M K Stalin
“இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே, அட அப்புறமா குட்டுப்பட்டு ஓடாதே!” : திருப்பூரில் முதலமைச்சர் பிரச்சார உரை!
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.04.2026) திருப்பூரில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:
பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த திருப்பூருக்கு, நேற்று இந்தியாவிலேயே ஒரு மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியோடு நான் வந்திருக்கிறேன்.
சூப்பர்ஸ்டாரின் ஒரு பாட்டுதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.
“என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா…” அந்தப் பாட்டை கொஞ்சம் மாற்றி பாடட்டுமா… “என்கிட்ட மோதாதே... இது பெரியாரின் தமிழ்நாடடா... வம்புக்கு இழுக்காதே, இது அண்ணாவின் கோட்டையடா... இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே, அட அப்புறமா குட்டுப்பட்டு ஓடாதே...” இதைத்தான் இப்போது தமிழ்நாடே பாடுகிறது.
நாம் பறக்கவிட்ட கருப்புக் கொடி, பா.ஜ.க. பறக்கவிடத் துடித்த காவிக் கொடியை வீழ்த்தியிருக்கிறது. போர் என்றால், வெற்றி ஒன்றுதான் குறி. நம்முடைய குறி தவறவில்லை. இதுதான் தி.மு.க.! இதுதான் தமிழ்நாடு! இதுதான் திராவிட மாடல்!
Delimitation எனும் பேராபத்தை 2023-லேயே உணர்ந்து, நாட்டில் முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது நம்முடைய தி.மு.க.தான்.
இதனால் பாதிக்கப்படும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை அழைத்து, சென்னையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் சில தீர்மானங்களை நிறைவேற்றினோம். ஒரு கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கினோம். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தித் தீர்மானம் போட்டோம். ஏன், சட்டமன்றத்திலும் தீர்மானம் போட்டோம்.
அப்போது இரட்டை நாக்கு கொண்ட அ.தி.மு.க. சட்டமன்றத்தில் ஒரு பேச்சு பேசினார்கள். வெளியே போய் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. நாடகம் போடுகிறது என்று நா கூசாமல் பேசினார்கள்.
இப்போது மூன்று நாட்களுக்கு முன்பு, இந்த மசோதா வந்தவுடனே, கருப்புக் கொடி போராட்டம் நாம் செய்தோம். அந்தச் சட்ட மசோதாவின் நகலை எரித்தோம். நாமக்கல்லில் பற்ற வைத்த தீ, நாடு முழுக்கப் பரவியது. அதனுடைய வெப்பம், நேற்று பார்லிமெண்ட்டில் அந்தச் சதித் திட்டத்தை எரித்துச் சாம்பலாக்கியது.
தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையில் அ.தி.மு.க. அடிமைகள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு சிறப்பாகச் செய்யும், அமித்ஷாவே சொல்லிவிட்டார்” என்று சொன்னார்கள்.
இப்படிச் சொந்த மாநிலத்திற்கும் – மக்களுக்கும் எதிராக நடந்து கொள்ளும் பழனிசாமி அ.தி.மு.க. போன்ற ஒரு நாணயமற்ற கட்சியை உலக வரலாற்றிலேயே யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதுதான் பழனிசாமி அ.தி.மு.க.
அடிமைகளிடம் மறுபடியும் தமிழ்நாடு சிக்கலாமா? சிக்கினால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்குமா? நிச்சயம் இருக்காது. அதைத் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டை அடிமை அ.தி.மு.க.விடமும் இருந்தும் – மதவாத பா.ஜ.க.விடமும் இருந்தும் பாதுகாக்க வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு நான் வந்திருக்கிறேன்.
இப்போது வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறேன்.
