murasoli thalayangam

”பழனிசாமி தரங்கெட்ட தற்குறி என்பதை இந்த நாடு அறியும்”: முரசொலி தலையங்கம் சாடல்!

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஏப்ரல்.07 2022) தலையங்கம் வருமாறு:

பழனிசாமி தரங்கெட்ட தற்குறி என்பதை இந்த நாடு அறியும். சசிகலாவின் காலை நோக்கி தரையில் உருண்டு போயாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக சில ஆண்டுகள் இருந்து தொலைத்துவிட்டார் என்பதற்காக கொஞ்சமாவது வேட்டியில் மரியாதை ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த மரியாதையையும் சமீபகாலமாகத் துடைத்தெறிந்து கொண்டு இருக்கிறார் பழனிசாமி.

தகுதியற்றவரை ஒரு பதவியில் உட்கார வைத்தால், அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார் என்பதன் அடையாளம்தான் - அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் - நானும் ஒரு தலைவன்தான் என்பதைக் காட்டிக் கொள்ளவும் அவர் நித்தமும் உளறிக் கொண்டு இருக்கிறார்.

சசிகலாவும் - பன்னீர்செல்வமும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னை நோக்கி மீடியாக் கண்களைத் திருப்புவதற்காக பழனிசாமி செய்து வரும் தந்திரம்தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் எல்லைகளைத் தாண்டி அவர் பேசி வருவது ஆகும்.

ஒருமையில் பேசுவது, கொச்சைப்படுத்துவது, அவதூறு செய்வது, ஒரு நாட்டின் முதலமைச்சரை எப்படி விளித்துப் பேசுவது என்ற எந்த இலக்கணமும் அந்த தற்குறிக்குத் தெரியவில்லை. திண்ணையில் படுத்துருளும் சண்டியர்கள், ஏப்பம் விடுவதைப் போல கெட்ட நாற்றம் அடிக்கிறது பழனிசாமி பேச ஆரம்பித்தால்.

வாட்ஸ் அப் வதந்திகளை வைத்து ‘துபாய்’ பயணம் குறித்த அறிக்கையை வெளியிட்டதைப் போல மிகமோசமான அறிக்கை இருக்க முடியாது. அந்த அறிக்கைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதிகாரப் பூர்வமான பதில் அறிக்கை வெளியிடப்படவில்லை. அது தேவையும் இல்லை. ஏனென்றால், அவை அனைத்தும் கொச்சையான,கோமாளித் தனமான வியாக்கியானங்கள்.

துபாய் போனாராம் முதலமைச்சர். திரும்பி வந்ததும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள டெல்லி வந்து பிரதமரைச் சந்திக்க வந்து விட்டாராம், காலில் விழ வந்துவிட்டாராம் - இதுதான் பழனிசாமியின் கடைந் தெடுத்த கற்பனை. அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் யாரும் இதில் எந்தச் சொல்லையும் ஏற்க மாட்டார்கள்.

பிரதமரைச் சந்தித்த அன்றே பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்தார்கள். பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு காங்கிரஸும், இடதுசாரிகளும், பா.ஜ.க.வை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அகில இந்தியக் கட்சிகள் - மாநிலக் கட்சிகளுக்கு விடுத்த வேண்டுகோளாகும்.

பா.ஜ.க.வின் காலில் விழுந்துவிட்டோ - விழத் தயாரான ஒருவரோ இப்படிச் சொல்வாரா? இப்படி அவர் சொன்னதாவது பழனிசாமிக்கு தெரியுமா? தெரியாது. அந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளும் தன்மை அவருக்கு இருந்தால் இப்படி உளறி வைப்பாரா?

இப்படி ஒரு பேட்டி அளித்தபிறகும், பா.ஜ.க.வின் காலில் விழுவதற்குஎதற்காகப் போனீர்கள் என்று திரும்பத் திரும்ப பழனிசாமி கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் பிரதமர் சந்திப்பது தவறல்ல. அது நிர்வாக நடைமுறைதான்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பிரதமர் இந்திராவைச் சந்திக்கச் சென்றார். அதை வைத்து, காங்கிரஸ் உறுப்பினர் கருத்திருமன் கேட்டார். “ஏன் டெல்லிக்கு காவடி எடுக்கிறீர்கள் என்று எங்களைப் பார்த்து நீங்கள் கேட்டீர்கள். இப்போது நீங்களும் காவடி எடுக்கத் தொடங்கிவிட்டீர்களா?’’ என்று கேட்டார்.

“நீங்கள் எடுத்தது பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி. அதை எடுத்துப் போய் அபிஷேகம் செய்து விட்டு வந்தீர்கள். நான் எடுத்தது அன்னக்காவடி. தமிழ்நாட்டுக்காக டெல்லி சென்று பிச்சை எடுத்துவிட்டு வந்திருக்கிறேன்” என்றார் பேரறிஞர் அண்ணா. அது இன்றைய தற்குறிகளுக்குப் புரியாது. தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய நிதிகளைக் கேட்டு பிரதமரையும், ஒன்றிய அமைச்சர்களையும் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தான் பதவியில் இருந்த காலத்தில் மாநில உரிமைகளுக்காக பழனிசாமி பயணப்பட்டது உண்டா? பன்னீர் செல்வத்தை முதலில் ஆதரித்துக் கொண்டு இருந்தது பா.ஜ.க. தலைமை. அதனால் ‘நானும் உங்களுக்கு வாய்த்த நல்ல அடிமைதான்’ என்பதை நிரூபிக்க பழனிசாமி படையெடுத்தார். இது பழனிசாமிக்கு மனச்சாட்சி என்ற ஒன்று இருந்தால் தெரியும். பழனிசாமி நீங்கலாக மற்றவர்கள் அனைவருக்கும் இது தெரியும்.

பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. அதில் இருந்து தப்பிப்பதற்காக டெல்லி போனார். தவம் கிடந்தார். உச்சநீதிமன்றம் தடை விதித்த காரணத்தால் மட்டுமே அவரால் அந்தப் பதவியில் நான்காண்டு காலம் நீடிக்க முடிந்ததே தவிர தகுதியால் அல்ல. அ.தி.மு.க. உறுப்பினர்களின் பெரும்பான்மையால் அவர் நீடிக்கவில்லை. பா.ஜ.க.வின் பெருந் தன்மையால் முதலமைச்சராக நீடித்தார்.

‘உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறார்களே?’ என்று டெல்லியில் நிருபர்கள் கேட்டபோது, ‘யார் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு இல்லை’ என்று அசிங்கமாகச் சிரித்தவர்தான் இந்த பழனிசாமி.

‘நீங்கள் சசிகலா காலை நோக்கி ஊர்ந்து போனீர்களா?’ என்று கேட்டபோது, ‘நான் என்ன பாம்பா? பல்லியா?’ என்று கேட்டாரே தவிர, ஊர்ந்து போகவில்லை என்று சொல்லவில்லை!

தனக்குப் பதவி கொடுத்த சசிகலாவைப் பார்த்தே, ‘நீ எனக்கு சீட்டு வாங்கிக் கொடுத்தாயா? உனக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்? நீ ஏன் உரிமை கொண்டாடுகிறாய்?’ என்று கேட்டதன் மூலமாக கொஞ்சம்கூட மனச்சாட்சி இல்லாதவர் என்று நிரூபித்தவர் பழனிசாமி.

“சிறுவயது முதலே கடினமாக உழைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சொல்கிறார். இதை ஸ்டாலினிடம் நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.

முதலமைச்சர் அவர்களே! என்னிடம் நீங்கள் நிரூபிக்க வேண்டியது இல்லை!நெடுங்குளம் சோமசுந்தரம், கருப்பண்ணக் கவுண்டர், துரை ஆகிய மூவரது சமாதியில் போய் நின்று கொண்டு, ‘நான் சிறுவயது முதலே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்று சொல்ல முடியுமா? இதனை நான் சவாலாகக் கேட்கிறேன்.

இதற்கு மேல் அந்த விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை” என்று சேலம் பொதுக் கூட்டத்தில் இன்றைய முதலமைச்சர் - அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது கேட்டாரே? அதற்கு இரண்டு ஆண்டுகளாகப் பதில் சொல்ல முடியாத பழனிசாமிக்கு எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் பேசுவதற்கு யோக்கியதை இல்லை.

1990 ஆம் ஆண்டு சேலம் மாவட்டச் செயலாளர் ஆன பழனிசாமியின் பதவியை சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா பறித்தார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பழனிச்சாமிக்கு தரப்பட்டது. சில ஆண்டு களில் அதுவும் பறிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆனார் பழனிசாமி. சில ஆண்டுகளில் அந்தப் பதவியும் ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டது. 2008 இல் மீண்டும் பதவி தரப்பட்டது. அது மீண்டும் பறிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தோடு மொத்தமாக நெருக்கமானதால்தான் அ.தி.மு.க.வின் ஐவர் அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதனால்தான் பன்னீர்செல்வத்தை விட இவர் நம்பிக்கையானவராக இருப்பார் என்று சசிகலா குடும்பம் நம்பி முதலமைச்சர் பதவியைக் கொடுத்தது. அதன்பிறகு சசிகலாவையே காலை வாரினார். இத்தகைய களங்க அரசியல் வரலாறுதான் பழனிசாமியுடையது.

கொடநாடு கொலை - கொள்ளை சம்பவத்தில் சயன் அளித்த பேட்டியில், தன்னை யார் அந்த பங்களாவுக்குள் நுழையச் சொன்னது என்று சொல்லி இருக்கிறார். சயனைச் சந்தித்த பத்திரிக்கையாளர் மாத்யூ பேட்டியில் இது விரிவாக இருக்கிறது. ‘இதைப் பற்றி எல்லாம் வெளியில் சொல்லாதே’ என்று அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சயன் சிறையில் இருந்த போது ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பி மிரட்டி இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். அவரும் சேலத்துக்காரர்தான்.

இந்த விவகாரத்தின் விசாரணைப் படலம் முறையாக நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி முறையாக நடப்பது பழனிசாமிக்குப் பிடிக்கவில்லை. சசிகலாவின் நடவடிக்கைகள் - பன்னீர்செல்வத்தின் ஒத்துழையாமை - கொடநாடு வழக்கு - லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள புகார்கள் -உயர்நீதிமன்றத்தின் உத்தரவு - உச்சநீதிமன்றத்தில் உள்ள மேல் முறையீடு - பினாமிகளின் பரிதவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து பழனிசாமியை உளற வைக்கிறது. ‘புலிக்கு பயந்தவங்க என் மேல படுத்துக் கோங்க’ என்பது மாதிரி தன்னைக் காப்பாற்ற நாவடக்கம் இல்லாமல் பேசி வருவதை அவர் அடக்கிக் கொள்ள வேண்டும்.

Also Read: “மாநிலங்கள் என்று பேசுவதே பிரிவினை அல்ல..” - பேரறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி முரசொலி பதிலடி !