M K Stalin
“ஆட்டோ மாணிக்கத்தை, ‘பாட்ஷா’வாக மாற வைத்துவிட்டது பா.ஜ.க!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (ஏப். 18) மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:
“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”! “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் தமிழ்நாட்டு மக்களான உங்களையே சேரும்” என்று மகிழ்ச்சியாக நான் பாடும் அளவிற்கு, நேற்று மிகப்பெரிய வெற்றிச் செய்தியைப் பெற்ற மகிழ்ச்சியோடு கம்பீரமாக இந்த மேட்டுப்பாளையத்திற்கு வந்திருக்கிறேன்.
நேற்று கொடைக்கானல் இருக்கும் திண்டுக்கல்லுக்குச் சென்றுவிட்டு, இன்றைக்கு மலைகளின் அரசியான ஊட்டி இருக்கும் நீலகிரி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். கோவை மாவட்டத் தொகுதிகளின் வேட்பாளர்களுக்கும் சேர்த்தே ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
இங்கு எனக்கு முன்பு, பீகாரின் இளஞ்சிங்கம் - ‘Young Lion of Bihar’ என் இனிய சகோதரர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் பேசினார். வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தொகுதி மறுவரையறை என்பது முழுக்க முழுக்க பா.ஜ.க. என்ற ஒரு கட்சிக்குச் சாதகமான சட்டம் என உணர்ந்து, இவருடைய R.J.D. கட்சியும், ‘உத்தரப் பிரதேசத்தின் ஒளிவிளக்கு’ சகோதரர் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும் அந்தச் சட்டத்தை எதிர்த்திருக்கிறார்கள்.
இது சாதாரண விஷயம் அல்ல; தேச நலன் மற்றும் மாநில உரிமைகளுக்காக தங்களது தந்தைகளின் வழியில், முதிர்ச்சியோடு, பக்குவத்தோடு செயல்பட்டிருக்கிறார்கள். அதற்காகத் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக, இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவரின் சார்பில், சகோதரர் தேஜஸ்வி அவர்களுக்கும், அகிலேஷ் அவர்களுக்கும், இந்த நேரத்திலே நீங்கள் எல்லாம் எழுந்து நின்று கை அசைத்து நன்றியை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தேஜஸ்வி அவர்கள் பேசும்போது, திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொழில் நகரங்களிலே நமது வடமாநில சகோதரர்கள் மரியாதையோடும், பாதுகாப்போடும் பணி செய்வதைப் பற்றி அவர் குறிப்பிட்டுச் சொன்னார். எந்த மாநிலத்தவராக இருந்தாலும் சரி, தமிழ்நாடு வந்தாரை வாழவைக்கும்! தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் உழைக்கும் தொழிலாளர் தோழர்களை எப்போதுமே நாங்கள் நன்றாகப் பாதுகாப்போம்!
இப்போது உங்கள் அனுமதியோடு நம்முடைய வெற்றி வேட்பாளர்களை நான் அறிமுகப்படுத்தப் போகிறேன்.
முதலில், குன்னூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கே.எம். ராஜு அவர்கள். நாற்பது ஆண்டுகளாகக் கழகத்துக்கு உழைக்கும் உண்மைத் தொண்டர். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து, இப்போது மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆகியிருக்கிறார். அவரைச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி. ராமச்சந்திரன் அவர்கள். உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் பணியாற்றி, சிறந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர் எனச் சான்றிதழ் பெற்றவர். காங்கிரஸ் கட்சியின் உதகை வட்டாரத் தலைவரான அவருக்கு, நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, கூடலூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மு. திராவிடமணி அவர்கள். பத்தாண்டு காலம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாகப் பணி ஆற்றியவர். பல்வேறு நலத்திட்டங்களை அந்தத் தொகுதிக்குக் கொண்டு வந்திருக்கிறார். மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் அவர்கள். வடக்கு ஒன்றியச் செயலாளர் கல்யாணசுந்தரம் அவர்களின் துணைவியார். தடகளம், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறந்த வீராங்கனை. மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கும் சகோதரி கவிதா அவர்களுக்கு, நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் அவர்கள். நரசிபுரம் ஊராட்சித் தலைவராக இருந்தவர். 2010-ஆம் ஆண்டு சிறந்த ஊராட்சிக்கான உத்தமர் காந்தி விருதைப் பெற்றவர். தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியான இவருக்கு, நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.பி. சூரியபிரகாஷ் அவர்கள். கோவை மாநகராட்சி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக – மண்டல சமூக வலைத்தளப் பொறுப்பாளராக இருந்து, சிறப்போடு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக உயர்ந்திருக்கிறார். அவருக்குக் கை சின்னத்தில் நீங்கள் ஆதரவு தந்திட வேண்டும்.