முதலில் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மு.பெ. சாமிநாதன். கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர். அமைச்சராக கடந்த ஐந்தாண்டு காலத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு தலைவர்களுக்கும் – தமிழறிஞர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பிய சாதனைக்குச் சொந்தக்காரர். இளைஞரணியை நான் தலைமையேற்று நடத்திய காலம் முதல் தொடர்ந்து என்னோடு பயணிப்பவர். அவருக்கு மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, பல்லடம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் செல்வராஜ் அவர்கள். மாவட்டக் கழகச் செயலாளர். திருப்பூரின் நகர் மன்றத் தலைவர் – திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயர் – சட்டமன்ற உறுப்பினர் என்று, தன்னுடைய பொறுப்புகள் மூலம் திருப்பூரின் உள்கட்டமைப்பை வளர்த்த சிறப்புக்குச் சொந்தக்காரர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தினேஷ் குமார் அவர்கள். கழகத்தின் மாவட்டச் செயலாளர். திருப்பூர் 49–வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து, திருப்பூர் மாநகராட்சி மேயராக உயர்ந்திருக்கிறார். திருப்பூரின் ஒவ்வொரு பகுதியையும் கவனித்துப் பல்வேறு சிறப்புக்குரிய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் ஒரு சாதனையாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்கினை வழங்க வேண்டும்.
அடுத்து, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தோழமை இயக்கமாம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம். ரவி என்ற எம். சுப்ரமணியன் அவர்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வட்டாரச் செயலாளராக – திருப்பூர் மாவட்டச் செயலாளராகச் செயல்பட்ட இவர், இப்போது மாநிலத் துணைச் செயலாளராக இருக்கிறார். திருப்பூர் நகராட்சி உறுப்பினராக பதினைந்து ஆண்டுகள் மக்கள் பணியாற்றியவர். அவருக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, அவினாசி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி அவர்கள். களத்தில் நிற்கும் இளம் வேட்பாளர். அவிநாசி ஒன்றிய கழக மருத்துவ அணி துணை அமைப்பாளர். நம்பியாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக இருந்த அவர், அதிலிருந்து விலகிவிட்டுத் தேர்தலில் போட்டியிடுகிறார். கொள்கைத் தெளிவோடு இவர் கொடுத்த பேட்டி சோஷியல் மீடியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் இந்திராணி அவர்கள். மருத்துவர் இந்திராணி, மக்கள் பணியாற்ற வந்திருக்கிறார். திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழக மருத்துவர் அணி அமைப்பாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மு. ஜெயக்குமார் அவர்கள். மாணவராக இருந்த காலம் முதல் நம் கழகத்திற்காக உழைத்து வருபவர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே கல்லூரி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரக் கழகத் தொண்டராகச் செயல்படத் தொடங்கியவர். திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் – உடுமலைப்பேட்டை நகர்மன்ற உறுப்பினராகவும் இருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்கள். 2016 தேர்தலில் மடத்துக்குளம் தொகுதியில் வென்றவர். முப்பது ஆண்டுகளாகக் கழகத்தின் சார்பில் மக்கள் தொண்டு ஆற்றி வரும் இவர், திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவராக இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
இங்கே நிற்கும் வேட்பாளர்களின் வெற்றி உறுதிதானே… நன்றி! வேட்பாளர்கள் அமரலாம். உங்கள் வெற்றி கன்பார்ம் ஆகிவிட்டது.
