M K Stalin
பேரா.கலையரசன் கைது: “சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளை கண்டறிய வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள், மக்கள் விரோத செயல்களை பற்றி விமர்சித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவது என்பது வாடிக்கையாகி வருகிறது. பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் பல செயல்களில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக எதிர்க்கட்சிகளை குறிவைத்து கைது நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபட்டு வருவதற்கு, நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்தும், இன்னும் திருந்தாமல் அதே செயலை செய்து வருகிறது. அதோடு மக்கள் தங்கள் உரிமைக்காக எழுப்பும் குரலையும், போராட்டத்தையும் அடக்க முயற்சித்து, அவர்கள் மீது தவெக அரசின் போலீசார் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல பொருளாதார நிபுணரும், 'The Dravidian Model' என்ற ஆங்கில நூலின் ஆசிரியர்களில் ஒருவரும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியருமான முனைவர் கலையரசன் அண்மையில் தமிழ்நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றியும், விலையேற்றம் பற்றியும் பேசியிருந்தார். இவரது பேச்சை தொடர்ந்து கடந்த அக்.28 அதிகாலை நேரத்தில் சீருடை இல்லாத போலீசார் கலையரசனை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு, திரும்ப கொடுக்காத போலீசார், அவரிடம் போலி இன்ஸ்டா கணக்கு குறித்து விசாரித்துள்ளனர். இவரது புகைப்படம் வைத்து, வேறொரு பெயரில் உள்ள அந்த போலி கணக்கின் மூலம், பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ காமாட்சியைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதாக இவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து தனக்கு அந்த கணக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இவர் தொடர்ந்து கூறி வரவே, சில மணி நேரம் கழித்து, இவரிடம் இதுகுறித்து எழுதி பெற்றுக்கொண்டு, அவரது வீட்டில் வந்து இறக்கிவிட்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் கலையரசன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இதுகுறித்து அவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், இதற்கு திமுக தலைவர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இது காவல்துறையின் தவறு என்றும், இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், தவறுக்கு மன்னிப்பு கூட கேட்காதது பலர் மத்தியிலும் விமர்சனங்களை எழுப்பியது.
இந்த நிலையில், இந்த சதியில் ஈடுபட்டவர்களை கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :-
கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி!
விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு! விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால்; காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல!
Fake ID-யின் Comment-ஐக் காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன் அவர்கள், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்!
சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
Also Read
-
அரசு பணியை தனியார் மயமாக்க சதி : தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்த த.வெ.க அரசு - பகீர் தகவல்!
-
“த.வெ.க ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடுத்திருக்கும் தமிழ்நாட்டு பெண்கள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Inky Pinky Ponky போட்டு தப்பிக்கும் கைதிகள்.. ‘மெத்’ அரசின் மெத்தனப்போக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“துப்பில்லாத ஆட்சியில் பெப்பர் ஸ்பிரேயாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்” : கனிமொழி எம்.பி. விமர்சனம்!
-
த.வெ.க ஆட்சி பாசிச ஆட்சிதான் ; விஜய் ஒன்றும் அப்பாவி அல்ல - முரசொலி தலையங்கம் கடும் சாடல்!