murasoli thalayangam

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் திடீர் மரணம்; தொடரும் உயிரிழப்புக்கு காரணம் என்ன?: முரசொலி தலையங்கம் கேள்வி

கடந்த பிப்.5ஆம் தேதி வெளியான செய்திகளின்படி 20 நாள்களில் இந்தியாவில் 50 இலட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன. பிப்.4ஆம் தேதி மட்டும் 24 மணி நேரத்தில் 8041 அமர்வுகளில் 3 இலட்சத்து 10 ஆயிரத்து 604 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

கடந்த ஜன.16 ஆம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவெக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு நல்ல வரவேற்பு உலக நாடுகளிடையே இருந்து வருகிறது எனும் செய்திகள் கிடைக்கின்றன.

இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசிக் கேட்டு 25 நாடுகளிலிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன என்கிறார்கள். ஏற்கனவே 15 நாடுகளுக்கு மானியமாகவும், வணிக நோக்கிலும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. கோவெக்சின் இந்தியாவில் கண்டறிந்து இங்கேயே தயாரிப்பது; கோவிஷீல்டு வெளிநாட்டில் கண்டறிந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவது ஆகும். மூன்றாவது கட்டமாக 27 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்து இருக்கிறார்கள் என்கிறது அரசின் புள்ளி விவரங்கள்.

கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி தொடங்கி 2021 பிப்ரவரி 5ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 12,379 பேர் கொரோனாவினால் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தடுப்பூசிகள் இதுவரை 1,57,046 பேருக்குப் போடப்பட்டு இருக்கின்றன. இதில் 8,894 பேர் மருத்துவப் பணியாளர்கள்; 2502 பேர் மருத்துவ முன் களப்பணியாளர்கள் என்று தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் தடுப்பூசி போடப்பட்டதால் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாக மரணமடைந்தவரின் மனைவியின் கருத்துப் பதிவாகி ஒளிபரப்பாகியது. பிறகு அதுபோல் எதுவும் இல்லை என்று மறுப்புரைக்கப்பட்டது. இப்படிப்பட்ட செய்திகளை கவனமாகப் பதிவிட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்னமும் நாடு முழுமையும் தடுப்பூசிகள் போட வேண்டிய நிலையில்தான் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எடுத்துக்காட்டிற்காகச் சென்னை மாநகரில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தடுப்பூசிகள் 10 இலட்சம் டோஸ் கையிருப்பில் உள்ளன. அவை பாதுகாப்பாகக் குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுமையும் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் நிலையில் தடுப்பூசிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக அரசு முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அப்போது மக்களுக்குத் தடுப்பூசி பாதுகாப்பானது என்கிற ஒரு நம்பிக்கை மேலும் ஏற்படும். சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியைப் பயன்படுத்தி ஜன.31-இல் 11 பேர் மரணமடைந்ததாக செய்திகள் வந்தன. அவர்கள் அனைவரும் மருத்துவ முன்களப்பணியாளர்கள் எனப்பட்டனர்.

இதுகுறித்து 24 விஞ்ஞானிகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கும் இந்திய மருத்துவக் கட்டுப்பாடு உயர் அதிகாரி வி.ஜி.சோமானிக்கும் கடிதம் எழுதி இருக்கின்றனர். அந்த 11 பேர் மரணம் குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதைப் பற்றி கோவிட்19 தடுப்பூசியின் எதிர்விளைவுகளை ஆராயும் தேசியக் குழுவின் ஆலோசகர் (The Adviser to the National Adverse Event Following immunisation (AEFI) Committee for Covid - 19) என்.கே.அரோரா அம்மரணங்களைப் பற்றி ஆராய்ந்து பொது வெளியில் முன்வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

மேலே குறிப்பிடப்பட்ட 11 பேர் மட்டுமின்றி இன்னும் 16 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் எனும் செய்தியும் வேறு இருக்கிறது. ஆனால், இதற்கும் தடுப்பூசிப் போடப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும், இந்த 16 பேர் நிகழ்வு எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது எனும் செய்தியை AEFI இதுவரை வெளியிடவில்லை. ஆனால், இப்படி வெளிவரும் செய்திகளால் தடுப்பூசிப் பயன்பாடு சம்பந்தமாக ஓர் அச்சம், பதற்றம், பயம் மக்களுக்கு ஏற்படும். அதனைப் போக்க வேண்டியது அரசினுடய கடமையாதலால் 24 விஞ்ஞானிகள் அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கும் இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டு உயர் அதிகாரிக்கும் கடிதம் எழுதி கவனப்படுத்தியிருப்பது பாராட்டத்தகுந்த ஒன்றே ஆகும்.

கோவிட் - 19 தடுப்பூசியின் எதிர்விளைவுகளை ஆராயும் குழுவின் கூட்டம் பிப்.1 ஆம் தேதியும், 5ஆம் தேதியும் நடைபெற்று இருக்கிறது. அந்தக் குழுவின் ஆலோசகர் அரோரா இத்தகைய மரணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றின் முடிவுகளை உடனுக்குடன் நாங்கள் எங்களுக்குக் கிடைக்கிற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று கூறியிருப்பது ஆறுதலான விஷயமே ஆகும். 11, 16 என்ற எண்ணிக்கை சிறியதாக இருக்கிறது என்று மரணங்களில் பார்க்க முடியாது; பார்க்கவும் கூடாது.

இந்திய நாடு மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. இதுவரை 50 இலட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் தடுப்பூசிகள் பெரும் அளவில் பயன்படுத்தப்பட வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள். கொரோனாவிலிருந்து மீட்டெடுப்பதற்காகக் கண்டறிந்த தடுப்பூசியினால் மக்களுக்கு மரணம் நிகழ்ந்துவிடக் கூடாது. இதனால்தான் மரணம் நிகழ்ந்து விட்டது எனும் செய்தி நல்ல செய்தியாக இருக்க முடியாது.

ஆகவே கோவிட் -19 தடுப்பூசியின் எதிர்விளைவுகளை ஆராயும் தேசியக் குழு தடுப்பூசிக்குப் பிறகு எவருக்காவது மரணம் நிகழுமானால் அம்மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதை பொதுவெளியில் தெரிவிக்கும் என்கிற நம்பிக்கையை அக்குழுவின் ஆலோசகர் தெரிவித்து இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றே. விஞ்ஞானிகளின் கோரிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும் நாட்டு நலனில் அக்கறையுடைய அனைவருக்கும் பொருந்தக் கூடியதே.

Also Read: “நீர்நிலை சீரமைப்பு பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!