murasoli thalayangam
தமிழ் பற்றாளரான மோடியும் அமித்ஷாவும் தமிழுக்கு செய்த கெடுதல்கள் என்ன தெரியுமா? வெளுத்து வாங்கிய முரசொலி!
பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ஏற்பட்டுள்ள தமிழ்ப்பாசத்தை பார்க்கும் போது புல்லரிக்கிறது. இருவரும் பதவி காலியானதும் தமிழ்நாட்டுக்கு தமிழ்ப் படிக்க வந்துவிடுவார்கள் போல அந்தளவுக்கு வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்!
"அழகான தமிழ் மொழியை கற்க முடியவில்லையே" என்று வருந்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "தமிழ் உலகின் தொன்மையான மொழி. என்னால் தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லை. இது ஒரு அழகான மொழி. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் தரம் குறித்தும், தமிழ் கவிதைகளின் ஆழம் பற்றியும் பலரும் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் விழுப்புரம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, "பாரத நாட்டின் புராதன மொழி இனிமையான மொழியான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழியை படிக்கவும் திருவள்ளுவரை படிக்கவும் ஆர்வமாக உள்ளேன்" என்று சொல்லி இருக்கிறார். இப்படி அவர்கள் இருவரும் பேசியதற்கு பாராட்டுச் சொல்லத்தான் வேண்டும். இவ்வளவு தமிழ்ப்பற்றுக் கொண்ட இவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்? நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெடுதல் செய்யாமலாவது இருக்கலாமே? செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையே மூடத் திட்டமிட்ட அரசுதான் பா.ஜ.க. அரசு. சென்னையில் தனித்து இயங்கிய அந்த நிறுவனத்தை மைசூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்க பா.ஜ.க. அரசு திட்டமிட்டது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த பிறகுதான் அந்த முடிவை ஒத்திவைத்ததாக சொல்லி இருக்கிறார்கள்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. அதாவது, புதிய தேசிய கல்விக் கொள்கை ஆவணத்தில் அனைத்து செம்மொழி ஆராய்ச்சி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படும்; அதே நேரத்தில், பல்கலைக்கழகத்திற்குள்ளாக அவை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிச் சொல்லி தனித்து சென்னையில் இயங்கும் நிறுவனத்தை காலி செய்யப் பார்த்தார்கள். இது தொடர்ந்து நடந்து வருகிறது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் ஒரு துறையாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அப்போதும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்படி ஏதும் திட்டம் இல்லை என்று அன்றும் அமைச்சர் ஜவடேக்கர் சொன்னார்.
அதே கொள்கையை இப்போதும் செயல்படுத்த துடித்தார்கள். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் என்பது ஏதோ கல்வி நிறுவனம் அல்ல. பல்கலைக்கழகமோ கல்லூரியோ அல்ல. ஈராயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்கு ஒரு அரசு செய்து தரவேண்டிய மாபெரும் மரியாதை அது. அதனை தனித்து இயங்க விடுவதே மத்திய அரசாங்கத்தின் கடமையாகும்! செம்மொழி தமிழ் உயராய்வு மையம் என்ற பெயரில் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்டு 2008-ம் ஆண்டு மே 19 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவனமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது முயற்சியால் செயல்பட்டு வருகிறது. 2011 கழக ஆட்சி முடிவுற்ற நிலையில் இருந்து, அதனை செயல்படாத அமைப்பாக மாற்றிவிட்டார்கள். சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழ் இதுபற்றி விரிவான செய்தியை வெளியிட்டது.
பத்து ஆண்டுகளாக செம்மொழி விருது வழங்கப்படவில்லை என்று அது குறிப்பிட்டு இருந்தது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும். இதில் மத்திய அரசால் மூன்று வகையான விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்பட வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக அவை தரப்படவில்லை. ‘கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' கடந்த பத்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. இதன் முதல் விருது பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவுக்கு 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு பத்து ஆண்டுகளாக யாருக்கும் வழங்கப்படவில்லை. 2011 - 16 வரையிலான ஆண்டுக்கான விருது அறிவிப்பு 2017 இல் வெளியானது. 2020 ஏப்ரலிலும் விருது அறிவிப்பு வெளியானது. இதற்கானமனுக்கள் பெறப்பட்டாலும் விருதுகள் வழங்கப்படவில்லை. "மத்திய அரசின் கீழ் செயல்படும் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநரை நியமிப்பதில் 14 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விருதுப் பணிகளும் முடங்கி விட்டன" என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியதாக தமிழ் இந்து எழுதுகிறது.
இதுதான் தமிழ்ப் பற்றாளர்களான மோடி, அமித்ஷா ஆட்சியில் தமிழின் நிலைமை. கடந்த ஆண்டு இறுதியில் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக் கழகங்களாக மத்திய அரசு தரம் உயர்த்தியது. இப்போது மத்திய பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்திற்காக தனித்துறைகளை உருவாக்குகிறது. ஆனால், தமிழுக்கு மட்டும் இருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை நிம்மதியாக இயங்க விடாமல் செய்து வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக ரூ.643 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. இந்தத் தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 29 மடங்கு அதிகம் என்கிறது ஒரு புள்ளி விபரம். 2017-18 ஆம் ஆண்டில் ரூ.198 கோடியும், 2018 - 19 ஆம் ஆண்டில் ரூ.214 கோடியும், 2019 - 20 ஆம் ஆண்டில் ரூ.231 கோடியும் சமஸ்கிருத வளர்ச்சிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018 - 19 ஆம் ஆண்டில் ரூ.4.65 கோடியும், 2019 - 20 ஆம் ஆண்டு ரூ.7.7 கோடியும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்ப் பாசமா? நடிப்பா? மனோன்மணியம் சுந்தரனார் சொன்னார், ‘உலக வழக்கு அழிந்து ஒழிந்த மொழிக்கு' எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? ‘அப்படி சிதையா இளமை மொழிக்கு' எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? இதன் மூலம் தமிழ்ப் பாசம் தெரிகிறதா? நடிப்பு தெரிகிறதா?
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!