murasoli thalayangam
‘இதுதான் வளர்ச்சியின் மாடலா?’ : பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்ட ‘முரசொலி’ !
இந்தியப் பொருளாதாரத்தை நிலை குலைய வைத்ததுதான் இந்த எட்டாண்டுகளில் நடந்துள்ளது. வளர்ச்சியை முன்வைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தார் மோடி. ஆனால் எதில் எட்டாண்டுகளில் இந்தியா வளர்ந்துள்ளது என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும். அவர்கள் கொண்டு வந்த எந்தச் சீர்திருத்தமும் பலனளிக்கவில்லை. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி என்பது மிகக் குறைந்து வந்துள்ளது.
முதலீட்டுக்கும் உற்பத்திக்கும் இடைவெளி அதிகம் உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. வேலையின்மையானது ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 ஆகும். 8 என்ற இலக்கை அடைவதற்கு கடுமையாக உழைத்தாக வேண்டும். கடன் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கிறது. மொத்த நிரந்தர முதலீடு உருவாக்கம் நிலையான தன்மையில் இந்தியாவில் இல்லை என்பதே உண்மை.
பணவீக்கம் அதிகமாகி வருகிறது. இதற்கு இன்னமும் கொரோனாவைக் காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. விலைவாசி உயர்வு, வாங்கும் தன்மை குறைவு, எண்ணெய் விலை உயர்வு, சேவைக் கட்டணங்கள் உயர்வு ஆகியவை பணவீக்கத்தை உயர்த்தி வருகிறது.
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், ``தற்போது வளரும் நாடுகள் பற்றித்தான் அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. எரிசக்தி, உரம் மற்றும் உணவுக்கான திடீர் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதம் அதிகரிப்பு ஆகியவை வளரும் நாடுகளில் இருக்கும் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகத் தாக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார். இத்தகைய பாதிப்பு இந்தியாவில் அதிகமாகி வருகிறது.
முதல் பிரதமர் நேரு, திட்டக்குழுவை உருவாக்கினார். அவர் உருவாக்கியதுதான் பிரிட்டிஷ் அரசுக்குப் பிந்தைய இந்தியா. பிரதமர் மோடி, திட்டக்குழுவைக் கலைத்தார். 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் என்று சொல்லிக் கொண்டார். இந்திய முறையில் வளர்ச்சியை முன்னெடுக்கும் என்றார். அந்த நிதி ஆயோக், மாநில நிதிகளை அபகரித்ததே தவிர, சொந்தமாகச் சம்பாதிக்கவில்லை. அத்தகைய திறம் இல்லை.
புதிய நாடாளுமன்றமாக சென்ட்ரல் விஸ்டா திட்டம் உருவாக்கப் போகிறார் மோடி. 20 ஆயிரம் கோடியில் இது அமையப் போகிறது. புதிய நாடாளுமன்றம், புதிய தலைமைச் செயலகம் அதில் அமையப் போகிறது. இது ஒன்றுதான் அவர்உருவாக்கப் போவது. ஜன் தன் திட்டம் மூலமாக அனைவரையும் வங்கிக்கணக்கை தொடங்க வைப்பதை சாதனையாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆயுஷ்மான் பாரத் என்ற காப்பீட்டுத் திட்டம் விளம்பரம் செய்யப்படுகிறது. உஜவாலா யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக கேஸ் அடுப்பு வழங்குகிறார். இவைதான் அவர்களது சாதனையாகச் சொல்லப்படுகிறது. இவை ஒரு சில திட்டங்கள் மட்டுமே. ஒட்டுமொத்த நன்மை அளிக்கும் பொதுத் திட்டங்களாக ஆகிவிடாது.