இவர்கள் அனைவரின் வெற்றியும் உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் உட்காரலாம்! உங்களுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது. சீட் கன்ஃபார்ம்!
கோவை மாவட்டத்துக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் செய்திருக்கும் பணிகளை, இதற்கு முன்பே நான் பல்வேறு கூட்டங்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன். அதனால் நீலகிரிக்குச் செய்த பணிகளை நான் முதலில் சொல்ல விரும்புகிறேன்.
உங்களுக்கே தெரியும்... நீலகிரிக்கு அடிக்கடி மலர்க் கண்காட்சி தொடங்கி வைக்க நான் வந்திருக்கிறேன்.
குழந்தைகளுக்கான “ஊட்டச்சத்தை உறுதி செய்” முகாம்களைத் தொடங்கி வைக்க முத்தோரை பகுதிக்கு வந்தேன்.
ஜான் சுல்லிவன் சிலை திறப்பு,
தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பாகர்கள் குடியிருப்புத் திறப்பு எனப் பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறேன்.
இங்கே வரும்போதெல்லாம் தோடர்கள், படுகர்கள், இருளர்கள் எனப் பழங்குடியின மக்களைச் சந்தித்து, அவர்களின் தேவைகளை எல்லாம் நான் தீர்த்துக் கொடுத்திருக்கிறேன்.
அந்த வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக கூடலூரில் மனித விலங்கு மோதலைத் தடுக்க, யானைகள் கிராமப் பகுதிக்குள் நுழைவதைக் கண்டறியும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்புப் பணி பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினருக்கு 32 வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
37 கோடி மதிப்பீட்டில் சுகாதார மையங்கள்.
768 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா.
குன்னூரில் புதிய அரசுக் கல்லூரி.
நீலகிரி பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை.
அதிநவீன தொழில்நுட்ப மருத்துவக் கருவிகளோடு 143 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த அரசு மருத்துவக் கல்லூரி கட்டடம். மலைப்பகுதியில் இதைக் கட்டி முடித்ததே பெரும் சவாலான காரியம். அதை நாம் செய்திருக்கிறோம்.
நீலகிரியில் காட்டேரியிலிருந்து காந்திபேட்டை வரைக்கும் மாற்றுப் பாதை சாலை.
நீலகிரி வரையாடு திட்டம்.
முதுமலைப் புலிகள் காப்பகம்.
கூடலூரில் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு.
பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான போனஸ்கூட வழங்கப்படாத நிலையில், திராவிட மாடலில் ஆட்சியில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 பர்சென்ட் போனஸ்.
தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு.
ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன.
இதேபோன்று, ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்குப் பணிக்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், கோவை மாவட்டத்துக்குச் செய்த ஒரு சில பணிகளையும் நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
மேட்டுப்பாளையத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம்.
மாணவர்களின் நலனுக்காகப் புதிய அறிவுசார் மையம்.
காரமடை விவசாயிகளின் நலனுக்காகத் தோலம்பாளையம் அடுக்கல் மடுவு பகுதியில் புதிய தடுப்பணை.
விளாமரத்தூர் உட்பட 9 குடிநீர் திட்டப் பணிகள்.
பில்லூர் தோலம்பாளையம் மலைப்பகுதிகளுக்கும் பேருந்து வசதி.
தொண்டாமுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் புதிய கட்டிடங்கள்.
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மனித - வனவிலங்கு மோதலைத் தடுக்கும் வகையில் கம்பி வேலிகள்.
வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் இளைப்பாறும் மண்டபம், மருத்துவ மையச் சுகாதார வளாகம்.
இவ்வளவும் செய்துவிட்டுத்தான் உங்களுடைய ஆதரவை நான் உரிமையோடு கேட்க வந்திருக்கிறேன்.
அதுவும் இங்கே பெண்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவருமே ஒரு முறையாவது விடியல் பேருந்தில் பயணித்திருப்பீர்கள் அல்லவா... ஆட்சிக்கு வந்த முதல் நாள் நான் போட்ட முதல் கையெழுத்தே இந்தத் திட்டத்துக்குத்தான்! எவ்வளவோ திட்டங்கள் இருந்தாலும், முதல் திட்டமாக நான் ஏன் இதை செலக்ட் செய்தேன் தெரியுமா?
“இந்த ஆட்சியே மகளிருக்கான ஆட்சியாக இருக்கப் போகிறது!” என்ற மெசேஜ்–ஐ அனைத்துப் பெண்களுக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்! நான் போடும் முதல் கையெழுத்திலேயே இந்த மெசேஜ், சென்னை சிட்டியிலிருந்து சின்ன கிராமம் வரை சென்று சேர வேண்டும் என்றுதான் அந்த முடிவை எடுத்தேன்! தமிழ்நாட்டுப் பெண்களுக்காக இந்த அண்ணன் இருக்கிறேன் என்று நான் கொடுத்த பவர்ஃபுல் சிக்னல்தான் அது!
மாதம் 800 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரை பெண்களுக்கு இதனால் காசு மிச்சமாகிறது என்று சர்வேயிலிருந்து கணக்கு வந்தது. அது எதிர்பார்த்ததுதான்!
நான் எதிர்பார்க்காத இன்னொன்றும் சர்வேயில் வந்தது. அது என்னவென்றால், இப்படி மிச்சமாகும் பணத்தில் பெண்கள் தாங்கள் விரும்பிய உணவை வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
நம்முடைய பெண்கள் எப்போதுமே தான் சாப்பிடவில்லை என்றாலும், மற்றவர்கள் சாப்பிட்டாலே போதும் என்று நினைப்பார்கள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை கறி வாங்கினால்கூடக் கணவர், பிள்ளைகள் சாப்பிடட்டும் என்று நினைப்பார்கள். நடைமுறையில் அது போன்றுதான் இருக்கிறது. நான் அதைத்தான் சொல்கிறேன்... ஆனால் உங்களுக்கு என்னுடைய அட்வைஸ் - அப்படி இருக்காதீர்கள். நீங்களும் நன்றாகச் சாப்பிட்டு ஸ்ட்ராங்காக இருங்கள். பெண்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்தான் நம்முடைய தமிழ்நாடும் ஸ்ட்ராங்காக இருக்கும்.
அந்த விடியல் பயணம் திட்டத்திற்கு கூடுதல் செலவாகிறது என்று அதிகாரிகள் சொன்னபோது, நான் சொன்னேன். நான் இதைக் கூடுதல் செலவு என்று கருதவில்லை. நமக்குப் பிடித்தவர்களுக்காக நாம் செய்யும் எதையும் செலவாக – சுமையாக நாம் கருதக் கூடாது!
என் சகோதரிகள், என் மகள்கள் வெளியில் பயணிக்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், வேலைகளுக்குப் போக வேண்டும் - இதற்காக எத்தனை ஆயிரம் கோடி ஆனாலும் பரவாயில்லை. இந்தத் திட்டம் தொடரும். இன்னும் மேம்படுத்தி, திராவிடமாடல் 2.0 ஆட்சியில் புதிய பேருந்துகளை நாம் இயக்கப் போகிறோம்.
அடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! நிறைவேற்றவே முடியாது என்று நிறைய பேர் சவால் விட்டார்கள். உங்கள் ஆதரவோடு நிறைவேற்றிக் காட்டிவிட்டேன்! அக்கவுண்ட்டில் மாதம் 15–ஆம் தேதி ஆனால், ஆயிரம் ரூபாய் வருகிறதா? இல்லையா... அடுத்த திராவிட மாடல் ஆட்சியில் எவ்வளவு? 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறேன்.
