murasoli thalayangam

அரசு நிறுவனங்களை சவலைப் பிள்ளையாக்கி, தனியாருக்கு ஊட்டமளிக்கும் மோடி அரசு - ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை!

"மத்திய அரசு தமிழகத்துக்குக் குறைவான அளவில் தடுப்பூசி மருந்துகளை ஒதுக்கீடு செய்திருப்பது வருத்தம் தருவதாக இருக்கிறது. தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று சொல்லி இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய இருவரும்தான் தமிழகத்துக்கான குரலை எதிரொலித்து இருக்கிறார்கள். நீதிபதிகள் எதிரொலித்து இருப்பது தமிழகத்தின் உரிமைக்குரல் ஆகும். கொரோனா தொற்று பரவல் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கை எடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அப்போதுதான் இத்தகைய விமர்சனத்தை நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

‘தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வியை மே 8ம் தேதி ஒரு பொது நல வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எழுப்பினார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிதான் முக்கியம், முக்கியம் என்று சொல்லி வருகிறோம். ஆனால் தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் ஒன்றிய அரசு காட்டிய மெத்தனம்தான் இன்று பட்டவர்த்தனமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவர்களது அலட்சியமே இரண்டாவது அலைக்கு வழி வகுத்துள்ளது. தடுப்பூசியை முழுமையாக உற்பத்தி செய்யவில்லை, அப்படி உற்பத்தி செய்த தடுப்பூசியை ‘வீண் பெருமைக்காக' வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார் பிரதமர். இருந்த தடுப்பூசியையும் மாநிலங்களுக்குள் பிரித்துத் தருவதில் ஓரவஞ்சனை. இப்படி அனைத்தும் சேர்ந்துதான் நாட்டு மக்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. சீனாவில் இதுவரை 51 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தங்கள் நாட்டு மக்களில் 70 சதவிகிதம் பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போட்டுவிடுவோம் என்று சீன தடுப்பூசி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நான்கு நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு சீனா அனுமதி வழங்கி உள்ளது. ஜூலை 4 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 70 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் இதுவரை இரண்டு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. 21 கோடி பேருக்கு தடுப்பூசி இதுவரை கிடைத்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களைத் தாண்டி வேறு நிறுவனங்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதில் ஒன்றிய அரசு பிடிவாதமாக இருக்கிறது. பைசர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு உலக நாடுகள் பலவும் அனுமதி தந்துள்ளன. ஆனால் ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்கள்.

இதேபோல், பஞ்சாப் அரசும் முடிவெடுத்து அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதாவது ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தாலும் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மாநில அரசுகள் இறங்கி உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை எந்தளவுக்கு மோசமாக வைத்திருக்கிறது ஒன்றிய அரசு என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை கிண்டியில் உள்ள பி.சி.ஜி தடுப்பூசி லேபாரட்டரி மற்றும் குன்னூரில் இருந்த பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று மிகச் சிறந்த அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் முடக்கப்பட்டன. செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களை சவலைப் பிள்ளைகள் ஆக்கி தனியார் நிறுவனங்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து வளர்த்தது மோடி அரசு. இன்று சீரம் நிறுவனத்துக்கு முன் பணமாக 3000 கோடி தரப்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள ஹாப்கைன் இன்ஸ்டிடியூட், ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இம்முயூனோலாஜிக்கல் லிமிடெட் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பாரதி இம்மியூனோலாஜிக்கல் அண்ட்பயோலாஜிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எந்த நிதியும் இல்லை! பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணித்தது மட்டுமல்ல; தனியார் துறையாக இருந்தாலும் குறிப்பிட்ட தனியார் மட்டுமே கோலோச்ச முடியும் என்ற சூழலை உருவாக்கி விட்டார்கள்.

அதனால்தான் வேறு நிறுவனங்களின் தடுப்பூசியை உள்ளே விட மறுக்கிறார்கள். ஆகஸ்ட் 15, 2020 இல், சுதந்திர தினத்தன்று பல கோடி பேருக்கு இன்னும் சில மாதங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என மோடி அறிவித்தார். ஆனால் அதற்கான ஒப்பந்தம் போட்டது எப்போது தெரியுமா? 2021 ஏப்ரல் மாதம் 19ம் தேதிதான். அதாவது ஒன்பது மாதம் கழித்துத்தான் ஒப்பந்தம் போடப்பட்டது. முன்கூட்டியே அவர்களிடம் ஒப்பந்தம் போட்டிருந்தால் அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடும் போதெல்லாம் வேடிக்கை பார்த்தது பா.ஜ.க. அரசு. இந்தியாவில் நிலைமை முற்றி வருகிறது, கோடிக்கணக்கான மக்களை நாம் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்துள்ளது பா.ஜ.க. அரசு.

Also Read: “மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்” - வெற்று பிம்ப பிரதமரை பங்கமாக கலாய்த்த 56 பக்க புத்தகம்!