கோப்புப்படம்
murasoli thalayangam

அம்பலமான ரஃபேல் விமான ஊழல்: ஏப்பம் விடப்பார்க்கும் மோடி அரசு - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!

மோடி ஆட்சியின் ஊழல் மகுடம் என்பது ரபேல் விமானம்தான்!

மோடி ஆட்சியின் ஊழல் வானத்தைத் தாண்டியது என்பதற்கான உதாரணம் ரபேல் விமானம் தான்!

அது சில ஆண்டுகளுக்கு முன்னால் பூதாகரமாகக் கிளம்பியது. பின்னர் அமுங்கிவிட்டது என்று மோடி அரசு நினைக்கலாம். அப்படி அமுக்க முடியாது. இப்போது மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறது. மோடி அரசின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமான ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதை பிரெஞ்ச் ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினை வந்த போதே Agencie Francais Anti corruption(AFA) என்கிற அமைப்பிடம் அதன் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. விசாரணையின் போது ஒரு இந்தியத் தரகருக்கு ஒரு மில்லியன் யூரோக்கள் (சுமார் 8 கோடி ரூபாய்) கொடுக்கப்பட்டதாக விமானக் கம்பெனி டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ஆவணத்தில் பதியப்பட்டிருப்பதாகவும், அதற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லையென்றும் A.F.A. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விவரங்களை மீடியா பார்ட் என்கிற இணைய இதழ் தன் புலனாய்வுக்குப்பின் வெளியிட்டிருக்கிறது. இந்த முறைகேட்டில் ஆதாயம் பெற்ற இந்தியர் யார் என்பதை மோடி அரசு அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம் மேற்கொண்டார். அப்போது பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் வகையைச் சேர்ந்த 36 போர் விமானங்கள் வாங்கப்படும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் விமானங்களை வாங்க உடன்பாடு கையெழுத்தானது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த டெஃப்ஸிஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு கமிஷனாக வழங்கப்பட்ட தொகை குறித்து மீடியா பார்ட் என்ற பிரெஞ்ச் ஊடகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனமான ஏ.எப்.ஏ. விசாரணை நடத்தியதும், அப்போது இந்தத் தொகை வாடிக்கையாளருக்கான பரிசு என்று டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்திருப்பதாகவும் மீடியா பார்ட் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, இந்த கமிஷனால் ஆதாயம் பெற்ற இந்தியர் யார் என்பதை மோடி அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பரிவர்த்தனையில் யாருக்கும் எந்தவித கமிஷனும் வழங்கப்படுவது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் டசால்ட் நிறுவனத்தின் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யலாம். மேலும் அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும் உடன்படிக்கையில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள சுர்ஜிவாலா, இந்த முறைகேடு தொடர்பாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது, ரபேல் விமானம் வாங்கியதில் ஒரு இடைத்தரகருக்கு சுமார் 8 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. அந்த இடைத்தரகர் யார் என்பதே இப்போதைய கேள்வி! இது வெறுமனே இடைத்தரகருக்கான தொகை மட்டும்தான். விமானத்தின் விலையைக் கூட்டித்தர அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தரப்பட்ட தொகை இதில் வராது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையையும் இப்போது தரப்பட்ட தொகையையும் சொன்னால் இந்த ஊழலின் விஸ்வரூபம் தெரியும்.

Also Read: ரஃபேல் விமான கொள்முதலில் இடைத் தரகருக்கு 9 கோடி லஞ்சம்: இந்த ஊழலுக்கு பாஜக அரசு என்ன சொல்ல போகிறது? 

காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் ஆகும். இப்போது பா.ஜ.க. ஆட்சியில் மொத்தமே 36 விமானங்கள்தான் வாங்கப் போகிறார்கள். ஆனால் ஒரு விமானத்தின் விலை 1670 கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகம். அதாவது மூன்று மடங்கு அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டது ஏன்? அதில் லாபம் அடைந்தவர்கள் யார்? அடைந்த லாபம் எவ்வளவு? என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை.

இது சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்புடைய விவகாரம். விமானத்தை விழுங்கிவிட்டு ஏப்பம் விடப்பார்க்கிறது மோடி அரசு. 2016ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரம் பொதுவெளியில் பேசப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இழுத்தடித்துக் கொண்டே வருகிறார்கள். 36 விமானங்களில் 14 விமானங்கள்தான் இதுவரை வந்து சேர்ந்துள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி தொடர்ந்து சொல்லி வருகிறார்.

அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாதது மட்டுமல்ல; ஆதாரம் உண்டா என்றும் பா.ஜ.க. அரசு கேட்டு வந்தது. இதோ இப்போது முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில் புதிய உண்மை ஒன்று வெளிப்பட்டுள்ளது. இந்திய அரசுக்கும் பிரான்சு அரசுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்கள் எப்படி நுழைந்தார்கள்? இடைத்தரகர் என்ற பெயரால் நுழைந்தவர் முகம் என்ன? முகவரி என்ன?

Also Read: ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை 115% அதிகரிப்பு : விலை உயர்வு மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!