இதற்குப் பெயர் வைக்கும்போது, நான் மிகவும் பர்ட்டிகுலராக, இது உதவித் தொகை அல்ல; உரிமைத் தொகை என்று இந்தப் பெயரை தேர்வு செய்தேன்! ஏனென்றால், பெண்களுடைய உழைப்பு இல்லாமல், இந்த உலகமே இல்லை!
அதுவும் வீட்டில் நம்முடைய பெண்கள் உழைக்கும் உழைப்பு, சாதாரண உழைப்பா? இதைப் பற்றி நான் சேலத்தில் கூடப் பேசினேன். நிறைய பெண்கள் “எங்களுடைய மனதிலுள்ள பாரமெல்லாம் குறைந்துவிட்டது” என்று எனக்கு கமெண்ட் பண்ணியிருந்தார்கள். தகவல் கொடுத்திருந்தார்கள். சேலத்தில் நான் பேசியது, நூற்றுக்கு நூறு யதார்த்தமான உண்மை!
பெண்களின் தினசரி ரொட்டீனை சொல்லட்டுமா… அனைவருக்கும் முன்பு நீங்கள்தான் காலையில் எழுந்திருப்பீர்கள். வீட்டைப் பெருக்கி, வாசலில் தண்ணீர் தெளித்து, கோலம் போட வேண்டும். குளித்துவிட்டு, அனைவருக்கும் டீ, காபி போட வேண்டும், குழந்தைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ண வேண்டும். அவர்களை எழுப்புவதே பெரும் தொல்லை!
அடுத்து, சமைக்க வேண்டும். சமைப்பதைப் விடப் பெரிய பிரச்சினை என்ன சமைப்பது என்று ஒவ்வொரு வேளையும் யோசிப்பது. சமைத்து முடித்ததும் பாத்திரம் சேர்ந்துவிடும். அதை அப்படியே விடமாட்டீர்கள். அதைக் கழுவி, கவிழ்த்து, காய வைத்தால்தான் பல பெண்களுக்கு நிம்மதியே. உண்மைதானே?
இது முடிந்தால், துணியைத் துவைத்து, காய வைத்து, மடித்து வைக்க வேண்டும். அதில்கூட நம்முடைய ஆண்கள் சட்டை, பேண்ட் எல்லாம் அப்படியே போட்டுவிடுவார்கள். பாக்கெட்டில் என்ன இருக்கிறது என்று பெண்கள்தான் செக் பண்ணிவிட்டுத் துவைப்பார்கள். அதுமட்டுமல்ல, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, வீட்டுக்குத் தேவையான பொருட்களை விலைவாசிக்கேற்ப பட்ஜெட் போட்டு வாங்குவீர்கள். கடைக்கு வீட்டு ஆண்களை அனுப்பினால், அவர்களுக்கு ஒழுங்காக காய்கறிகூட வாங்கத் தெரியாது என அவர்களைப் பற்றி நீங்கள் கம்ப்ளெயின்ட் செய்வீர்கள்.
இதுபோக, மாவு அரைத்து வைக்க வேண்டும், தண்ணீர் வந்தால் பிடித்து வைக்க வேண்டும், பிள்ளைகளை ஹோம் வொர்க் பண்ண வைக்க வேண்டும்.
அப்பப்பா! சொல்லி முடிக்கவே எனக்கு மூச்சு வாங்குகிறது. அப்போது இதெல்லாம் எவ்வளவு கஷ்டம்? இதெல்லாம் பண்ணிவிட்டு நிறைய பேர் வேலைக்கும் போகிறார்கள். பெண்கள் அனைவரும் ஒரு நாள் ஸ்டிரைக் செய்தால்கூட நம்முடைய வீடுகள் இயங்காது. உண்மை! எந்த ஆணாலும் நிம்மதியாகத் தன்னுடைய வேலையைச் செய்ய முடியாது!
ஆனால், “உங்க ஒய்ஃப் என்ன பண்றாங்க?” என்று கேட்டால், பல பேர் ரொம்பச் சாதாரணமாக சொல்வார்கள். “வீட்டுல சும்மாதான் இருக்குறாங்க” என்று சொல்லிவிடுவார்கள். இல்லையென்றால், ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்று சொல்லிவிடுவார்கள். அந்த எண்ணத்தை உடைக்க வேண்டும். அதற்காகத்தான் உரிமைத்தொகை!