அவர்களின் ஆன்மிக உணர்வுகளை யாரும் குறை சொல்ல விரும்பவில்லை. அது அடுத்தவர் மனதை புண்படுத்துவதாக அமையக் கூடாது. அயோத்தியைத் தொடர்ந்து காசி, மதுராவை மீட்போம் என்று கிளம்புவது வளர்ச்சி அரசியலா? மதவாத அரசியலா? சிறுபான்மையர் ஆலயங்களை இடிக்க வசதியாக வரலாறுகள் திரித்து எழுதப்படுகின்றன. இவை செய்யப்படுவதற்குக் காரணம், எளிய மக்களின் உண்மையான கோபம் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் மீது வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு தேசவிரோதச் சட்டம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. பா.ஜ.க.வுக்கு எதிராகப் பேசுபவர்களை இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்களாகச் சொல்லி கைது செய்வதை வழக்கமாக மாற்றிவிட்டார்கள். அதனால்தான் தேசவிரோதச் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 2016 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில் 124 - ஹ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 சதம் அதிகரித்துள்ளது. ஆனால் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெறும் 3.3 சதமாகக் குறைந்துள்ளது. இதன் பொருள் என்ன? இப்படிக் கைது செய்யப்படுபவர்களில் 96.7 சதவிகிதம் குடிமக்கள் பொய் வழக்குகளால் பல ஆண்டுகாலம் சிறைக் கொட்டடிகளில் அவதிப்பட நேர்கிறது என்பதுதான். 2016 இல் இது 33.3 சதவிகிதம் ஆக இருந்தது அடுத்த மூன்றாண்டுகளில் இத்தனை கொடூரமாக அதிகரித்துள்ளது.
துணிவுடன் பா.ஜ.க. அரசின் அத்துமீறல்களைத் தொடர்ந்து விமர்சித்தும் கண்டித்தும் வந்த சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மீது ஒரே வாரத்தில் இரு வழக்குகள் போடப்பட்டுக் கைது செய்யப்பட்டார். “அரசியல் சட்டத்தை நம்புபவனாக இருப்பதுதான் பா.ஜ.க.வுக்கு எரிச்சல் ஊட்டுவதற்குக் காரணம்” எனவும் மேவானி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதும், அவர்களை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்துவதும் அரசியல் குழப்பங்களுக்கு வித்திடுகிறது. வகுப்புவாத அரசியல், ஆட்சியை சீரான பாதையில் இருந்து திசை திருப்புவதாக அமைந்துள்ளது. இந்திமயாக்கல் - சமஸ்கிருதமயமாக்கல் ஆகியவை இதுயாருக்கான நாடு என்பதைக் காட்டுகின்றன. சமூகத்தில் இருக்கும் அனைத்து ஆரோக்கியத் தன்மைகளையும் சிதைக்கும் செயல்பாடுகள் பல நேரங்களில் முன்னுக்கு வந்து நிற்கின்றன.
மொத்தத்தில் -
* பணமதிப்பிழப்பு இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தது.
* ரூபாய் நோட்டுகளை ஒழித்ததால் கருப்புப் பணம் ஒழியவில்லை.
* வெளிநாடுகளில் இருந்து பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை மீட்டு
ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படவில்லை.
* விவசாயிகளின் விளைபொருளுக்கு இரண்டு மடங்கு விலை கிடைக்கவில்லை.
* ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகச் சொன்னது நடக்கவில்லை.
* சரக்கு மற்றும் சேவை வரியால் மாநிலங்கள் சுரண்டப்பட்டது மட்டும்தான் நடக்கிறது.
* விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
* பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையோ அதிகமாகிக்கொண்டே போகிறது.
* சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் வளரவில்லை.
* புதிய பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படவில்லை.
* பொருளாதாரம் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.
* மாநிலங்களற்ற ஒரு ஒன்றியத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.
* ஒரே என்பது எதேச்சதிகாரத்தை விதைப்பதாக உள்ளது. இந்த வகையில் எட்டு ஆண்டுகளில் எட்டப்படாதவைதான் அதிகம்! அவர்கள் எட்ட நினைப்பவை மக்களுக்கும், நாட்டுக்கும் எதிரானவை ஆகும்.
“ஒரு தேசத்தின் பெருமை என்பது அந்த நாட்டிலுள்ள பலவீனமான மக்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதன் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது” என்றார் மகாத்மா காந்தி. அதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாத ஆட்சிதான் ஒன்றியத்தை எட்டு ஆண்டுகளாக ஆண்டு கொண்டு இருக்கிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!