murasoli thalayangam
“தலைகள் மாறினாலும், நிலைமைகள் மாறவில்லை.. ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்த இலங்கை அரசு” : முரசொலி தலையங்கம்!
சமூக, அரசியல், பொருளாதாரத் தன்மைகளில் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து கிடக்கிறது இலங்கை. அங்கு ஆட்சி செய்யும் தலைகள் மாறினாலும், நிலைமைகள் மாறவில்லை என்பதே உண்மை.
இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருள்களை கப்பல் மூலமாக அனுப்பி வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. முதல் கட்டமாக 30 கோடி மதிப்பிலான 9 ஆயிரத்து 45 டன் அரிசி, 1.50 கோடி மதிப்பிலான 50 டன் ஆவின் பால் பவுடர், 1.44 கோடி ரூபாய் மதிப்பிலான 8 டன் மருந்துப்பொருள்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு முன்னால் இரண்டாம் கட்டப்பொருள்களையும் அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு. ரூ.66.70 கோடி மதிப்பிலான பொருள்களை அனுப்பி வைத்துள்ளது அரசு. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இதனைக் கொடியசைத்து அனுப்பி வைத்துள்ளார்கள் அமைச்சர்கள். இத்தகைய மனிதாபிமான உதவிகள் அந்த நாட்டுக்கு வந்து சேர்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்திய அரசு இதுவரை 31 ஆயிரத்து 322 கோடி ரூபாயை இலங்கை அரசுக்குக் கடனாகக் கொடுத்துள்ளது. ‘கூடுதலாக கடனுதவி தாருங்கள்’ என்று இலங்கை அரசு கோரிக்கை வைத்து வருகிறது. இலங்கை நாட்டின் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து இலங்கை அரசுக்கு ஆலோசனைகள் சொல்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழு அங்கு செல்ல இருக்கிறது.
அதேபோல் இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவும் இலங்கைக்குச் செல்ல இருக்கிறது. இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொரகோடா சந்தித்துப் பேசி, “எங்கள் நாட்டின் நிலைமையைச் சீர்செய்ய உங்களது ஆலோசனைகள் தேவை” என்பதைச் சொல்லி இருக்கிறார்.
இலங்கை நிலைமை அதே நிலைமையில்தான் இருக்கிறது என்பதை அந்த நாட்டின் புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கேயின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. “இந்தியா அளிக்கும் நிதி உதவி என்பது நன்கொடை அல்ல, அதனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நமது நாடு திட்டமிட வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் ரணில்.
“கடந்த 1948 முதல் இல்லாத வகையில் இலங்கையானது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. உணவு, மருந்துப் பொருள்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து அவசியப்பொருள்களும் கிடைக்கவில்லை. இதில் இருந்து மீள்வதற்காக பல நாடுகளிடம் இருந்தும் உதவிகள் பெறுகிறோம். இந்தியா இதுவரை 31 ஆயிரத்து 322 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. மேலும் கடன் தருமாறு இந்தியாவிடம் கேட்டு வருகிறோம். இந்தியாவும் தொடர்ந்து இப்படி கொடுத்துவர முடியாது. இந்தியாவுக்கும் கடன் வழங்குவதற்கும் ஓர் அளவு இருக்கிறது. இவை நன்கொடைகள் அல்ல, கடன்கள். இதனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சரிந்துள்ளது. பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் மட்டுமே இந்த மிக மோசமான நிலையில் இருந்து மீள முடியும். அதற்கு முதலில் அந்நியச் செலாவணிக் கையிருப்பை சரி செய்ய வேண்டும். அது எளிதான செயல் அல்ல” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசி இருக்கிறார்.
நிலைமை மாறவில்லை என்பது மட்டுமல்ல; அதற்கான முயற்சிகளும் மிகமிகத் தொடக்க கட்டத்தில்தான் இருக்கின்றன என்பதை பிரதமரின் பேச்சு உணர்த்துகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் 33 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயை ஆறு மாதங்களுக்குக் கொடுக்க அந்த நாடு முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் என்பது தரப்பட்டாலும்; அதற்கான பொருள், அதற்கு உட்பட்ட விலையில் கிடைப்பது சிரமம் என்பதே இன்றைய இலங்கையின் நிலையாக இருக்கிறது.
அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக நடந்து வந்த போராட்டங்கள், இப்போது பிரதமர் ரணிலுக்கு எதிராகத் திரும்பி உள்ளதுதான் ஒரே மாற்றம். கொழும்பு - காலி முகத் திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் 75 நாட்களைக் கடந்தும் நடந்து வருகிறது. முதல் ஒரு மாதம் அமைதியாக நடந்தது.
அதன்பிறகு வன்முறைப் போராட்டமாக மாறியது. போராட்டம் நடத்தியவர்களை ராஜபக்ஷே ஆதரவாளர்கள் தாக்கியதால், அது மிகப் பெரிய எழுச்சிமிகு போராட்டமாக மாறியது. ஜனாதிபதி மாளிகையின் முக்கிய நுழை வாயிலை மறித்து நடக்கும் போராட்டம் 75 நாட்களைக் கடந்து நடந்து வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு முன்னால் பெண்கள் போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள்.
“பத்து நாட்களாக மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நிற்கிறோம். கேஸ், மண்ணெண்ணெய் ஆகிய இரண்டையும் அரசாங்கம் வழங்க வேண்டும்” என்று அப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் பேட்டி அளித்துள்ளார். அரிசித் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. பொருட்கள் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விலைகளுக்கு விற்கப்படுகின்றன.
‘நாட்டைக் காப்பாற்ற ரணில் வந்திருக்கிறாரா? ராஜபக்ஷேவைக் காப்பாற்ற வந்திருக்கிறாரா?' என்ற குரல் இலங்கையில் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் வைக்கப் போவதாக பிரதமர் ரணில் அறிவித்துள்ளார். அந்தத் திட்டமானது இலங்கைப் பொருளாதாரத்தை ஓரளவு மீட்டுக் கொண்டு வரும் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் பிரதமர். அதனை மக்கள்தான் நம்புவதாகத் தெரியவில்லை.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!