சில ஆண்கள்கூடக் கோபித்துக் கொண்டார்கள். “தலைவரே நாங்களும்தான் கஷ்டப்படுகிறோம்” என்று சொன்னார்கள். உண்மைதான்! நான் மறுக்கவில்லை. ஆனால், ஆண்கள் உழைத்தால் அதற்கு அங்கீகாரம் இருக்கிறது. பெண்களுக்கும் அந்த அங்கீகாரம் இருக்க வேண்டும்! அப்படி ரெஸ்ட் இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு இந்த அரசு தரும் ரெஸ்பெக்ட்-தான் உரிமைத்தொகை!
இதேபோன்று, மற்றுமொரு புரட்சித் திட்டம், புதுமைப்பெண்! பெண்களின் படிப்புக்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று உருவாக்கப்பட்ட திட்டம்! இந்தத் திட்டம் வந்த பிறகு, பெண்கள் கல்லூரியில் சேருவது 34 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. அதிலும் நிறைய பேர் கிராமப்புறப் பெண்கள்! பெண்களுக்குக் கணவனைவிடக் கல்விதான் பெருந்துணை எனக் காட்டியிருக்கும் திட்டம்தான், புதுமைப்பெண்! திராவிட மாடல் 2.0 ஆட்சியில், ஆயிரத்து 500 ரூபாயாக இது உயரப் போகிறது!
அடுத்து, காலை உணவுத் திட்டம்! 19 லட்சம் தாய்மார்களைக் காலையில் எழுந்து சமைக்கும் சுமையிலிருந்து விடுவிக்கும் திட்டம்தான், இந்தத் திட்டம்! “ஸ்டாலின் அண்ணனே, ஸ்கூல்ல சாப்பாடு போடுறார்” என்று, அவர்கள் நிம்மதியாகப் பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.
இதுபோக, எந்தக் கம்பெனி தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வந்தாலும், நாங்கள் சொல்லும் ஒரே ஒரு கண்டிஷன் என்ன தெரியுமா? பெண்களுக்கு இதனால் எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லுங்கள் என்பதுதான். பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் அந்தக் கம்பெனிகளுக்கு அரசு சார்பாகக் கூடுதல் சலுகை தருகிறோம்.
அதுமட்டுமல்ல, பெண்கள் பெயரில் சொத்துப் பதிவு செய்தால், அதற்கும் சலுகை அறிவித்திருக்கிறோம்.
அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுத்தால், அதையும் பெண்கள் பெயரில்தான் இப்போது கொடுக்கிறோம்.
மேலும், நம்முடைய பெண் பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறையோடு, 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை அரசே கட்டணமில்லாமல் வழங்குகிறது.
“ஏன் பெண்களுக்காக இவ்வளவு திட்டங்கள்?” எனச் சிலர் கேட்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்துத் திரும்பிக் கேட்கிறேன், கொடுத்தால் என்ன தப்பு? சமூகத்தில் சரிபாதி பெண்கள்தான் இருக்கிறார்கள். பெண்கள் வளராமல், தமிழ்நாடு வளராது! பெண்கள் வளர்ச்சியில் அக்கறையுடன் மட்டும் செய்யவில்லை, ஒட்டுமொத்த மாநிலத்தின் மீதும் அக்கறையோடுதான் இதைச் செய்கிறோம்! பெண்கள் நன்றாக இருந்தால், நாமும் நன்றாக இருப்போம்.
ஒரு ஆண் வெற்றியடைந்தால் – வளர்ச்சியடைந்தால் வீட்டில் இருக்கும் பெண்கள்தான் முதல் ஆளாக மகிழ்ச்சியடைகிறார்கள். நான் இன்னும் வெளிப்படையாக சொல்கிறேன். நான் முதலமைச்சரானபோதுகூட, என்னைவிட என் மனைவிதான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினார்கள். அந்தக் காட்சியெல்லாம் பார்த்திருப்பீர்கள்.
