M K Stalin

“தமிழ்நாடு - தமிழ்நாடாக இருப்பதே பலரது கண்ணை உறுத்துகிறது!”: திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13-04-2026)  திருவள்ளூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை விவரம்:

தமிழ்நாட்டின் வடக்கு வாசலாக இருக்கும் திருவள்ளூருக்கு நான் வந்திருக்கிறேன்! தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிக்கு வந்திருக்கிறேன். வளர்ந்து வரும் நகரங்களும் - அழகிய கிராமங்களும் ஒன்று சேர்ந்திருக்கும் திருவள்ளூருக்கு, அடுத்தகட்ட வளர்ச்சிக்காக உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

தமிழ்நாடு எப்போதுமே தனித்துவமான மாநிலம். அதற்குக் காரணம், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். 

உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். பெரும்பாலும், தமிழ்நாட்டின் கிராமத் தெய்வங்கள் வடக்கு நோக்கிதான் உட்கார்ந்திருக்கும்; ஏன் என்றால், தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். அப்படி, எதிர் வரும் N.D.A. என்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் தேர்தல்தான், இந்தத் தேர்தல்! தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் அனைவரும் தயாரா? தயார் (மக்கள்). டெல்லிக்கு கேட்க வேண்டும். 

இதே திருவள்ளூரில் நின்றுதான், ஒன்றிய பா.ஜ.க. அரசை நோக்கி, “எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து கொண்டு வாருங்கள், தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control-தான்” என்று சவால்விட்டேன். அந்தச் சவாலில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம்தான் வெற்றி பெற வேண்டும். D.M.K. Unstoppable என்று திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும்!

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, அடிமை அ.தி.மு.க. ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாடு எப்படிப்பட்ட தலைக்குனிவை எல்லாம் சந்தித்தது என்று நீங்கள் நினைத்து பாருங்கள். தினந்தோறும் ஒரு கோமாளிக் கூத்தை அரங்கேற்றுவார்கள். திறனற்ற நிர்வாகத்தால், மக்களை கொடுமைகளுக்கு – இன்னலுக்குள்ளாக்கி, வீதியில் இறங்கிப் போராடும் நிலைமைக்கு தள்ளிவிடுவார்கள்!

உங்களுக்கெல்லாம், ஆப்பத்தை குரங்கு பங்கிட்ட கதை தெரியும்தானே? அப்படிதான் இப்போது, பா.ஜ.க. – அ.தி.மு.க.வை பங்கிட்டு கொடுக்கிறேன் என்று வந்து, பழனிசாமி எனும் அடிமையை அடையாளம் கண்டு, அ.தி.மு.க. தலைவராக - அதாவது, பா.ஜ.க. கிளைச்செயலாளராக நியமித்திருக்கிறார்கள். தனக்கு பதவி கொடுத்தால் போதும், சம்பந்திக்கு ரெய்டு நடக்காமல் இருந்தால் போதும், இதற்காக பழனிசாமி கொடுத்த விலைதான், தமிழ்நாட்டு உரிமைகள்!

கிராமத்தில், “இருக்க இடம் கொடுத்தால் மடத்தை கேட்பான்” என்று சொல்வார்கள். அதுபோன்று, பழனிசாமி எனும் அடிமை இருக்கும் தைரியத்தில்தான், “அ.தி.மு.க.வை வைத்து, N.D.A. ஆட்சி நடத்துவோம்! இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தை செயல்படுத்துவோம்” என்று பா.ஜ.க.வினர் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும். அடிமைகளை விரட்ட வேண்டும். அதற்கு, நீங்கள் அனைவரும் ரெடியா?  ரெடி (மக்கள்). 

அதற்காக, இப்போது உங்கள் அனுமதியோடு வேட்பாளர்களை அறிமுகம் செய்யலாமா? ஆம் (மக்கள்).

முதலில், ஆவடி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் சா.மு. நாசர் அவர்கள். இளைஞரணி காலத்தில் இருந்து, என்னுடனே பயணிப்பவர்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், சிறுபான்மையினர் நலத்துக்கும் - வெளிநாடுவாழ் தமிழர் நலத்துக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி, நம்முடைய ஆட்சிக்கு பெருமை சேர்த்த அமைச்சர்! அவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்!