திராவிட மாடலால், இந்த திருப்பூர் அடைந்திருக்கும் மாற்றத்தையும் – வளர்ச்சியையும் நீங்கள் அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறீர்கள். அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் ஹைலைட்ஸாகச் சொல்ல வேண்டும் என்றால்,
நொய்யல் ஆறு மேம்பாட்டிற்கான பணி,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட கால்வாய் தூர்வார 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு,
தாராபுரம் தொகுதிக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சொர்ணபுரி லே அவுட் பகுதியில் சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உயர்மட்டப் பாலம்,
தந்தை பெரியார் நகர் பக்கத்தில் ஜம்மனை ஓடையின் குறுக்கே உயர்மட்டப் பாலம்,
கீழக் கோவில் வழி பகுதியில் பேருந்து நிலையம்,
பில்லூர் நீர்த்தேக்கத்தை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் மேம்பாட்டுத் திட்டம்,
காங்கேயம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்,
தாராபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்,
வேலம்பாளையத்தில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்,
உடுமலைப்பேட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடபதி எத்தலப்ப நாயக்கர் அவர்களுக்குத் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம்,
சிவன்மலை மற்றும் நஞ்சியம்பாளையத்தில் சிறு விளையாட்டு அரங்கம்,
ஐந்து சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள்,
திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதியில் மினி டைடல் பார்க்,
328 திருக்கோயில்களில் திருப்பணிகள்,
கொங்கல் நகரம் கிராமத்தில் முதற்கட்ட அகழாய்வு நிறைவு,
புஞ்சை ஊத்துக்குளி கிராமத்தில் இருக்கும் நந்தவனக் கிணறு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது,
தாராபுரம் தெற்கு கிராமத்தில் கல் இசை மண்டபம், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சாதனைச் சரித்திரம் தொடர, திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். நான் கேட்பதெல்லாம், இந்த மாதிரி எதையாவது கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் செய்திருக்கிறார்களா? இல்லவே இல்லை. அவர்களின் ஓனராக இருக்கும் பா.ஜ.க.வாவது செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை. அவர்களால் நீங்கள் பட்ட வேதனை ஒன்றா? இரண்டா? சிலவற்றை மட்டும் சொல்கிறேன் கவனியுங்கள்.
முதலில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இங்கு இருக்கும் கம்பெனிகளும் – தொழிலாளர்களும், அந்தக் கறுப்பு நாளை இன்றைக்கும் மறந்திருக்க மாட்டீர்கள். அனைவரையும் நடுத்தெருவில் நிறுத்தி – தொழில்களை நலிவடைய வைத்து, திருப்பூரின் வளர்ச்சிக்கு முதல் முட்டுக்கட்டையைப் போட்டார்கள்.
அடுத்து, நடுராத்திரியில் ஜி.எஸ்.டி.யைக் கொண்டுவந்து, தொழில்கள் சிறந்து விளங்கும் மொத்த மேற்கு மண்டலத்தையே சூறையாடினார்கள்.
அடுத்து, கொரோனா காலகட்டத்தில் நம்மையெல்லாம் மணி அடிக்கச் சொல்லிவிட்டுத் தொழிலாளர்களை நடுத்தெருவில் தவிக்க விட்டார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு தவறான கொள்கைகளால் இந்த திருப்பூர் தன்னுடைய அடையாளத்தை எப்படியெல்லாம் இழந்து கொண்டு இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். இதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு துளியளவுகூட கவலை இருக்கிறதா? கிடையாது.
தொழில் முனைவோர்களையும் – தொழிலாளர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி, இந்த மண்டலத்தினுடைய தொழில் வளர்ச்சிக்குக் கேடு விளைவித்துவிட்டு எந்த முகத்துடன் இன்றைக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்.
ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்களையும் மிரட்டி ஒடுக்குகிறார்களா? இல்லையா?
எடுத்துக்காட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால், இதே மேற்கு மண்டலத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு நிறுவன அதிபர், நிதியமைச்சரிடம் ஜி.எஸ்.டி.யில் இருக்கும் பிரச்சினையைச் சுட்டிக் காட்டியதற்காக, என்னவெல்லாம் பாடுபடுத்தினார்கள். மன்னிப்பு கேட்க வைத்தார்கள். இப்படியெல்லாம் செய்தவர்கள்தான் இன்றைக்கு டிசைன் டிசைனாகப் பொய் சொல்லிவிட்டு வாக்கு கேட்க வருகிறார்கள்.
ஆனால், நாங்கள் செய்திருக்கும் சாதனைகளையும், செய்யப் போகும் திட்டங்களையும் சொல்லி உங்களிடத்தில் வாக்கு கேட்கிறோம்.
நம்முடைய அரசின் சாதனைகளை சொல்வதற்கு முன்பு, வாக்கு கேட்டுப் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் பட்டியலிட்டு அவர்களே சொல்கிறார்கள்.
நேற்றுகூட, கன்னியாகுமரியில் ஒரு முதியவர், நம்முடைய சாதனைகளையெல்லாம் சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளைப் பற்றி நிறைய செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
தி.மு.க. ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினால், அது சாதனைத் திட்டமாகத்தான் இருக்கும். அதனால்தான் மக்களே பெருமையோடு சொல்கிறார்கள். நம்முடைய திட்டங்களைப் பார்த்துத்தான் இன்றைக்குப் பல்வேறு மாநிலங்களில் காப்பி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் ஒன்றிய அரசே இன்றைக்கு காப்பி அடித்துக் கொண்டு இருக்கிறது. மக்களுக்கான முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தி.மு.க.தான் O.G. (ஒரிஜினல்).
இந்த ஸ்டாலினுடைய அப்படிப்பட்ட திட்டங்களைச் சொல்லட்டுமா...
இங்கு மகளிர் நிரம்ப வந்திருக்கிறீர்கள். இங்கு இருக்கும் என் சகோதரிகளிடம் நான் பணிவோடு கேட்கிறேன். உரிமையோடு கேட்கிறேன்…
மாதந்தோறும் பதினைந்தாம் தேதி உங்கள் அக்கவுண்ட்டுக்கு இந்த அண்ணன் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வருகிறதா? அந்த ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை, வரும் திராவிட மாடல் 2.0-வில், எவ்வளவாக உயர்த்தப் போகிறோம்? டபுள் ஆக்கப் போகிறோம். இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப் போகிறோம்.
இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் தங்களுடைய அன்றாடச் செலவுகளுக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. உரிமைத்தொகையால், அந்தக் கஷ்டத்தை உடைத்திருக்கிறோம். எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர் என்று மகளிர் அனைவரும் உரிமையோடு பேசுகிறார்கள்.
அடுத்து, விடியல் பயணம். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் புரட்சிகரமான திட்டம். சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகை போக்குவரத்திற்கே செலவாகிவிடும் என்று, வீட்டுக்குள்ளேயே பலர் முடங்கியிருந்த நிலையை உடைத்திருக்கிறோம்.
இப்படி, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், தோழி விடுதிகள், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி, கல்லூரிக் கனவு திட்டம், சிகரம் தொடு திட்டம், உயர்வுக்குப் படி திட்டம், பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம், அன்புச்சோலை, அன்புக்கரங்கள், தாயுமானவர் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், இல்லம் தேடிக் கல்வி, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, மாபெரும் நூலகங்கள், சிப்காட் தொழிற்பூங்காக்கள், நியோ டைடல் பார்க்குகள், ஊட்டச்சத்தை உறுதி செய், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், தொல்குடி திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்… எனக்கே ரொம்ப களைப்பாகிவிட்டது. கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்கிறேன். இப்படி சாதனைகளை விளக்கிச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கே நாங்கள் தனியாக ஒரு மாநாடு போட வேண்டும். அந்த அளவிற்கு ஏராளமான திட்டங்களைச் செய்திருக்கிறோம்.
இதையெல்லாம் பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குத் கொள்கைகளும் இல்லாத பழனிசாமி, அவதூறு பரப்புகிறார். அதுவும் எப்படி? அசிங்கமாகப் பேசுவதையும், சாபம் விடுவதையும்தான் தன்னுடைய பிரசாரமாக இப்போது வைத்திருக்கிறார்.
சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்கத் துணிந்துவிட்ட பழனிசாமிக்குத் தமிழ்நாடு பதினோராவது தோல்வியைக் கொடுக்க வேண்டும். வெகுமானத்திற்காகத் தன்மானத்தை இழந்து இனமானத்திற்குத் துரோகம் செய்யும் அடிமைக் கூட்டத்திற்குத், தமிழ்நாடு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், பாசிச பா.ஜ.க.வும் – அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் என்று வருவது எதற்காக?
உரிமைத்தொகையை நிறுத்துவதற்காக, விடியல் பயணத்தை முடக்குவதற்காக, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களைத் தடுப்பதற்காக, இடஒதுக்கீட்டு உரிமையைப் பறித்துச் சமூகநீதியைப் படுகுழியில் தள்ளுவதற்காக, இதைத்தான் N.D.A. கூட்டணி மற்ற மாநிலங்களில் செய்து கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வுக்கும் – பா.ஜ.க.வுக்கும் அளிக்கும் வாக்கு என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குப் போடப்படும் தடைக்கற்கள். இதை மக்கள் உணர வேண்டும்.
இந்த திருப்பூரில் நிறைய தொழில்முனைவோர்கள் இருக்கிறீர்கள். மாநிலத்தின் தொழில் வளர்ச்சி எவ்வளவு முக்கியமானது என்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட மாநில வளர்ச்சியை 0.07 விழுக்காடு என்ற அவலநிலைக்குத் தள்ளிய ஆட்சிதான், அ.தி.மு.க. ஆட்சி.
ஆனால், உங்கள் ஆதரவோடு தமிழ்நாட்டை மீட்டு 11.19 விழுக்காடு வளர்ச்சி, இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி, சூப்பர்ஸ்டார் ஸ்டேட் என்ற நிலைக்கு நாங்கள் உயர்த்தியிருக்கிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி! அதனால்தான் மீண்டும், மீண்டும் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்த வளர்ச்சி தொடரத்தான் சூப்பர் ஸ்டாரைக் களத்தில் இறக்கியிருக்கிறோம். சூப்பர் ஸ்டார் யார்? நம்முடைய தேர்தல் அறிக்கை… சின்னக் குழந்தைகள் கூட சொல்கிறார்கள்.
இப்போது நம்முடைய சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் அறிவிப்புகளைச் சொல்லட்டுமா…
முதலில், இல்லத்தரசி திட்டம். எவ்வளவு கூப்பன்? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன். இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளைப் புதியதாகவும் வாங்கிக் கொள்ளலாம், இல்லை என்றால் பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்தும் வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த கடையில் – உங்களுக்குப் பிடித்த கம்பெனியில் வாங்கிக் கொள்ளலாம்.
என்னென்ன? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ். இதில் எதையெல்லாம் வாங்க வேண்டும் என்று, இப்போதே நம்முடைய தாய்மார்கள் – பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் தெரியும்... எங்கு பார்த்தாலும் அதுதான் பேச்சு. ஆனால், ஒன்று… உங்களை தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டுக்காரரிடம் எல்லாம் என்ன வாங்கலாம் என்று டிஸ்கஸ் பண்ணாதீர்கள். உங்களை கன்பியூஸ் பண்ணி விடுவார்கள். குழப்பம் வந்துவிடும். ஏதாவது பிரச்சினை வந்தால் சொல்லுங்கள். அண்ணன் இருக்கிறேன். ஸ்டாலின் இருக்கிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன்.
அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஒரு கோடியே 31 இலட்சம் சகோதரிகள் பெற்று வருகிறார்கள். அந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இனி மாதம் இரண்டாயிரம் ரூபாய்.
இப்போதே நீங்கள் அனைவரும் கணக்கு போட ஆரம்பித்துவிட்டீர்கள். இல்லையா… என்ன கணக்கு அது? பொங்கலுக்கு முன்பு, சொல்லிவிட்டு மூன்றாயிரம். பிப்ரவரியில், சொல்லாமலேயே ஐந்தாயிரம். ஆகமொத்தம் எட்டாயிரம். அடுத்து, இல்லத்தரசி கூப்பனில் எட்டாயிரம். “எட்டு + எட்டு = உதயசூரியனுக்குத்தான் எங்கள் ஓட்டு” எனப் பெண்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டார்கள். அதனால் நம்முடைய வெற்றியும் இந்த முறை யாரும் எட்டாத உயரத்திற்குப் போகப் போகிறது.