அப்படி நம்முடைய மனைவி, மகள், சகோதரி முன்னேற்றம் அடைவதைப் பார்த்து, நாமும் மகிழ்ச்சியடைய வேண்டும். அவர்களுக்குச் சென்று சேரும் திட்டம் அனைத்தும் நிச்சயமாக ஆண்களுக்கும் மறைமுகமாகப் பயனளிக்கும். அதனால்தான் பெண்களுக்காக இத்தனை திட்டங்கள்!
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் இப்படியெல்லாம் திட்டங்களைப் பட்டியல் போட்டுச் சொல்ல முடியுமா... ஏதாவது இருந்தால்தானே சொல்வதற்கு.
ரீசண்டாக கோவைக்கு வந்து என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? கரூர் மக்கள் செந்தில் பாலாஜியைப் புறக்கணித்த காரணத்தால், அவர் கோவை தெற்குத் தொகுதிக்கு வந்து போட்டியிடுகிறார் என்று மிஸ்டர் பழனிசாமி பேசியிருக்கிறார்.
மிஸ்டர் பழனிசாமி! செந்தில் பாலாஜி அவராகக் கோவைக்கு வரவில்லை. நான்தான் வரவழைத்திருக்கிறேன். கரூரில் கழகத்தின் வெற்றி கன்ஃபார்ம்! கோவையிலும் வெற்றியை கன்ஃபார்ம் பண்ணச் சொல்லி நான்தான் அவருக்குக் கோவையில் டியூட்டி போட்டிருக்கிறேன். 2024 தேர்தலிலேயே பார்த்தீர்கள் இல்லையா... செந்தில் பாலாஜி வந்தார், உழைத்தார், வெற்றியை உறுதி செய்தார் அல்லவா... இதனால்தான் பழனிசாமி, இப்போது பயந்தசாமியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
கோவையில் 2021-ஆம் ஆண்டு நடந்தது, நிச்சயமாக இந்த முறை நடக்காது! கோவை முழுவதும் இந்த முறை நாங்கள்தான் வெல்வோம்! நாங்கள் மட்டும்தான் வெல்வோம்! உறுதியாக வெல்வோம்.
கோவை உங்கள் கோட்டை என்று நினைக்கும் நினைப்பில் எப்போதோ ஓட்டையைப் போட்டுவிட்டோம்! மக்களும் உதயசூரியனுக்கும், கை சின்னத்துக்கும் ஓட்டுப் போட்டு, உங்கள் கனவை உடைக்கப் போகிறார்கள்.
பழனிசாமியுடன் இருக்கும் அமைச்சர் வேலுமணி கோவை மாநகராட்சியைச் சூறையாடினார். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, எஸ்.பி.வேலுமணியை ஊழலாட்சித் துறை அமைச்சர் என்று அனைவரும் சொன்னார்கள். தொட்டது எல்லாம் ஊழல்தான்! லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. பழனிசாமியாவது தன்னுடைய சம்பந்திக்கு டெண்டர்களை வாரி வாரி வழங்கினார். வேலுமணி தன்னுடைய குடும்பத்துக்கே வழங்கினார். பல பேருக்குத் துரோகம் செய்து வேட்டு வைத்த பழனிசாமிக்கே வேட்டு வைக்கப் போகும் ‘ஸ்பை’, வேலுமணிதான். யாருடைய ஸ்பை? உங்களின் கணிப்புக்கே விடுகிறேன். இவர்கள் கோவைக்கு செய்ததெல்லாம் வெறும் துரோகம்தான்!
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர். ஆளே இல்லாத கடையிலே டீ ஆற்றுவது போன்று, வடக்கிலே சின்னச் சின்ன ஊர்களிலே எல்லாம் மெட்ரோ ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் தொழில், வர்த்தக மையமான கோவைக்குப் பா.ஜ.க. அரசு மெட்ரோ கிடையாது எனக் கையை விரித்துவிட்டார்கள்.
நாம் கோவையில் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப் போகிறோம். அப்படிப்பட்ட கோவைக்கு மெட்ரோ கிடையாதா? கோவை மக்களுக்கு இழைக்கும் அநீதி இல்லையா இது? கோவைக்குப் பிரதமர் வந்த நாளிலேயே இந்தத் தகவலும் வெளியானது. எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் எல்லாம் கோவைக்கு, தமிழ்நாட்டுக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?
