murasoli thalayangam

“சொந்த நாட்டுக்கு மட்டுமல்ல; சொந்தத்தலைவிக்கும் துரோகம் இழைத்த அ.தி.மு.க” : கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே வேந்தர்களாக இருக்க முடியும்!

நியமனங்கள் வேந்தர்கள் ஆக மாட்டார்கள்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த சட்டமுன்வடிவு என்பது கல்வி தொடர்புடையது மட்டுமல்ல - மக்களாட்சித் தத்துவத்துக்கும் அடிப்படையானது. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே தருவதுதான் இந்தச் சட்டமுன்வடிவு ஆகும்.

இதுவரை ஆளுநர்கள்தான், பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக நடமாடி வருகிறார்கள். ஆளுநர் என்ற பதவியே நியமனப் பதவி ஆகும். ஏதோ ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்க்கு என்ன காரணத்தாலோ ஆளுநர் பதவி கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அப்படி வருபவர்களுக்கு இந்த மாநிலத்தைப்பற்றி எதுவும் தெரியாது. அப்படிப்பட்டவர்களாக இருக்கக் கூடியவர்கள், இந்தமாநிலத்தின் கல்வி, பல்கலைக் கழகங்களைப் பற்றி என்ன அறிவார்கள்?

ஆனால் அத்தகைய அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை நியமிப்பதற்கான சட்டத்தில் ‘வேந்தர்' என்பது ‘அரசு' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் வருகின்றன. இது ஏதோ தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டு ஆளுநருக்கு எதிரான மசோதா அல்ல. இத்தகைய முறைதான் குஜராத் மாநிலத்திலேயே இருக்கிறது. ‘குஜராத் மாடல்' தான் இது. அதனைத் தான் இன்றைய தமிழ்நாடு அரசு பின்பற்றி இருக்கிறது. இதனை தமிழக முதலமைச்சர் அவர்களே, சட்டமன்றத்தில் விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள்.

“பல்வேறு மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்த போது, இன்றைக்குப் பிரதமராக இருக்கக் கூடிய மோடி அவர்களது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. அதேபோல, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படக்கூடிய மூவரில் ஒருவர் துணை வேந்தராக மாநில அரசின் ஒப்புதலோடு வேந்தரால் நியமிக்கப்படுகிறார்.

ஆகவே, இந்த மாநிலங்களில் உள்ளதுபோல, குறிப்பாக, பிரதமருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளது போல, தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு அரசின்கீழ் உள்ள பல்கலைக் கழகச் சட்டங்களில் உரிய திருத்தம் செய்து, பல்கலைக்கழகத் துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட முன்வடிவினை இங்கே உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்”- என்ற முதலமைச்சரின் விளக்கத்திலேயே இது முழுமையாக இருக்கிறது. எனவே அரசியலுக்காகக் கொண்டு வரப்பட்டது அல்ல இது.

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் 6-1-2022 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், “துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்” என்று சொன்னார்கள். எனவே, இப்போதைய ஆளுநரின் செயல்பாடுகள் தான் இதற்குக் காரணம் என்று உள்நோக்கம் கற்பிக்கத் தேவையில்லை. ஜனவரி மாதமே இக்கருத்து சட்டமன்றத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

ஏற்கனவே சில மாநிலங்களில் இருப்பதுதான் இது.

* 1949 ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகச் சட்டம் -

* 1991 ஆம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக் கழகங்கள் சட்டம் ஆகியவை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்குத் தான் உள்ளது என்று கூறுகின்றன. அரசின் ஒப்புதலுடன்தான் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது கர்நாடக மாநிலச் சட்டம்.

இதனைத்தான் தமிழ்நாடு இப்போது வழிமொழிந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவே இத்தகைய முடிவை ஒரு முறை எடுத்தார். அதுவே தெரியாமல் ‘அடிமை அடிப்பொடிகள்' இன்று எதிர்ப்புத்தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அம்மா இறந்ததும், அம்மாவை மறந்த நன்றி கெட்ட ‘இரட்டையர்கள்' சொந்த நாட்டுக்கு மட்டுமல்ல; சொந்தத்தலைவிக்கும் துரோகம் இழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதாவானது 28 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னெடுப்பால் அன்றைய கல்வி அமைச்சர் பொன்னுசாமி இதனை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது சபையில் அது நிறைவேற்றப்பட்டது. இது தெரியாமல், இன்றைய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிர்ப்புத்தெரிவித்துக் கொண்டு வெளிநடப்பு செய்துள்ளார்கள் அ.தி.மு.க.வினர்.

ஆளுநர்களை பல்கலைக் கழக வேந்தர்களாக வைத்திருப்பது கல்வித் துறைச் செயல்பாடுகளுக்கு பல்கலைக் கழகச் செயல்பாடு களுக்கு இடையூறாக இருக்கிறது. உயர்கல்வி என்பதை மாநில அரசு கவனித்துக் கொள்ளும் போது, ‘துணை வேந்தர்களோடு' ஆளுநர் தனிக் குடித்தனம் நடத்திக் கொண்டு இருப்பது, நிர்வாகத்தை மட்டுமல்ல, கல்வித்துறையில் குளறுபடிக்கு அடித்தளம் அமைக்கிறது.

தனது சொந்த அரசியல் உள்நோக்கங்களுக்காக, துணை வேந்தர்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் நியமனத்தில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பது போல் செயல்பட்டு, உயர் கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது என்பதை முதலமைச்சர் அவர்கள் வேதனையோடு சுட்டிக் காட்டி இருக்கிறார். ஆளுநர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்காத அதிகாரம்தான் இந்த துணைவேந்தர்களின் நியமனம் ஆகும். ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ள பூஞ்சி ஆணையத்தின் அறிக்கையும் இதனைத்தான் சொல்கிறது.

“இன்றைய பிரதமர் மோடி அவர்கள், குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது, துணை வேந்தர்களை அவரேதான் நியமித்தார். பா.ஜ.க. உறுப்பினர்கள் பிரதமரிடம் சென்று கேட்க வேண்டும்” என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. உண்மையில் இந்த மசோதா என்பது மக்களாட்சியின் மாண்பைக் காப்பாற்றுவதற்கு மிகமிக முக்கியமானது. இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க முடியாது.

Also Read: “கோரிக்கை வைத்த 24 மணி நேரத்திற்குள் உடனடி நடவடிக்கை” : அமைச்சரை வியந்து பாராட்டிய எம்.எல்.ஏ!