அடுத்து, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி! நமது வெல்லும் வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் அவர்கள்! உங்களின் அன்பையும் - நம்பிக்கையையும் பெற்று, ஏற்கனவே, இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர், மூன்றாவது முறையாக களமிறங்குகிறார். சிரித்த முகத்துக்கும் - மகிழ்ச்சியை உண்டாக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர்! அவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்!

அடுத்து, பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அ. கிருஷ்ணசாமி அவர்கள்! மாணவராக இருந்த காலத்தில் இருந்து, கழகத்துக்காக உழைக்கும் பற்றாளர். திருப்பெரும்புதூர் எம்.பி.யாக இருந்து, டெல்லியில் நம்முடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர், வாதாடியவர், போராடியவர்! இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்தில் தொகுதி நலனுக்காக முழங்கியவர். அவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்க வேண்டும்!

அடுத்து, கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி! நமது வெல்லும் வேட்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் அவர்கள்! கும்மிடிப்பூண்டி ஒன்றியப் பெருந்தலைவராகவும் - சட்டமன்ற உறுப்பினராகவும் - தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். அவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்!

அடுத்து, பொன்னேரி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த துரை சந்திரசேகர் அவர்கள்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளர். கடந்த தேர்தலிலும் உங்களின் அன்பைப் பெற்று, மக்கள் பணி ஆற்றியவர். அவருக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்!

அடுத்து, திருத்தணி சட்டமன்றத் தொகுதி! நமது வெல்லும் வேட்பாளர் டி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். நினைவில் வாழும் என்னுடய ஆருயிர் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களது அன்பையும் - அன்புக்குரிய சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களது ஆதரவையும் பெற்றவர். கடந்த ஐந்தாண்டுகளாக திராவிட மாடலில் வளர்த்தெடுக்கப்பட்ட திருத்தணி தொகுதியில் அவர் களமிறங்குகிறார். அவருக்கு நீங்கள் அனைவரும் முரசு சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்! 

இங்கு நிற்கும் வேட்பாளர்களின் வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). மக்களே சீட்டை கன்ஃபார்ம் செய்துவிட்டார்கள். இப்போது நீங்கள் உட்காரலாம். 

இந்த வேட்பாளர்களுக்கு நீங்கள் செலுத்தும் வாக்கு என்பது, டெல்லி ரிமோட் கண்ட்ரோலுக்கு இங்கு சிக்னல் கிடைக்காது; கண்டிப்பாக, N.D.A.-வுக்கு நீங்கள் நோ எண்ட்ரிதான் என்பதை காட்ட வேண்டும்! அப்போதுதான், நம்முடைய திராவிட மாடலில் செய்திருக்கும் திட்டங்கள் அனைத்தும், தடையில்லாமல் கிடைக்கும்!

கூவத்தூரில் தவழ்ந்து - ஊழலில் திளைத்து - உரிமைகளைத் தொலைத்து - தமிழ்நாட்டை நாசப்படுத்திய பழனிசாமியின் ஆட்சியில் என்ன வளர்ச்சி? 0.07 விழுக்காடு வளர்ச்சி! அதாவது, வளர்ச்சியே நின்றுவிட்டது! ஆனால், இன்றைக்கு, 11.19 விழுக்காடு வளர்ச்சி! இந்தியாவுக்கே ரோல்-மாடல்! இது, தமிழ்நாடு என்று தலைநிமிர்ந்து கம்பீரமாக சொல்லும் அளவுக்கு, ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். 

நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்ல ஆரம்பித்தேன் என்றால், உங்களுக்கே ஒரு சந்தேகம் வந்துவிடும். என்னடா, தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலின், சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாற்றிவிட்டாரே என்று நினைப்பீர்கள். அந்தளவுக்கு, நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

ஆட்சிக்கு வந்து முதல் நாள் - முதல் கையெழுத்திலேயே, மகளிர் அனைவரும் விடியல் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பூண்டியில் இருந்து திருவள்ளூருக்கு வந்து காய்கறி விற்க வேண்டும் - ஊத்துக்கோட்டையில் இருந்து ரெட்ஹில்ஸ்-க்கு வேலைக்குப் போக வேண்டும் - திருப்பாச்சூரில் இருந்து திருத்தணியில் இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போக வேண்டும் - தாமரைப்பாக்கத்தில் இருந்து ஆவடி - அம்பத்தூருக்கு கம்பெனிகளுக்கு போக வேண்டும் என்று, எந்தப் பயணமாக இருந்தாலும், பெண்கள் நினைத்தால், நினைத்த உடனே, புறப்பட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம்.

பேருந்துக்கே மாதம் ஆயிரம் - ஆயிரத்தி 500 ஆகும் என்று, வீட்டிலேயே முடங்கியிருந்தவர்கள்கூட, தங்களின் வாய்ப்புகளைத் தேடி, பொருளாதாரச் சுதந்திரத்துடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அடுத்து, மகளிர் உரிமைத்தொகையைக் கொடுத்து, அவர்கள் தேவைகளுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்தோம். பெண்கள் அனைவரும் எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் சீர் என்று, அந்த உரிமையை பெருமையுடன் எடுத்துக் கொண்டார்கள். இதெல்லாம், பழனிசாமிக்கு பர்னால் தடவும் அளவுக்கு எரிச்சலை கொடுத்தது. இந்தத் திட்டங்களையும் - பயனடையும் பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசினார். அதற்கான பரிசாகத்தான், பத்து தோல்வி பழனிசாமி என்ற பட்டப்பெயருடன் இருக்கிறார்!

அந்தப் பெயரை, பதினோரு தோல்வி பழனிசாமி என்று அப்டேட் பண்ணிவிடலாமா? வாய்க்கொழுப்புடன், அசிங்கமாக   – அவதூறாக பேசிக் கொண்டு இருக்கிறார். ஒரு காமெடியில் வரும், “அடித்து கேட்டால்கூட சொல்ல மாட்டான்” என்பது போன்று, எவ்வளவு முறை கேட்டாலும் தன்னுடைய அரசு செய்த சாதனைகளை இதுவரைக்கும் சொல்லவே இல்லை!

ஆனால், உங்கள் முன்னால் நிற்கும் இந்த ஸ்டாலின், கம்பீரமாக சாதனைகளை புள்ளிவிவரங்களுடன் சொல்கிறேன். அனைத்தையும் தரவுகளுடன் சொல்ல முடியும்!

நான் முதல்வன் - மக்களைத் தேடி மருத்துவம் - இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 - புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் - அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் - கலைஞர் கனவு இல்லம் - தாயுமானவர் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதெல்லாம் மாநில முழுமைக்குமான திட்டங்கள். இந்த திருவள்ளூர் மாவட்டத்துக்கு செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை மட்டும் தலைப்புச் செய்திகளாக சொல்ல வேண்டும் என்றால்,

திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம்.

திருத்தணியில் புதிய பேருந்து நிலையம்.

குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம்.

சின்ன நொளம்பூரில் உயர்மட்டப் பாலம்.

173 கோடி ரூபாயில், பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில் திருப்பணிகள்.

183 கோடி ரூபாயில், திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயில் திருப்பணிகள்.

52 கோடி ரூபாயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் திருப்பணிகள்.

18 கோடி ரூபாயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோயில் திருப்பணிகள்.

மாநல்லூரில் மின் வாகனப் பூங்கா.

திருவொற்றியூரில் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள்.

பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம்.

கவரப்பேட்டை - சத்தியவேடு சாலைப் பணிகள்.

திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவுசார் நகரம்.

திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.

பொன்னேரி - கவரப்பேட்டை இடையே ரயில்வே மேம்பாலம்.

பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகள்.

60 சிறுபாலங்கள் அமைத்திருக்கிறோம்.

அம்பத்தூரில் தொழிலாளர் தங்கும் விடுதி.

