M K Stalin
”பழனிசாமியின் அவல ஆட்சி…மக்களுக்கான திராவிட மாடலின் சாதனை ஆட்சி” : ஓசூரில் முதலமைச்சர் பேச்சு!
கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19-04-2026) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:
தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துவிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு, உங்கள் முன்னால் கெத்தாக நின்று கொண்டிருக்கிறேன். இப்போது சொல்லுங்கள், திராவிட மாடல் 2.0-வுக்கு நீங்கள் ரெடியா? ஒட்டுமொத்த தமிழ்நாடும் ‘OK’ சொல்லிட்டார்கள். கிருஷ்ணகிரி ரெடியா? நன்றி.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மரியாதைக்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் வந்திருக்கிறார். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்த அளவிற்கு வலிமையாகத் தொடர அடித்தளமாக இருக்கும் மூத்த தலைவர்! அதேபோன்று, நேற்று அன்பிற்கினிய சகோதரர் ராகுல் காந்தி அவர்களும், தமிழ்நாடு வந்து பிரசாரம் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும்போது ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார். “இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மோடி அவர்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. அதனால்தான் அடிமை அ.தி.மு.க. ஆட்சியைத் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்று பார்க்கிறார்” என வலிமையாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
நான் கோவையில் பரப்புரைக்குச் சென்றபோது, நம்முடைய சகோதரர் ராகுல் அவர்கள், திருவள்ளூர் மற்றும் டெல்டாவிற்கு வந்திருக்கிறார். நான் நாளைக்குச் சென்னையில் பிரசாரம் செய்யும்போது, அவர் தென்கோடியில் குமரியில் பிரசாரத்தில் இருப்பார். சுற்றிச் சுற்றி நானும் என் சகோதரர் ராகுல் காந்தி அவர்களும் அனைத்துத் திசைகளிலும் நம்முடைய கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறோம். அதற்கு மேலும் வலிமை சேர்க்க வந்திருக்கும் மரியாதைக்குரிய கார்கே அவர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பில் முதலில் என்னுடைய நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்போது நம்முடைய வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தப் போகிறேன்.
முதலில், பர்கூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மதியழகன் அவர்கள். ஊர்க்காவல் படையில் மண்டல கமாண்டராக இருந்தவர். மாநில விவசாய அணித் துணைத் தலைவராக இருந்து, மாவட்டக் கழகச் செயலாளராக உயர்ந்தவர். மீண்டும் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்.
அடுத்து, ஓசூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா அவர்கள். ஓசூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர், ஓசூர் நகராட்சித் தலைவராக வளர்ந்தவர், ஓசூர் மாநகர மேயராக உயர்ந்தவர். சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
அடுத்து, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மதிப்பிற்குரிய டாக்டர் செல்லகுமார் அவர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் கொண்டவர். 2019-இல் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களில் ஒருவரான அவருக்கு, நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, தளி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராமச்சந்திரன் அவர்கள். கடந்த முறையும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர். அவருக்குக் கதிர் அரிவாள் சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஆர். குப்புசாமி அவர்கள். I.N.T.U.C. தேசியச் செயலாளர், TVS மோட்டார் தொழிற்சங்கத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருக்கும் குப்புசாமி அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் பி.எஸ். சீனிவாசன் அவர்கள். மாணவப் பருவத்திலிருந்தே கழகத்தினுடைய செயல்வீரராகப் பணியாற்றியவர். நான் வளர்த்த இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்.
மண்டலப் பொறுப்பாளர் சக்கரபாணி, மாவட்டச் செயலாளர்கள் – தளி பிரகாஷ் மற்றும் மதியழகன் இவர்கள் மூன்று பேரும் கிருஷ்ணகிரியில் முழுமையான வெற்றி உறுதி என்று சொல்லிவிட்டார்கள். இப்போது நீங்கள் சொல்லுங்கள். இவர்கள் அனைவருடைய வெற்றியும் உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம். உங்கள் சீட் கன்பார்ம் ஆகிவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்காக நிறையப் பணிகளை நிறைவேற்றிக் கொடுத்த உணர்வோடும் – உரிமையோடும்தான் நம்முடைய வேட்பாளர்களுக்கு நான் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். அந்தச் சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாக சொல்ல விரும்புகிறேன்.