இதுமட்டுமல்ல, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் தமிழ்ப் புதல்வன் உதவித்தொகையும் ஆயிரம் ரூபாயிலிருந்து, ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
காலை உணவுத்திட்டம் – இப்போது ஐந்தாம் வகுப்பு வரை. அது எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் முழுமையாக வழங்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக 10 இலட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப் போகிறோம்.
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.
திருப்பூர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்க ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள், தமிழ்நாடு முழுவதும் உருவாக்கப்படும்.
திருப்பூரில் தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க நடவடிக்கை.
ஜவுளித் தொழில் நவீனமயமாக்கப்பட்டு, கோவை, திருப்பூர், கரூரில் இருபத்து ஐந்தாயிரம் தொழிலாளர்களுக்குத் தங்கும் விடுதிகள்.
உலகளாவிய உயர் மதிப்பு கொண்ட தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி மையமாகத் தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை என ஏராளமான வாக்குறுதிகள் நம்முடைய தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. இப்போது ஏராளமான சாதனைகளைச் சொல்லி நான் வாக்கு கேட்டேன்.
இன்றைக்குப் பிரதமர் மோடி அவர்களும் பிரசாரத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். நாம் பலமுறை கேட்டும் தமிழ்நாட்டிற்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்று எதையும் அவர் சொல்லவில்லை. எப்போதும் சொல்ல மாட்டார். ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தார்கள் என்று உண்மைக்குப் புறம்பாகப் பிரசாரம் செய்வார்.
பிரதமருக்கு ஒரேயொரு விஷயத்தை நான் பணிவுடன் ஞாபகப்படுத்துகிறேன். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை 2023–இல் கொண்டு வந்தபோது, தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் முழுமையாக ஆதரித்தோம். அதனால்தான் அதை உங்களால் நிறைவேற்ற முடிந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றியது, செப்டம்பர் 2023. 31 மாதமாக என்ன செய்தீர்கள்?
இப்போது தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்க வேண்டும் என்று கருப்புச் சட்டமான தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டு வந்துதான், 31 மாதமாக மூலையில் போட்ட சட்டத்தை உங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள்.
உங்களுக்கு மகளிர் முன்னேற்றத்தின் மேல் எல்லாம் அக்கறை கிடையாது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவார் கும்பல்களின் பிற்போக்குவாதங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு நன்றாகவே தெரியும். அதனால் உங்கள் பொய்களை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள்.
ஏனென்றால், பெண்களுக்கு உள்ளாட்சிகளில் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்த தலைவர் கலைஞரின் மகன். அதனால் வேறு எதையாவது புதிதாக ட்ரை பண்ணப் பாருங்கள்.
எதைப் பற்றியும் அடிப்படைப் புரிதல் இல்லாமல் தயவுசெய்து பேசாதீர்கள் பழனிசாமி. பா.ஜ.க. கொடுத்த டூல் கிட் எடுத்துக் கொண்டு வந்து, தமிழ்நாட்டின் வெற்றியைத் திசை திருப்பிப் பேசிக்கொண்டு இருக்கிறார்.
