்கிவிடுவார் சுவாமி என்று நினைத்தவர்கள், தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

அரசின் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக  பச்சை வர்ணாசிரம - சனாதன அரசியல் செய்யும் பாஜக: முரசொலி தாக்கு!

“மாநில அரசுகளிடமுள்ள இந்துக் கோயில்களின் கட்டுப்பாட்டை விடுவிக்க வேண்டும்’’ என்று பா.ஜ.க. வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார்.

“தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநில அரசுகளிடமிருந்து கட்டுப்பாட்டை விடுவிக்க வேண்டும். வருவாய் தொடர்பாக முறையான ஆடிட் இல்லை. பெருமளவு வருவாயை அரசு எடுத்துக்கொள்கிறது. 1500 சிறு கோயில்கள் கர்நாடகாவில் மூடப்பட்டுள்ளன. பெரும்பான்மை கோயில் நிலங்கள் பலனின்றிக் கிடக்கின்றன” என்று அந்தத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் வைத்துள்ளார்கள். இதைப் போல பலவீனமான வாதங்கள் இருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

பல ஆண்டுகளாக மாநில அரசுகளிடம் கோயில்கள் இருக்கும்போது தற்போது என்ன பிரச்சினை? கோயில்களை நிர்வகிக்க தமிழ்நாடு அறநிலையத் துறைச் சட்டம் இருப்பதுபோல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சட்டம் உள்ளது. சட்டத்தில் பிரச்சினை என்றால், அதுதொடர்பாக மனுத் தாக்கல் செய்யவேண்டும். பொத்தாம்பொதுவாக ஆதாரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயில் வருவாயில் பல அரசுகள், கல்லூரிகள் போன்ற மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபோது பல ஆதீனங்கள், நிலங்களையும் சொத்துகளையும் தாமாக முன்வந்து அரசுக்கு வழங்கினார்கள். அவற்றை அரசிடமிருந்து பெற்று மீண்டும் தனியாருக்குக் கொடுக்க வேண்டுமா?” என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து விரிவான மனுவைத் தாக்கல் செய்வதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். பின்னர் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசின் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக  பச்சை வர்ணாசிரம - சனாதன அரசியல் செய்யும் பாஜக: முரசொலி தாக்கு!

இப்போது புதிதாக இவர்கள் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. 1970 முதல் ஐம்பது ஆண்டுகளாக இதைத் தான் செய்துகொண்டு இருக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டு, “தமிழ்நாடு இந்துசமய மற்றும் அறக்கட்டளைகள் திருத்தச் சட்டம் செல்லுபடியாகும்” என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு தந்துள்ளது. இந்த அமர்வின் சார்பில் நீதிபதி பாலேகார் தீர்ப்பினை வாசித்தார். “அர்ச்சகர் நியமனம் என்பது மதக்காரியம் ( religious act) அல்ல, மதச்சார்பற்ற செயல் தான் (secular act)” என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இதை மனதில் வைத்துத்தான் முதல்வர் கலைஞர் அவர்களது ஆட்சியில் 23.5.2006 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

‘’நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இந்து திருக்கோயில்களில் அர்ச்சகராகப் பணிசெய்யும் வாய்ப்பு, குறிப்பிட்ட சாதி அடிப்படையிலேயே அளிக்கப்பட்டு வருவதை மாற்றி அமைக்க வேண்டுமென்று; அரசை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நீண்ட நாள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்ற நோக்கத்தில் அரசு இதனைப் பரிசீலனை செய்தது. இது குறித்து தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துரு பெறப்பட்டது. அவர் தனது கருத்துரையில், 1972 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பினையும், 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பினையும் விரிவாக ஆய்வு செய்து, 1972 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மதம் தொடர்பாகத்தான் கருத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர, சாதிபற்றி அதில் குறிப்பு ஏதுமில்லையென்று தெரிவித்துள்ளார்.

அரசின் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக  பச்சை வர்ணாசிரம - சனாதன அரசியல் செய்யும் பாஜக: முரசொலி தாக்கு!

மேலும் 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் (2002 SAR Civil 897), 1972 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (AIR 1972, SC 1586) கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, 2002-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு இன்றைய நிலவரப்படி மேலோங்கி நிற்கும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் தெளிவுபட எடுத்துரைத்துள்ளார். இறுதியாக, இந்து திருக்கோயில்களில் சாதிப் பாகுபாடின்றி அர்ச்சகர்களை நியமிப்பதற்கு சட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் சட்ட ரீதியாகவோ எவ்விதத் தடையுமில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய சூழ்நிலையில், இப்பிரச்சினையை அரசு கவனமாகப் பரிசீலனை செய்து, “2002-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையும், அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துரையையும் கருத்தில்கொண்டு, இந்துக்களில் உரிய பயிற்சியும் தகுதிகளும் உள்ள அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்துத் திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது” என்பது முதல்வர் கலைஞரின் அரசாணையாகும். அதன்படிதான் இன்றைய தமிழக அரசு செயல்படுகிறது.

இந்த அரசாணையை எதிர்ப்பவர்கள் - குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே ஆதரவானவர்கள். பெரும்பான்மை மக்களை எதிர்ப்பவர்கள். இந்துக்களிலேயே குறிப்பிட்ட உயர்ஜாதியை மட்டுமே ஆதரிப்பவர்கள். வெகுஜன விரோதிகள். ‘ஆம், நாங்கள் அப்படித்தான்’ என்பதை பா.ஜ.க. ஒப்புக்கொள்ளும் பச்சை வர்ணாசிரம- சனாதன அரசியலைத்தான் அர்ச்சகர் நியமனத்திலும் செய்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories