murasoli thalayangam
“தமிழக மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய தி.மு.க அமைச்சரவை” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
முதல்வர் ஸ்டாலினோடு சேர்த்து 34 பேர் தமிழக அமைச்சரவையில் அங்கம் பெற்று இருக்கிறார்கள். கடந்த 7 ஆம் தேதி காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் தி.மு.க.வின் அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. 15 புதுமுகங்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். 19 பேர் அமைச்சரவையில் ஏற்கனவே இருந்து அனுபவம் பெற்றவர்களும் உள்ளனர். முதல்வர் தயாரித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்களை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தோம்.
மனத்திற்கு நிறைவாக இருந்தது. விமர்சனம் என்ற பெயரால் வலிந்து குறைகள் என்று சொல்லலாமே தவிர தேர்வு மிகச் சிறப்பாக அமைந்து இருக்கிறது. காலச்சூழலுக்கு ஏற்ப துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவுக்கு அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
தி.மு.க அணியினருக்கு விழாவுக்கு அழைப்பு விடுத்தது போலவே எதிர்க்கட்சிகள் அனைவரும் அழைக்கப்பட்டு இருந்தனர். அ.இ.அ.தி.மு.க சார்பில் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். விழாவில் 700 இருக்கைகள் போடப்பட்டு நிரம்பி இருந்தன. அதிகாரிகள், காவல்துறையினர் வேறுஇடம் பெற்று இருந்தனர். எல்லாருமாகச் சேர்த்து ஓராயிரம் பேர் பதவி ஏற்பு விழாவில் இடம் பெற்றிருக்கக்கூடும். இந்த அளவுக்குக் கூட கூட்டமில்லாமல் ஓர் அரசின் பதவி ஏற்பு விழா நடைபெற வாய்ப்பில்லை. அமைச்சர்கள் அனைவரும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். எல்லோரும் ‘உளமார’ பதவி ஏற்பதை உறுதி செய்து கூறினர். மகிழ்ந்தோம்.
காலையில் நடந்த பதவியேற்பு நிகழ் வினை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தன. ஒரு தொலைக்காட்சியில் சுந்தர் சி. ராமன் எனும் விமர்சகர் அமைச்சரவை உறுப்பினர்களைப் பாராட்டினார். மேலும் அவர், ‘முதல்வர் ஸ்டாலின் 100 நாட்களுக்குள் சில மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதாக உறுதி அளித்திருக்கிறார். அவை 6 மாதமோ, ஓராண்டோ கூட ஆகட்டும். ஆனால், அவர் முதலில் கவனிக்க வேண்டிய பிரச்சினை கொரோனா. அதைப் பற்றிய நடவடிக்கைகளைக் கவனிக்க நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா. சுப்பிரமணியத்தை நியமனம் செய்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
7 ஆம் தேதி மாலையே அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர், கொரோனா ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதேநேரத்தில் ஐந்து சாதனை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். காலையில் ஒரு விமர்சகர் சொன்னதற்கு மாலையே நடவடிக்கை எடுக்கப்பட்டது நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். மேலும் முதல்வர் கொரோனா பற்றிய அறிக்கையை அதிகாரிகளிடையே படித்துக் காட்டினார். அதனை நாட்டு மக்களும் பார்த்தனர். அந்த அறிக்கையில் முதல்வர், ‘நான் பொய்யுரை, புகழுரையை விரும்பவில்லை. உண்மையை நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன்’ என கொரோனா ஒழிப்பைப் பற்றி கூறினார். இந்த வெளிப்படையான பேச்சினை நாட்டு மக்கள் அனைவரும் வரவேற்றனர். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. சொல்வதைப் போல் செய்யக் கூடிய செயல்வீரர்கள் தி.மு.க.வினர் என்கிற மக்கள் மொழி மேலும் உறுதியாயிற்று.
தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஐந்து ஆணைகளில் அவர் கையெழுத்திட்டார். அதுவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பயன்படுத்திய பேனாவினால் கையெழுத்திட்டார்.
