murasoli thalayangam

7 இடங்களில் அகழாய்வு பணி.. முதல்வரின் உத்தரவால் இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தொடங்கும் வரலாறு: முரசொலி

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜன., 24 2022) தலையங்கம் வருமாறு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்துள்ள அறிவிப்பு உலகப் புகழை தமிழகத்துக்கு ஏற்படுத்தித் தரும் அறிவிப்பாக உள்ளது.

தமிழ் நிலத்தின் தொன்மை என்பது ஏதோ பழம் பெருமையோ, இலக்கியக் கற்பனையோ மட்டுமல்ல. அது வரலாற்றுப்பூர்வமானது. இலக்கியப் பாடல்களை மட்டும் வைத்து நாம் இந்தப் பெருமைகளைச் சொல்லவில்லை. அதற்கான வரலாற்று ஆதாரங்களோடும்தான் சொல்லி வருகிறோம். இந்த வரலாற்று ஆதாரங்களைத் திரட்டும் பணிஎன்பது முறையாக, சரியாக, தொடர்ச்சியாக நடக்கவில்லை. அதனைத்தான் மீண்டும் தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

கீழடியில் கிடைத்த ஆதாரங்கள்தான் இந்த வரலாற்று வழித்தடத்தை மீண்டும் புதுப்பித்துள்ளது. கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் ஆய்வுகள் இப்போது மீண்டும் சிறப்பாகத் தொடங்க இருக்கிறது.

சரஸ்வதி நாகரிகம், கங்கை நாகரிகம் ஆகிய கற்பனைகளை சிலர் உருவாக்கி திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தையும் புறம்தள்ளி அனைத்துக்கும் தொடக்கம் கீழடியில் இருந்த தமிழர் நாகரீகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது.

அதேபோல் சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமிநீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக்கண்டறியப்பட்டுள்ளது.

‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த முதலமைச்சர் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார் கள். இதைத் தொடர்ந்து வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப் பிரித்து நடத்த முதலமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

*கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம்,

மணலூர்), சிவகங்கை மாவட்டம் - எட்டாம் கட்டம்

* சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் மூன்றாம் கட்டம்

* கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்- இரண்டாம் கட்டம்

* மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்- இரண்டாம் கட்டம்

* வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் - முதல் கட்டம்

* துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- முதல் கட்டம்

* பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்- முதல் கட்டம் - ஆகிய ஏழு இடங்களில் இந்த ஆய்வுகள் நடக்க இருக்கின்றன.

சங்ககாலத் துறைமுகங்களான பூம்புகார், கொற்கை, அழகன்குளம்,வசவசமுத்திரம் ஆகியவை முக்கியப் பங்காற்றின. அவற்றையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.

அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. துலுக்கர்பட்டியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. வெம்பக் கோட்டையில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. பெரும்பாலையில் நிறைய ஓடுகள்கிடைத்துள்ளன. ஈமக்காடுகள் உள்ளன. இவை அனைத்தும் வரலாற்று காலத்துக்கு முன் மக்கள் வாழ்ந்தற்கான தடயங்கள் ஆகும். தமிழ்நாடே பழமையானதுதான்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்கள் பழமையானவையே. இதனை நமக்கு முன்னால் வெளிநாட்டுப் பயணிகள் தங்களது குறிப்புகளில் எழுதி வைத்து விட்டார்கள். மெகதஸ்தனீஸ் (கி.மு. 302- 296) தனது குறிப்புகளில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் தென்னகத்தில் பாண்டிய நாடு சிறப்புற்று விளங்கியதை எழுதி இருக்கிறார். இயற்கையின் வரலாற்றை எழுதிய பிளினி ( கி.பி. 26-73) தனது கிரேக்க நூலில் சங்க காலத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார். நாம் நாடு என்று சொல்வதை ‘நாரே' என்று எழுதி இருக்கிறார். முசிறியைப் பற்றியும் காவரிப் பூம்பட்டினம் குறித்தும் எழுதி இருக்கிறார். மதுரையை ‘மொதுரா' என்று குறிப்பிட்டு இருப்பார்.

பெரிபுரூஸ் ( கி.பி. 50) என்ற ரோமானிய கடல் நூலில் தொண்டி குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியும், கொற்கையும், உறையூரும் அதில் உள்ளது. தாலமி (கி.பி. 119-161) குறிப்புகளில் தமிழகம் குறித்துவிரிவாக உள்ளது.

இத்தகைய பெருமைக்குரிய வரலாற்றைத் தான் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வேத நாகரிகம் என்ற கற்பனைக்குப் பின்னால்வரலாற்றைக் கட்டமைக்க அவர்கள் விரும்புகிறார்கள். அந்தக்கற்பனைகளை மொத்தமாகச் சிதைக்கிறது இந்த வரலாற்றுப் பதிவுகள். இந்த வரலாற்றுப் பதிவுகளை மீண்டும் மீண்டும் பல்வேறு ஆய்வுகளின் மூலமாக புதுப்பிக்க நினைக்கிறார் முதலமைச்சர்.

“இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ்நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச்சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவு வதற்கு மேற்காணும் அகழாய்வுகளும், முன்கள புலஆய்வுப் பணிகளின்முடிவுகளும் உறுதி செய்யும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது அந்த சிலருக்கு எரிவது இதனால்தான். அதனால்தான் இந்த ஆய்வுகளை நாம் கண்ணும் கருத்துமாகச் செய்தாக வேண்டி உள்ளது!

Also Read: “கடமை தவறிய நிலையை மறைப்பதற்காகத்தான் இத்தனை பசப்பு வார்த்தைகளா பிரதமரே?” : முரசொலி கடும் சாடல்!