திருமழிசை துணை நகரத் திட்டம்.

78 மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள்.

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல் மின்நிலையப் பணிகள், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.

திருவள்ளூர் - அரக்கோணம் சாலை, நான்குவழிச் சாலையாக ஆகப் போகிறது.

திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுகிறது.

விரைவில் தொடங்கப் போகும் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ.

இப்படி, எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

தலைவர் கலைஞர் எனக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம், “உழைப்பு! உழைப்பு! உழைப்பு!” “உண்மையாக உழைத்தால் ஊரே ஏற்றி வைத்து கொண்டாடும்!” - இதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம்!

நீங்களும் தினமும் டி.வி.யில் – செய்திகளில் பார்த்திருப்பீர்கள். முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்று காலையில் செய்தி போட்டால், மாலையில் இந்தத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்கிறார் என்று செய்தி வரும்.

இப்படி, தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்கும் உழைப்பால் அளந்து, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்று மைக்ரோ லெவலில் கவனித்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன்! அதுதான், உங்கள் முன்னால் நிற்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! 

திருவள்ளூர் மாவட்டத்துக்கு போகிறோம் என்று சொன்னதும், எனக்கு முதலில் நினைவுக்கு வந்த பெயர், டானியா. நாசருக்கு தெரியும்; தொடர்ந்து இரண்டு நாட்களாக டி.வி.யில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்;

சோசியல் மீடியாவிலும் பார்த்தேன். அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைதான் டானியா என்ற சிறுமி. ஆவடி, வீராபுரத்தில் இருக்கிறார்கள். அந்தக் குழந்தையை, என் குழந்தையைப் போன்று கவனித்து, பெரிய ஆபரேஷன் செய்து, அவர்கள் முகத்தில் அழகான புன்னகை தோன்றுவதைப் பார்த்துப் பார்த்து இன்றைக்கும் நான் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.

இங்கு இருக்கிறாரே நம்முடைய நாசர், அவருக்கு எத்தனை முறை ஃபோன் செய்து அந்தக் குழந்தையைப் பற்றி விசாரித்தேன் என்று அவருக்குத் தெரியும். அந்தக் குழந்தை, “நான் படித்து, டாக்டராகி, என்னைப் போன்று இருப்பவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிப்பேன்” என்று சொன்னபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!  “எல்லாருக்கும் எல்லாம்!” “அனைவரும் சமம்!” என்று வாய் வார்த்தைக்காக சொல்பவன் அல்ல, இந்த ஸ்டாலின். “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்று செயல்களில் காண்பிப்பவன்.

அதேபோன்று, ஆவடி – பருத்திப்பட்டில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யா - ப்ரியா - தர்ஷினி என்ற மூன்று மாணவிகள். அவர்கள் படிக்கும் பள்ளிகளில், தாங்கள் சந்திக்கும் பாகுபாடுகளைச் சொல்லி, வீடியோ வெளியிட்டிருந்தார்கள். நான் சோசியல் மீடியாவில் பார்த்தேன்.

சமூகத்தின் இந்த மனநிலையை உடைக்க வேண்டும் என்று அப்போதே நினைத்த நான், உடனே நாசரை அழைத்தேன். விசாரித்தேன். அவர்கள் வீட்டுக்கே நேராகச் சென்றேன். அங்கு சென்று, அவர்கள் அன்பாக கொடுத்த உணவைச் சாப்பிட்டு, இங்கு அன்பும் - சமத்துவமும் மட்டும்தான் நிலைக்கும் என்று காட்டினேன்.

இப்படி, ஒவ்வொரு செயலிலும், நம்முடைய தமிழ்நாட்டை முன்னோக்கி அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றுதான், போராடிக் கொண்டு இருக்கிறேன். ஆம், போராடுகிறேன். தொடர்ந்து போராடுவேன். போராடிக் கொண்டேதான் இருப்பேன். போராடியேதான் நான் சாவேன். ஏன் என்றால், தமிழ்நாடு – தமிழ்நாடாக இருப்பதே பலரது கண்ணை உறுத்துகிறது!

ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக, தமிழ்நாட்டில் ஏட்டிக்குப் போட்டி அரசாங்கம் நடத்தலாம் என்று நினைத்து ஒருவர் வந்தார். யார்? ஆளுநர் ரவி. “இனிமேல் - இந்த மாநிலத்தை – தமிழ்நாடு என்று அழைக்கக் கூடாது; தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று சொன்னார்.

பல ஆண்டுகாலமாக போராடி, தியாகி சங்கரலிங்கனார் அவர்கள், உண்ணாவிரதம் இருந்து, உயிர்கொடுத்தும் நிறைவேறாத கோரிக்கையை, தமிழன்னையின் தலைமகனாக வந்த நம்முடைய பேரறிஞர் அண்ணாதான், நம்முடைய தாய்க்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டி நிறைவேற்றினார். இதை நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? விட்டுக் கொடுத்தால் நாம் எல்லாம் தமிழர்கள்தானா? 

தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று சொன்னது, ஆர்.என்.ரவி என்ற தனிநபரின் குரல் மட்டும் அல்ல; அது, பா.ஜ.க.வின் குரல்! பின்னால் இருந்து இயக்கும், ஆர்.எஸ்.எஸ்.-இன் குரல்!

அதுமட்டுமல்ல, பா.ஜ.க.-வினர் என்னவெல்லாம் பேசினார்கள்... தமிழ்நாடு பெயரை மட்டுமல்ல; நாங்கள் நினைத்தால், தமிழ்நாட்டையே இரண்டாக உடைப்போம் - அந்த பவர் எங்களுக்கு இருக்கிறது என்று திமிராக பேசினார்கள்.

சவால்விட்டு சொல்கிறேன்! இந்த ஸ்டாலின் உயிரோடு இருக்கும் வரைக்கும் - தி.மு.க. இருக்கும் வரைக்கும் - தமிழ்நாட்டை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது! தைரியம் இருந்தால், தமிழ்நாட்டுக்கு தட்சிணப் பிரதேசம் என்று பெயர் வைப்போம் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அனைவரும், அடிமைசாமி போன்று வாய்மூடிக் கொண்டு இருக்க மாட்டோம்! நாங்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர்கள்! 

இப்போது தேர்தலுக்காக வந்த பா.ஜ.க., தமிழ்நாட்டில் இப்போது என்ன பேசுகிறார்கள்? அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும், அது N.D.A. கூட்டணி அரசாகத்தான் இருக்கும். மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

யாரோ ஒருவர் வாய் தவறி பேசிய பேச்சு அல்ல இது; ஒன்றிய அமைச்சர்களாக இருக்கும் பியுஷ் கோயல் அவர்கள், தர்மேந்திர பிரதான் அவர்கள், இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் என்று அனைவரும் இதையேதான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 

நான் கேட்கிறேன், இதைக் கண்டித்து, பழனிசாமி வாயிலிருந்து, ஒரே ஒரு வார்த்தையாவது வந்திருக்கிறதா? ஆமாம்சாமி போட்டு, அடிமைசாமியாக இருக்கும் பழனிசாமிக்கு, இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க, முதுகெலும்பு இருக்கிறதா? பழனிசாமியும், பழனிசாமிக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ். சாமிகளும் என்ன திட்டம் போட்டாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது!

தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, களமிறங்கியிருப்பது யார்? சூப்பர்ஸ்டார்! சூப்பர்ஸ்டார் யார்? சின்னக் குழந்தைகள்கூட சொல்கிறார்கள், நம்முடைய தேர்தல் அறிக்கை என்று. அதில் என்னென்ன ஹைலைட்? 

இங்கே இருக்கும் மகளிரைக் கேட்கிறேன். உங்கள் அண்ணன், இந்த ஸ்டாலின் கொடுக்கப் போகும் கூப்பன் எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய் மகளிர் அனைவரும் இப்போதே வீட்டிற்கு என்ன புதிய பொருள் வாங்கலாம் என்று டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தத் திட்டத்தில் எவ்வளவுக்கு கூப்பன் தரப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லையெனில், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்.

உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-ஐ வாங்கிக் கொள்ளலாம். உங்கள் வீட்டுக்காரரை எல்லாம் கேட்காதீர்கள். எதாவது பிரச்சினை என்றால், “அண்ணனிடம் சொல்லிவிடுவேன்” என்று சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.

அடுத்து, 20 லட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்.

உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில், ஆயிரத்தி 500 ரூபாய் உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம். 

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை ஆயிரத்தி 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்தி 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

2030-ஆம் ஆண்டிற்குள் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.

கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடலோரப் பகுதிகளில் சிப்காட் நீலப் பொருளாதார பூங்காக்கள் உருவாக்கப்படும்.

மீன் ஏற்றுமதியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களுடைய வருவாயைப் பெருக்குவதற்கு தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடற்பாசி வளர்ப்பு ஊக்குவிக்கப்படும்.

நவீன வசதிகளுடன் கூடிய மீன் விற்பனை அங்காடிகள் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். 

மீன் மற்றும் கருவாடு சில்லறை விற்பனை, கடற்பாசி வளர்ப்பு ஆகிய சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம், கொஞ்சம்தான்! தேர்தல் அறிக்கை புத்தகத்தில் இன்னும் ஏராளமாக இருக்கிறது. இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று இருந்த நிலையை மாற்றி, “தெற்குதான் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது” என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். அப்படி வழிகாட்டும் தெற்கை ஒன்றிய அரசு வஞ்சிக்கலாமா?

ஒருபக்கம் சிறப்புத் திட்டங்களையும் - நிதியையும் தர மறுக்கிறார்கள். வரும் தொழிற்சாலைகளை மிரட்டி வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிடுகிறார்கள். 

நம்முடைய குழந்தைகள் படிப்பதற்கான நிதியைக் கொடுக்க மறுக்கிறார்கள். 

தமிழ்மொழியை புறக்கணிக்கிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டிற்குள் கலவரத்தை உண்டாக்க எப்படிப்பட்ட சதித்திட்டங்களை எல்லாம் போட்டார்கள்.

இன்றைக்கு நம்முடைய தமிழ்நாட்டில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான சகோதர-சகோதரிகள் வாழ்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? “எங்களுடைய மாநிலங்களில் மறுக்கப்பட்ட பல வாய்ப்புகள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. எங்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பேட்டி கொடுக்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க. என்ன செய்தது? இங்கே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று இல்லாத புரளியை எல்லாம் கிளப்புகிறார்கள். இதுபோன்ற பல கலவரத் திட்டங்களை சுக்குநூறாக உடைத்திருக்கிறோம். ஒவ்வொரு அவதூறையும் உண்மைகளால் உடைத்து எறிந்திருக்கிறோம். 

தமிழ்நாட்டின் மீது இப்படி அபாண்டமாக பழி சுமத்துகிறீர்களே என்று பழனிசாமிக்கு ஒருமுறையாவது கோபம் வந்ததா?

ஒடிசா மாநிலத்தில் வாக்கு வாங்க வேண்டும் என்று, தமிழர்களை திருடர்கள் என்று சொல்கிறீர்களே, இது என்ன நியாயம் என்று பழனிசாமி பொங்கி எழுந்தாரா?

மதுரை-கோவைக்கு மெட்ரோ ரயில் தர மாட்டோம் என்று அடாவடி செய்கிறார்களே, பழனிசாமிக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததா?

பத்து வருடத்திற்கும் மேல், செங்கல் செங்கல்லாக எய்ம்ஸ் மருத்துவமனையை இன்னும் கட்டுகிறார்களே என்று பழனிசாமிக்கு ஆத்திரம் வந்ததா?

விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பழனிசாமி எதாவது கொந்தளித்தாரா?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, பழனிசாமி கோபப்பட்டாரா?

இப்போதுகூட, மும்மொழிக் கொள்கை என்று பேசும் பா.ஜ.க-வை எதிர்த்து போராடினாரா?

தமிழ்நாட்டை பாதிக்கும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து பழனிசாமி என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா?