(1) கொரோனா நிவாரணம் ரூ.4000/-
(2) ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3/- குறைப்பு.
(3) பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்.
(4)உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் - புதிய துறை ஏற்படுத்தியமை.
(5) கொரோனாவினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு அரசே கட்டணம் செலுத்தும். இந்த ஐந்து உத்தரவுகள் நடைமுறைக்கு வருகின்றன.
எதைத் தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதியாகக் கழகம் தந்ததோ, அதை அதன் ஆட்சி ஏற்றபோதே நிறைவேற்றி வைத்துவிட்டது என்பது நினைத்துப் பார்க்க முடியாத சாதனையாகும். மேலே நாம் எடுத்துச் சொன்ன விமர்சகர் குறிப்பிட்டது போல, எதையும் ஆறு மாதமோ, ஒருவருடமோ எந்த வாக்குறுதிகளையும் தள்ளிப் போடமாட்டார் முதல்வர். கொரோனா ஒழிப்புப் பணி நடைபெறும் அதேநேரத்தில் இதர வாக்குறுதி களின் திட்டங்களும் நிறைவேற்றப்படும் விதத்தில்தான் அவர் பொறுப்பேற்ற முதல் நாளின் நிகழ்ச்சியே அமைந்து இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமது ஆற்றல் அனைத்தையும் அமைச்சரவையின் மீது செலுத்துவார். அமைச்சர்களும் தத்தமது அனுபவங்களைக் கொண்டு சாதனை வீச்சை வேகப்படுத்த முனைவரே தவிர தடைக்கல்லாக எவரும் செயல்பட மாட்டார்கள். ஆக, இந்த அமைச்சரவை தமிழக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் அமைச்சரவையாக நிச்சயம் விளங்கும். ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டை இந்தியா முழுமையும் உற்று நோக்கும்படியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. உலகப் பார்வை நமது அமைச்சரவையின் மீதும், ஸ்டாலின் மீதும் விழுந்து இருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மதச்சார்பின்மையை வற்புறுத்தும் கட்சிகள் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ளன. இந்த வெற்றி இமாலய வெற்றியாகும். மத துவேஷத்தையும், வெறுப்புணர்ச்சியையும் பொதுவாழ்வில் விதைத்து வரும் பா.ஜ.க.வின் மதவாதப் போக்கிற்கு மேற்சொன்ன மூன்று மாநில தேர்தல்களிலும் மரண அடியை வழங்கி உள்ளன. பா.ஜ.க. அதன் கலக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்த உணர்ச்சி அந்தந்த மாநில அளவோடு நின்றுவிடக் கூடாது. அந்த உணர்ச்சி பா.ஜ.க ஆட்சியில்லாத மாநிலங்களிலும் பரவவேண்டும்.
எதிர்கால வெற்றிக்கு இவை பயனளிப்பதாய் இருக்கும். கண்டிப்பாகப் பயனளிக்கும். இந்த உணர்ச்சியை இந்தியாவுக்கு வழங்கிய மாநிலங்களில் ஒன்றாக இந்தத் தேர்தலின் மூலம் தமிழ்நாடு விளங்குகிறது. அதன் தலைவராக ஸ்டாலின் திகழுகிறார். மாநிலம் தாண்டிய பணிகளுக்கும், அவரது வழிகாட்டுதல் இருக்கும் என்பதை அவரது கடந்த காலப் பேச்சுகள் எடுத்துரைக்கின்றன என்பது ‘இந்தியம்’ தழுவிய அரசியல். நமது தலைவர் முதல்வர் ஸ்டாலின் மீதும், அமைச்சரவையின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
அவர்களின் செயல்கள் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும். அதே நேரத்தில் மக்கள் நலத் திட்டங்கள், உதவிப் பணம் கொடுப்பது போன்றவை அதன் உண்மை பயனாளிகளுக்கு கிடைப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றே. இதைப்போல மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுதான் நமது ஆட்சியின் நோக்கம்; விருப்பம்; ஏனெனில் நமது இந்த அமைச்சரவை மக்களின் அமைச்சரவை.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!