murasoli thalayangam
“கௌரவம் பார்க்காமல் விவசாயிகள் பிரச்சினைகளை சரி செய்ய முன்வர வேண்டும்” : முரசொலி தலையங்கம் வலியுறுத்தல்!
பிப்.1 ஆம் தேதி வெளிவந்த அத்தனை நாளேடுகளும் முக்கியச் செய்தியாக மத்திய நிதி நிலை அறிக்கையை வெளியிட்டிருந்தன. சாதக, பாதக செய்திகள் விமர்சனங்களாக இடம் பெற்று இருந்தன என்பது சூழ்நிலையைப் பொறுத்து இயல்பானதே ஆகும்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அன்றே நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகளின் பேரணி நடத்தப்படும் என்று அவர்களின் சங்கங்கள் அறிவித்து இருந்தன. ஆனால், பேரணி நடைபெறவில்லை. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து நாடாளுமன்ற பேரணியை விவசாயிகள் சங்கம் ஒத்திவைத்தது.
இதற்குக் காரணம் என்ன? ஜன.26ஆம் தேதி குடியரசு நாள். வழக்கமாக அரசு நடத்தும் குடியரசு நாள் பேரணிதான் நடைபெறும். ஆனால், இந்த முறை விவசாயப் பேரணியும் அதோடு மற்றொரு பகுதியில் குடியரசு தின விழா முடிந்தபிறகு நடைபெற்றது. இதற்குக் காவல்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர்.
டெல்லியின் மாபெரும் குடியரசு நாள் விழாப் பேரணி நடத்தும் நாள் அன்றே விவசாயிகள் நடத்தும் பேரணிக்குக் காவல்துறை அனுமதி வழங்குகிறது என்றால் அரசின் ‘தாராள’ மனப்பான்மை என்று இதனை நம்மால் கருத முடியவில்லை. அரசு ஏதோ ஒரு நோக்கத்தோடுதான் விவசாயப் பேரணிக்கு குடியரசு நாளில் அனுமதி வழங்கி இருக்கிறது. அந்த நோக்கமும் நிறைவேறிவிட்டது. அந்த நோக்கம் என்ன? விவசாயிகளின் பேரணியைச் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான்!
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியினரின் ஒரு பிரிவினர் செங்கோட்டையில் எப்படி முற்றுகையிட்டனர்? தேசியக்கொடி பறக்கும் இடத்தின் அருகே ஒரு மதத்தின் கொடியை உயர்த்தி உள்ளனரே, இது எப்படி சாத்தியமாயிற்று? செங்கோட்டையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு முன்னேறிய ஒரு பிரிவினர் - பா.ஜ.க ஆதரவாளர்கள் - விவசாயிகளின் போர்வையில் பேரணியில் இருந்தவர்களால் தான் செங்கோட்டை நிகழ்வுகளை நடத்தி இருக்க முடியும். உண்மையான போராட்டக்காரர்கள் அதனைச் செய்து இருக்க முடியாது. பா.ஜ.க.வினரின் ஊடுருவல் நிகழ்ந்து இருக்கிறது.
ஜன.31ஆம் தேதி நடைபெற்ற மனத்தின் குரலில் பிரதமர் மோடி, செங்கோட்டை நிகழ்வு குறித்து தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதால் ‘இந்தநாடே துயரத்திற்குள்ளானது’ என்று பேசியிருக்கிறார். இப்படி அவமதிப்பு நிகழ்ந்ததற்கு யார் காரணம்? பிரதமர் நரேந்திர மோடி அல்லவா? விவசாயிகளின் போராட்டக் குழுவினரிடம் 11 சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைய பிரதமர் விடலாமா? கௌரவம் பார்க்காமல் இந்தப் பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பங்கேற்று இருந்திருக்கலாம். அதனை அவர்கள் செய்ய முன்வரவில்லை.
நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலை மிக மோசமாக இருக்கிறது. இந்தியா உலகப் பசிப்பட்டினி அட்டவணையில் 94-ஆவது இடத்தில் இருக்கிறது. பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மய்யத்தின் ஆய்வறிக்கையின்படி, 1 கோடியே 70 இலட்சம் பேர் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் பில்லியனர்கள் என்ற பணக்காரர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.