ஆனால், அன்று முதல் இன்று வரை கோவை மக்களின் கோரிக்கைகளை எல்லாம் தீர்த்து வைப்பது தி.மு.க.தான்!
கொங்கு வட்டாரத்தில் அதிகமாக வாழும் கொங்கு வேளாள சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதை செய்தவர் கலைஞர் அவர்கள்!
“45 லட்சம் பேர் உள்ள இந்தக் கொங்கு வேளாள சமுதாயத்திற்கு இனிமேல் நல்ல வேலைவாய்ப்பு இருக்கும்” என கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் பெருமதிப்பிற்குரிய சர்க்கரை மன்றாடியாரே பேசி இருக்கிறார்.
அதேபோன்று, அருந்ததியர் இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதும் நாம்தான். சட்டமன்றத்தில் அதை நான்தான் தாக்கல் செய்தேன். காரணம் தலைவர் கலைஞர் அவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். என்னிடத்தில் கொடுத்துதான், சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய சொன்னார். நான்தான் அதை தாக்கல் செய்தேன். வாழ்நாளில் அதை என்னால் மறக்கவே முடியாது. அதன் மூலம் இடம் கிடைத்து மருத்துவரான கோகிலாமணி என்ற இளம்பெண் அவினாசி தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இப்படி ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்துப் பார்த்து நன்மை செய்திருக்கிறோம்.
இந்தச் சாதனைகளின் அடுத்தகட்டம்தான், தி.மு.க.வின் சூப்பர்ஸ்டார் தேர்தல் அறிக்கை! சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் அறிவிப்புகளைச் சொல்லவா?
முதல் அறிவிப்பு, இல்லத்தரசி திட்டத்தில் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன்! இந்த ஒரு அறிவிப்பிலேயே, நம்முடைய எதிரிகள் எல்லாம் இப்போது கதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூப்பனைக் கொடுத்துப் பெண்கள் - அவர்களுக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் போன்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். எதை வாங்குவது என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அதேபோன்று, நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப் போகிறோம். இப்போதே 10 லட்சம் லேப்டாப் கொடுத்துவிட்டோம்.
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக 10 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப் போகிறோம்.
இதெல்லாம் திராவிட மாடல் அரசினுடைய சாதனைகள். ஆனால் பழனிசாமி தந்ததெல்லாம் வேதனைகள், துரோகங்கள்தான்!
இப்படித் துரோகத்தின் உருவமான N.D.A. கூட்டணி வீழவும், திராவிட மாடல் சாதனைகள் தொடரவும், குன்னூர் தொகுதியில் கே.எம்.ராஜுவுக்கும், கூடலூர் தொகுதியில் மு. திராவிடமணிக்கும், மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்துக்கும், தொண்டாமுத்தூர் தொகுதியில் என்.ஆர். கார்த்திகேயனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். உதகை தொகுதியில் ராமச்சந்திரனுக்கும், கவுண்டம்பாளையம் தொகுதியில் கே.பி.சூரியபிரகாஷுக்கும் கை சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இது தமிழ்நாடு வெர்சஸ் N.D.A.! இதில் தமிழ்நாடு அணிதான் வெல்ல வேண்டும்! தி.மு.க. ஆட்சியில் இருந்தால் என்ன செய்ய முடியும் என்று, நேற்றுகூட பார்லிமெண்ட்–இல் காட்டி இருக்கிறோம்! 5 நாளில் தேர்தலை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தார்கள். தேர்தல் பிரசாரம் எல்லாம் நெக்ஸ்டுதான், தமிழ்நாட்டு உரிமைகள்தான் எங்களுக்கு முக்கியம் என்று நாம் களத்தில் இறங்கிச் சாதித்துவிட்டோம். கருப்புக் கொடி ஏற்றினால் தொகுதி மறுவரையரை நின்றுவிடுமா? கருப்புச் சட்டை போட்டால் நின்றுவிடுமா? என கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து, இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது!