கிறிஸ்தவர்களுக்கு எதிராக F.C.R.A. சட்டம் இப்போது கொண்டுவரப் போகிறார்கள், அதை எதிர்த்து பழனிசாமி பொங்கி எழுந்தாரா?

பொதுசிவில் சட்டம் என்று பேசுகிறார்களே, அதை பழனிசாமி தட்டிக் கேட்டாரா?

இப்படி தமிழ்நாட்டிற்காகவும் - தமிழ்நாட்டு மக்களுக்காகவும் எந்தக் குரலையும் எழுப்பாமல், எந்த முகத்துடன் வெட்கமில்லாமல் வாக்கு கேட்டு வருகிறார் பழனிசாமி?

தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க-விற்கு பல்லக்கு தூக்குகிறீர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, கொஞ்சமாவது சூடு – சுரணை - சுயமரியாதை இருக்க வேண்டாமா உங்களுக்கு?

பா.ஜ.க.-விற்கு பாதம்தாங்கியாக இருந்து துரோகம் செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் வெகுமானம் எவ்வளவு? எவ்வளவு வெகுமானம் வந்தாலும், தமிழ் மானத்தை அடகு வைக்கலாமா?

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பழனிசாமி தமிழ்நாட்டை ஆட்சி செய்த நான்கு ஆண்டுகள் என்பது, ஊழல்களும் – மக்கள் விரோத நடவடிக்கைகளும் நிறைந்த, இருண்ட ஆட்சிக்காலம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அவருடைய ஆட்சியின் அடையாளங்கள் என்ன? பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி! துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி! கொடூரமான ஆட்சிக்கு கொடநாடே சாட்சி!

கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி என்று எல்லாமே நெகட்டிவாகத்தான் இருக்கிறது. தவறுக்கு மேல் தவறுகள் செய்த பழனிசாமி, தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க சரண்டரான இடம்தான் பா.ஜ.க. வாஷிங்மெஷின். தன்னுடைய தவறுகளிலிருந்து தப்பிக்க, அவர் கொடுத்த விலைதான், தமிழ்நாட்டினுடைய உரிமைகள்.

அ.தி.மு.க-விற்கு விழும் ஒவ்வொரு வாக்கும், பா.ஜ.க.-விற்கு விழும் வாக்குகள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விழும் தடைக்கற்கள்! 

எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். அதனால்தான் நடக்கும் தேர்தல், தமிழ்நாடு வெர்சஸ் N.D.A. என்று அழுத்தமாக சொல்கிறேன்.

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியைக் கொடுத்து விரட்ட வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு இருக்கும், டெல்லியின் கண்ட்ரோலுக்கு அடிமைகளாக இருப்பவர்கள் தமிழ்நாட்டில் ஆளக் கூடாது!

எனவே, தமிழ்நாடு வெல்ல, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

அதற்கு, ஆவடி தொகுதியில் நாசர் அவர்களுக்கும், திருவள்ளூர் தொகுதியில் வி.ஜி. ராஜேந்திரன் அவர்களுக்கும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் கோவிந்தராஜன் அவர்களுக்கும், பூவிருந்தவல்லி தொகுதியில் கிருஷ்ணசாமி அவர்களுக்கும், வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அதேபோன்று, பொன்னேரி தொகுதியில் துரை சந்திரசேகர் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

கணக்கு போட்டு காய்களை நகர்த்துபவர்கள், ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்களின் கணக்கு என்றைக்குமே தப்பாது. பா.ஜ.க.வின் ஆணவத்திற்கும் - அ.தி.மு.க.வின் துரோகங்களுக்கும் ஒருசேர முடிவுரை எழுதுவோம்!

தலைநிமிர்ந்த தமிழ்நாடு வளம் பெற, நல்லாட்சி தொடர்ந்திட, வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

தமிழ்நாடு வெல்லட்டும்!

நன்றி! வணக்கம்!

Also Read: நெல் ஊக்கத்தொகை.. வெளியான பரபரப்பு கடிதம்.. அம்பலப்பட்ட பாஜக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொய்கள்!