தலைகுனிந்து, முதுகு வளைந்து, தரையில் ஊர்ந்து, கால்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட அடிமைசாமிக்குத், தமிழ்நாடு தலைநிமிர்ந்து போராடி வெற்றி பெறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஸ்டாலின் எதற்காக இதைக் கொண்டாடுகிறார் என்று கேட்கிறார்? பழனிசாமி அவர்களே... தமிழ்நாட்டின் எழுச்சியை நான் கொண்டாடுகிறேன். தமிழ்நாட்டின் ஒற்றுமையை நான் கொண்டாடுகிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் நீதிக்காகவும், கண்ணியத்திற்காகவும், கூட்டாட்சிக்காகவும் நெஞ்சுரத்தோடு நின்று, நாங்கள் தமிழ்நாட்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், பழனிசாமி அவர்களே... நீங்கள் பதவி வெறிக்காக பா.ஜ.க.வின் பாதம்தாங்கியாக மாறி, பிறந்த தமிழ் மண்ணுக்கே துரோகம் செய்யத் துணிந்தீர்கள். பதவிக்காக உங்கள் தன்மானத்தை அடகு வைத்தீர்கள். அது பற்றித் தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கவலை கிடையாது. ஆனால் இனமானத்தை அடகு வைத்துப் பிழைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
பழனிசாமி அவர்களே... உங்களுடைய பச்சோந்தித்தனத்தைப் பார்த்துத் தமிழ்நாடே இன்றைக்கு சிரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியுமா ஒரு மனிதர் இருப்பார் என்று, உங்களை அரசியல் அவமானமாக நினைக்கிறது.
உங்களுக்குத் துணிவு இருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை எந்தவித கண்டிஷனும் போடாமல் இன்றைக்கே நிறைவேற்றுங்கள் என்று, உங்கள் ஓனர் பிரதமர் மோடியிடமும் – அமித் ஷாவிடமும் சொல்லுங்கள் பார்ப்போம்.
இன்றைக்குக்கூட தி.மு.க. சார்பில் மகளிர் இடஒதுக்கீட்டிற்காகத் தனிநபர் மசோதா கொண்டு வந்தார்களே... அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று உங்கள் ஓனர்களைப் பார்த்து கேளுங்கள் பார்ப்போம். ஒரே ஒரு நிமிடம் முதுகை நிமிர்த்திக் கேள்வி கேட்கப் பழனிசாமி தயாரா?
தமிழ்நாடு தமிழ்நாடாக இருப்பதை நாங்கள் கொண்டாடுவோம். தமிழ்நாட்டு முதலமைச்சராக நான் கொண்டாடுவேன். உங்களுக்கு இதெல்லாம் எரிகிறது என்றால், நாங்கள் திரும்பத் திரும்பக் கொண்டாடுவோம். எங்கள் தமிழ்நாட்டை நாங்கள் கொண்டாடிக் கொண்டே இருப்போம்.
தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்க முயற்சி செய்து தோற்றுவிட்டுத், தமிழ்நாட்டிற்கு எதிராகச் செயல்பட ஒன்றுசேர்ந்துள்ள N.D.A. கூட்டணியைத், தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். பாடம் புகட்ட வேண்டும்.
தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி என்ற தேர்தலில் டெல்லியின் ஆணவத்திற்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அதற்கு ஏப்ரல் 23–ஆம் நாள் தமிழ்நாட்டு மக்கள் உதயசூரியனுக்கும் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று, உங்களை அன்போடும் – உரிமையோடும் நான் கேட்க விரும்புகிறேன்.
தலைநிமிர்ந்த தமிழ்நாடு வளம் பெற, நல்லாட்சி தொடர்ந்திட, வெல்வோம் ஒன்றாக... மீண்டும் தமிழ்நாடு வெல்லட்டும்.
Also Read
-
Delimitation: புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
“பா.ஜ.க-வுக்கு எப்போதும் தமிழ்நாடு அடிபணியாது” : தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி எம்.பி பேச்சு!
-
”ஆபத்தான அரசியல் நோக்கம்.. அதிகாரத்தை தக்கவைக்க பாஜக போட்ட திட்டம்.. படுதோல்வியால் கலக்கம்!”
-
”மண்ணைக் கவ்விய N.D.A. கூட்டணி; ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”திராவிட இயக்கத்தின் கொள்கை மகளிர் முன்னேற்றம்.. திமுக-விற்கு பாடம் எடுக்க வேண்டாம்” : முரசொலி பதிலடி!