ஓசூரில் 100 கோடியில் பிரம்மாண்ட மருத்துவமனை. மருத்துவமனை எனச் சொல்வதை விடப், பார்ப்பதற்கே திருமண மாளிகை போன்று அமைந்திருக்கிறது அது.
தேன்கணிக்கோட்டை மருத்துவமனை மேம்பாடு.
ஆலியாளம் அணைக்கட்டு.
தென்பெண்ணை ஆற்று நீர் மூலமாக கிருஷ்ணகிரி, தருமபுரி
மாவட்டங்களுடைய பல பகுதிகள் பயன்பெறும் திட்டம்.
எண்ணெகொள் அணைக்கட்டு நீரை வறண்ட பகுதிக்குக் கொண்டு போகும்
திட்டம்.
கிருஷ்ணகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாரூர் ஏரி - கிழக்கு பிரதான கால்வாய் அமைத்து, போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் இருக்கும் 33 ஏரிகளுக்குத் தண்ணீர் நிரப்பும் திட்டம்.
ஓசூர் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
அஞ்செட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம்.
ஓசூர் விஸ்வநாதபுரத்தில் தோழி விடுதி.
ஓசூரில் புறநகர்ப் புதிய பேருந்து நிலையப் பணிகள்.
புதிய ரயில்வே மேம்பாலம் அறிவிப்பு என கிருஷ்ணகிரி முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரமாக அறியப்பட்ட ஓசூர், இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளுக்காகத் தேர்ந்தெடுத்து, தொழிற்சாலைகளை நிறுவி, இயக்கி வரும் நவீன தொழில் மையமாக உருவெடுத்திருக்கிறது.
சூளகிரி, பர்கூர், குருபரப்பள்ளியில் தொழிற் பூங்காக்களைச் சிப்காட் நிறுவனம் நிறுவியிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், ஓசூர் சிப்காட்டில் ஐநாக்ஸ் திரவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை.
டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கம்.
ஓசூர் எல்காட்டில் அசெண்ட் நிறுவன உற்பத்தித் திட்டம். 7 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சூளகிரி சிப்காட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி, விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் பாகங்கள் உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்காகத்தான் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைக்கிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். ஓசூர் வளர்ச்சிக்கு இதை விடத் துரோகம் இருக்க முடியுமா?
தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை சமீபத்தில் 40 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறாமை எண்ணத்தோடு பா.ஜ.க. தடுக்கப் பார்க்கிறது. இதைக் கூடத் தட்டிக் கேட்க முடியாமல் பழனிசாமி இருக்கிறார். வாக்கு கேட்டு அவர்கள் வந்தால் நீங்கள் முகத்திற்கு நேராக இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். “முதலமைச்சர் சொல்லுவது உண்மையா இல்லையா?” என்று கேளுங்கள்!
தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் பா.ஜ.க.விடம் குரல் கொடுக்க வக்கில்லாத பழனிசாமி, என்னைப் பார்த்து என்ன கேட்டிருக்கிறார்? நான் காரில் செல்லும்போது கிரிக்கெட் பார்த்தது தப்பாம்.
பழனிசாமி அவர்களே... காரில் செல்லும்போது கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிக் கொண்டு சென்றீர்களே? அதுதான் கேவலம். இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். “ஒரு முதலமைச்சர் கிரிக்கெட் பார்க்கலாமா?” என்று கேட்டிருக்கிறார். முதலமைச்சர் கிரிக்கெட் பார்ப்பது தவறில்லை. முதலமைச்சராக இருந்து கொண்டு, “தூத்துக்குடியில் 13 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றதையே டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னீர்களே, அதுதான் மாபெரும் தப்பு, மிகப்பெரிய கேவலம்!
பழனிசாமியின் ஓனர் பிரதமர் மோடி அவர்கள், நேற்று இரவு எட்டு மணிக்கு, தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார். அதை பிரதமர் மோடியின் உரை என்று சொல்வதைவிட, பா.ஜ.க. தலைவர் மோடி அவர்களின் அரசியல் உரை என்றுதான் சொல்ல வேண்டும்!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தேசியக் கொடியின் பின்னணியில், வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளைத் திட்டி அவர் பேசியிருக்கிறார். தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேச வேண்டியதை எல்லாம் அரசு சார்பான உரையில் பேசியிருக்கிறார். இது அப்பட்டமான விதிமீறல்.