கொரோனா காலத்திலும் அவர்களின் நிகர லாபம் 569 சதவிகிதம் கூடியிருக்கிறது. 10,000க்கு 6 மருத்துவர்கள் என்ற அடிப்படையிலேயே மருத்துவர் விகிதாசாரம் இருக்கிறது. இப்படி நாட்டின் முன்னே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதைப் போல உள்ள பிரச்சினைகளை அரசு சரி செய்ய முன்வர வேண்டும்.
ஆனால், அரசு என்ன செய்கிறது? பா.ஜ.க.வின் மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களை வளர்த்துவிடுவதற்கும் அரசுத் துறைகளைத் தனியார்மயம் ஆக்குவதற்கும் தொழிலாளர் சட்டங்களையும், வேளாண் சட்டங்களையும் அவர்களுக்கு எதிராக இயற்றிவருவதோடு மதச்சார்பின்மை கொள்கையையும் புறக்கணித்துக் கொண்டு வருகிறது.
விவசாயப் போராட்டம் 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தினால், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அதில்கூட சரியான எண்ணிக்கை இன்னமும் தெரியவரவில்லை. இவ்வளவுக்கும் காரணம் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டதுதான் !
இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட முறையில் தவறு இருக்கிறது. ஜனநாயக வழிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. இச்சட்டங்களைக் கொண்டு வர கொரோனா காலத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அரசு இன்னமும் விளக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி வாய்மொழி மூலம் கூறி வரும் அரசு, அது குறித்துச் சட்டம் செய்யவோ, உறுதிமொழி வழங்கவோ முன்வரவில்லை.
இப்போதைய நிலையில் அரசு, இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைத்து இருக்கிறது. இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாகிவிடுமா? பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியுமா என்றால் ‘இல்லை’ என்றே சொல்லும்படியாக இருக்கும். பின் ஏன் 18 மாதங்களுக்கு சட்டத்தை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்? வேண்டுமானால் 2 ஆண்டுகள் வரையும் சட்டங்களை நிறுத்தி வைக்க மத்திய அரசு ஆயத்தமாக இருக்கிறதே, அது ஏன்?
இதன் மூலம் பிரச்சினையை ஆறப் போடுகிறது அரசு. விவசாயிகளின் நியாயமான உணர்வினை நீண்ட நாளைக்கு நீட்டிக்கவிடாமல்செய்வதற்கும், அதன் பிறகு மீண்டும் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் செய்கிற ஓர் இடைவேளை தந்திரமே தவிர, இதனால் மத்திய அரசு பிரச்சினையைத் தீர்த்ததாகச் சொல்ல முடியாது. ஆகவேதான், விவசாயிகள் இதனைப் புரிந்து கொண்டு போராட்டங்களை டெல்லியில் அப்படியே முகாமிட்டு தொடருகிறார்கள் என்கிற செய்திகள் வெளிவருகின்றன.
அதேநேரத்தில் இங்கு எல்லைப் பகுதியிலும் விவசாயிகள் போராடுகிற பகுதிகளிலும் காவல் துறை, துணை இராணுவப் படை, அதிரடிப்படை, மத்திய ரிசர்வ் படை குவிக்கப்பட்டு வருகிறது. இவை அரசினுடைய சமாதானப் போக்காக நமக்குத் தெரியவில்லை. விவசாயிகளும் களத்திலிருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை.
59 விவசாயிகளின் தலைவர்களை அரசு தேடப்படும் நபர்களாக அறிவித்து இருக்கிறது. போராட்டக் களத்தில் அரசும், மக்களும் இருப்பது ஜனநாயக மரபு முறை பேணப்படும் காலத்தில் ஏற்புடையது என்று உலகம் கூறாது. ஆகவே, இந்திய மக்கள் டெல்லியில் விவசாயப் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? - என்ற வினாவை எழுப்பிப் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
மாநில அரசுப் பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்திய அரசு தாம் எடுத்துக் கொண்டு சட்டம் செய்ததுமன்றி விவசாயிகளையே பா.ஜ.கவின் மத்திய அரசு அழிக்க நினைப்பது தேசியக் கொடியை அவமதித்தது போலவே கருதப்படும் மற்றொரு அவமதிப்பு என்றே நாம் கருது கின்றோம். ஆகவே, இதற்கு தீர்வு என்பது சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது ஒன்றே ஆகும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!