ஏற்கனவே இப்படித்தான், 3 வேளாண் சட்டத்தில் பா.ஜ.க.வுக்கு முட்டி மோதி சப்போர்ட் செய்தார் பழனிசாமி. ஆனால் அவர்களே அதை வாபஸ் வாங்கிவிட்டார்கள்.
தொகுதி மறுவரையறைக்கும் முந்திரிக்கொட்டை மாதிரிப் பேசி பழனிசாமி முட்டுக் கொடுத்தார். கடைசியில் என்ன ஆனது? பழனிசாமி அவர்களே... இனிமேல் பா.ஜ.க.வுக்கு முட்டுக் கொடுக்கும்போது, கொஞ்சம் பார்த்துப் பக்குவமாக கொடுங்கள். இல்லை என்றால் இப்படித்தான் ஆகும். பா.ஜ.க.வை நம்பினால் உங்களுக்கு இந்த கதிதான்!
இந்திய அளவில் தி.மு.க. ஹீரோ ஆகிவிட்டது! ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் போன்று, நாம் அமைதியாகத் தேர்தல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சொல்லச் சொல்லக் கேட்காமல், தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாகக் கருப்புச் சட்டம் கொண்டுவரப் பார்த்தார்கள். தேவையில்லாமல் நம்மைச் சீண்டிப் பார்த்து, நமக்குள் இருந்த பாட்ஷாவை வெளியில் கொண்டு வந்துவிட்டார்கள். அதாவது 50, 60-களில் இருந்த தி.மு.க.வைத் திரும்ப வர வைத்துவிட்டார்கள். இனி எங்களை யாராலும் தடுக்க முடியாது!
சற்று முன்னர் கோவையில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், மகளிர் இட ஒதுக்கீட்டை தி.மு.க. நேற்று தடுத்துவிட்டது என்று பேசியிருக்கிறார். அவரே அதற்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை 2023–ஆம் ஆண்டே நிறைவேற்றிவிட்டோம் என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால், நேற்று அவர்கள் நிறைவேற்ற நினைத்த சட்டத்திற்கும், மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் என்ன தொடர்பு? எந்தத் தொடர்புமில்லை என்று அவர் வாயாலேயே ஒத்துக் கொண்டுவிட்டார். இதற்கு மேல் நாம் எந்த விளக்கத்தையும் கொடுக்கத் தேவையில்லை. அந்த அளவுக்கு அவருடைய பேச்சு அமைந்திருக்கிறது. நமக்காக நன்றாக பிரச்சாரம் செய்யும் பிரதமருக்கு என் நன்றிகள். நமக்காக பிரச்சாரம் செய்யும் பிரதமருக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள்.
அதுமட்டுமல்லை, டபுள் இஞ்சின் அரசு இருந்தால்தான் தமிழ்நாட்டில் பணிகள் எல்லாம் வேகமாக நடக்கும் என்று கூறியிருக்கிறார். நாம் கேட்பது, பழனிசாமி அப்படி கூட்டணியில் இருந்தபோது, அப்படி என்ன வேலை வேகமாக நடந்தது? டபுள் எஞ்சின் எவ்வளவு வேகமாக வேலை செய்யும் என்பதற்கு, மதுரை எய்ம்ஸைவிட வேறு எடுத்துக்காட்டு வேண்டுமா?
நன்றாக பார்த்துக் கொண்டே இருங்கள்... அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை நாங்கள் வழங்குவோம்.
நாடு நலம் பெற - நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை.
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
Also Read
-
“இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே, அட அப்புறமா குட்டுப்பட்டு ஓடாதே!” : திருப்பூரில் முதலமைச்சர் பிரச்சார உரை!
-
Delimitation: புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
“பா.ஜ.க-வுக்கு எப்போதும் தமிழ்நாடு அடிபணியாது” : தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி எம்.பி பேச்சு!
-
”ஆபத்தான அரசியல் நோக்கம்.. அதிகாரத்தை தக்கவைக்க பாஜக போட்ட திட்டம்.. படுதோல்வியால் கலக்கம்!”
-
”மண்ணைக் கவ்விய N.D.A. கூட்டணி; ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!