தொகுதி மறுவரையறை சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகத் தோல்வியடைந்த பதற்றத்தில் அவர் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு நடுவில் இந்தக் கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தால் நாம் அசால்ட்டாக விட்டுவிடுவோம் என்று நினைத்தார். ஆனால், அப்படியே உல்டாவாக நடந்துவிட்டது. தென் மாநில மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவருடைய கூட்டணிக்குப் படுதோல்வி உறுதியாகியிருக்கிறது.
அதனால், டேமேஜ் கண்ட்ரோல் செய்ய இப்போது என்ன முயற்சி செய்கிறார்? மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் தடுக்கிறார்கள் என்று அபாண்டமாகப் பேசியுள்ளார். இதுவும் வேலைக்கே ஆகவில்லை. தேர்தல் நேரத்தில் அவர் நம் மீது ஏவ நினைத்த அஸ்திரம் இப்போது பூமராங் ஆகி அவருக்கே வினையாகிவிட்டது. முதலுக்கே மோசமாகிவிட்டது.
மோடி அவர்களே… “It's too late”. ஏப்ரல் 17-ஆம் தேதியோடு NDA கூட்டணியின் chapter close ஆகிவிட்டது! பா.ஜ.க. கூட்டணிக்கு மெஜாரிட்டி இருக்கும் நாடாளுமன்றத்திலேயே NDA கூட்டணியை நிலைகுலைய வைத்திருக்கிறோம். அப்போது, பா.ஜ.க.வுக்கு அட்ரஸே இல்லாத தமிழ்நாட்டில் என்ன நிலைமை ஆகும் என்று மட்டும் எண்ணிப் பாருங்கள்.
தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்துவிட்டுதான் நான் இதை தெளிவாகச் சொல்கிறேன். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லா ஊரிலும் இன்றைக்கு செம ‘ரீச்’ ஆகியிருக்கிறது. நான் எந்த வீட்டுக்குப் போனாலும் அங்கு பயனாளிகள் இருக்கிறார்கள்.
நான் பெருமையோடு சொல்லுகிறேன்... இந்த அரசு “குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை“ அனைவருக்குமான நலத்திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறது. எப்படி இதைச் சொல்கிறேன் என்பதற்கு சில முக்கியமான திட்டங்களை சொல்கிறேன். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே நம்முடைய அரசில் பாதுகாப்பான பிரசவம், மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஊட்டச்சத்து பெட்டகம் இவையெல்லாம் வழங்குகிறோம்.
ஆறு வயது வரை ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம். பள்ளிக்கு வந்ததும் காலை உணவுத் திட்டம் - அதையும் இனி எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் போகிறோம். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு எங்களின் ஆதரவுக்கரம் இருக்கிறது என்று சொல்லி உதவித்தொகை வழங்கிப் படிக்க வைக்க ‘அன்புக்கரங்கள்’ திட்டம்.
அதேபோன்று, தரமான பள்ளிக் கல்விக்காக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள்,
அனைத்து மாவட்டங்களிலும் உண்டு உறைவிட வசதிகள் கொண்ட அரசு மாதிரிப் பள்ளிகள்,
தகைசால் பள்ளிகள்,
பள்ளிகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தப் ‘பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’,
அரசுப் பள்ளி குழந்தைகளை வெளிநாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்.
அவர்கள் பள்ளிக் கல்வியை முடித்ததும், ‘நான் முதல்வன்’-இல் கல்லூரிக் கனவு, உயர்வுக்குப் படி திட்டங்கள் மூலம் கல்விக்கு வழிகாட்டுகிறோம்.
அதுமட்டுமா, கல்லுரியில் படிக்க புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை. அடுத்து அமையவுள்ள ஆட்சியில் அதையும் ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப் போகிறோம்.
கல்லூரியில் படிக்கும்போதே “நான் முதல்வன்“ –இல் திறன் பயிற்சி தருகிறோம்.
அதோடு, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் கணினி வழங்கியிருக்கும் ‘உலகம் உங்கள் கையில் திட்டம்’. உறுதியாக சொல்கிறேன், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 35 இலட்சம் பேருக்கு லேப்டாப்களை வழங்கப் போகிறோம்.
உயர்படிப்புகள் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்ல ஆசைப்பட்டால் அனைத்துச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள ‘அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டம்’.
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்.
தொழில் தொடங்க வேண்டுமா? ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு இருக்கிறது.
சொந்தமாக நிறுவனம் வைத்திருக்கிறீர்களா? போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டுமா? ‘முதல்வர் படைப்பகங்கள்’ இருக்கின்றன.
ஆதிதிராவிட மக்களுக்கு ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்’ உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள்.
விளையாட்டுத் துறையில் ஆர்வமா? 141 தொகுதிகளில் மினி ஸ்டேடியம். விரைவில் அனைத்துத் தொகுதிகளிலும் வரப் போகிறது.
அனைத்து மண்டலங்களிலும் ஒலிம்பிக் அகாடெமிகள் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
சென்னையில் பிரம்மாண்ட விளையாட்டு நகரம் வரப் போகிறது.
தேசிய, உலக அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றால் அரசு வேலை தரப் போகிறோம். இவ்வளவும் இளைஞர்களுக்காகச் செய்யப்படுகிறது.
அதேபோன்று, உடல்நலனுக்காக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் - வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.
பெண்களுக்குக் கட்டணமில்லா ‘விடியல் பேருந்து’ திட்டம். மாவட்டந்தோறும் தோழி விடுதிகள். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு. மாதம் ஆயிரம் ரூபாய் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ - அதுவும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவாக உயரப் போகிறது? 2 ஆயிரமாக உயரப்போகிறது. இப்படிப் பெண்களுக்காகவும் பல திட்டங்கள்.
வீடற்ற ஏழையா? ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளைக் கட்டித் தரப் போகிறோம்.
23 லட்சம் பேருக்குக் கடந்த 5 ஆண்டுகளில் வீட்டுமனைப் பட்டா வழங்கியிருக்கிறோம். அரசுச் சேவைகள் மக்களைத் தேடிச் செல்ல ‘மக்களுடன் முதல்வர்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்.
4 ஆயிரம் கோயில்களுக்குக் குடமுழுக்குகள்.
மாற்றுத்திறனாளிகளா? இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, ‘விழுதுகள்’ - சேவை மையங்கள்.
வயதானவர்களா? ‘தாயுமானவர்’ திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வருகின்றன.
முதியவர்களைப் பார்த்துக் கொள்ள ‘அன்புச்சோலை’ இல்லங்களையும் திறந்திருக்கிறோம். ஓய்வூதியத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறோம். இப்படி நான் செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பெருமையாகச் சொல்லி உங்களிடம் நான் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
மறுபக்கம், நான்காண்டு ஆட்சி செய்த பழனிசாமி அவர்களால் இப்படி ஒரே ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட அவல ஆட்சியையும், திராவிட மாடலின் 5 ஆண்டுச் சாதனை ஆட்சியையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்!
அடுத்து, நம்முடைய சூப்பர்ஸ்டார் தேர்தல் அறிக்கையின் அறிவிப்புகளைப் பார்ப்போமா? முதலில், இல்லத்தரசி திட்டம்! இந்த ஒரு அறிவிப்பிலேயே நம்முடைய எதிரிகள் எல்லாம் கதறிக் கொண்டிருக்கிறார்கள். இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் - இப்படி எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
அரசின் அனைத்து உதவித்தொகைகளும் சுமார் இருமடங்கு உயர்வு.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
தொழிற்சாலைகள் அதிகமுள்ள ஓசூர் போன்ற நகரங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்க, ஆயிரம் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கப் போகிறோம். தமிழ்நாடு A.I. மிஷன் 2.0 செயல்படுத்தப்படும்.
கிருஷ்ணகிரியில் வேளாண் தொழில் பூங்கா அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மாம்பழத்திற்கு பிராண்டிங் செய்து சந்தைப்படுத்தப்படும். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஓசூர் பகுதி இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு மின் வாகனம், மின் சாதன உற்பத்தி சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்படிப்பட்ட வளர்ச்சிக்கான சாதனை ஆட்சி தொடர, நம்முடைய கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... நாம் போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; ஒரு கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல; பெருமையோடு, உறுதியோடு சொல்கிறேன், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக நாம் போராடுகிறோம்!
நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றியைக் கொடுத்தீர்கள். அதை வைத்து என்ன செய்ய முடியும் என நம்முடைய எம்.பி.க்கள் நேற்று முன்தினம் நாட்டுக்கே காட்டிவிட்டார்கள். அதனால் சட்டமன்றத் தேர்தலிலும், அப்படி ஒரு முழு வெற்றிக்காகத்தான் நான் என் சக்திக்கு மீறிப் பிரசாரம் செய்கிறேன். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால்தான் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வரும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க முடியும்!
பா.ஜ.க. உள்ளே வந்துவிடும் என்று சொல்வது ஏதோ பேச்சுக்குச் சொல்வதில்லை.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத் தவிர்த்து வேறு யாருக்கு வாக்களித்தாலும், அது நேரடியாகப் பா.ஜ.க.வுக்குப் போடும் வாக்குதான். தப்பித் தவறி அவர்கள் வந்தால், நான் இவ்வளவு நேரம் தொண்டை வலிக்கப் பட்டியல் போட்ட சாதனைத் திட்டங்களை எல்லாம் நிறுத்திவிடுவார்கள். தமிழ்நாடு முழுவதும் மதக்கலவரம் செய்வது மட்டும்தான் காலங்காலமாக அவர்களுடைய ஒரே அஜெண்டா.
தஞ்சாவூரிலும், மதுரையிலும்கூட இப்போதே அதைச் செய்யப் பார்த்தார்கள். இப்படிப்பட்டவர்களிடம் ஆட்சி போனால் என்ன நடக்கும் என்று நாம் கற்பனை செய்தெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. உத்தரப் பிரதேசம், பீகார், மணிப்பூர் எனக் கண் முன்னாலேயே நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
நேரடியாகவும் சரி, மாநிலக் கட்சிகள் மூலமாக மறைமுகமாகவும் சரி, பா.ஜ.க. உள்ளே புகுந்து உருப்பட்ட ஒரு மாநிலம்கூட இந்தியாவில் கிடையாது. சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வ நாசம்தான்! அப்படி ஒரு கட்சியின் கூட்டணிக்குத் தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை உள்ளவர்களின் ஒரு வாக்குகூட விழக் கூடாது. தி.மு.க. அரசு இருப்பதால்தான் தமிழ்நாடு காப்பாற்றப்படுகிறது. தி.மு.க. அரசு இருப்பதால் மட்டுமே தமிழ்நாடு காப்பாற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளுக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடுகள், கொள்கை வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், எந்தக் கட்சியும் மக்களைப் பிரித்து வன்முறையைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய மாட்டார்கள்! ஆனால், பா.ஜ.க. அப்படி அல்ல.
பா.ஜ.க. என்பது ஒரு அழிவு சக்தி! அதை உள்ளே விட்டால் நம்முடைய மாநிலமும் இருக்காது; மாநிலக் கட்சிகளும் இருக்காது! NDA என்பது தமிழ்நாட்டை மதத்தால் துண்டாடும். இந்தியைத் திணிக்கும். தொகுதி மறுவரையறையினால் தமிழ்நாட்டு மக்களை அதிகாரமற்ற அகதிகள் ஆக்குவார்கள். ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி போன்று, யூனியன் பிரதேசம் ஆக்கி அராஜகம் செய்யும்.
அதனால்தான் சொல்கிறேன்... தமிழ்நாடு வெர்சஸ் NDA எனும் இந்த ஜனநாயகப் போரில், தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, மேடையில் இருக்கும் வேட்பாளர்கள் அத்தனை பேருக்கும் அவரவர்களுக்கு உரிய சின்னங்களில் வாக்களித்து, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத்தான் ஆதரிக்க வேண்டும்!
நாடு வளம் பெற - நல்லாட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு தமிழ்நாடாகவே என்றும் இருக்க, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை!
தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
Also Read
-
சென்னையில் AI, VFX மையம்; 1000 மினி பேருந்துகள்! : சென்னைக்கு சிறப்பு தேர்தல் வாக்குறுதி வெளியிட்ட திமுக!
-
“ஆட்டோ மாணிக்கத்தை, ‘பாட்ஷா’வாக மாற வைத்துவிட்டது பா.ஜ.க!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே, அட அப்புறமா குட்டுப்பட்டு ஓடாதே!” : திருப்பூரில் முதலமைச்சர் பிரச்சார உரை!
-
Delimitation: புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
“பா.ஜ.க-வுக்கு எப்போதும் தமிழ்நாடு அடிபணியாது” : தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி எம்.பி பேச்சு!