M K Stalin
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்று (ஏப்.11) சிவகங்கையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
சிவகங்கை மாவட்டம் என்றால், என்ன ஸ்பெஷல்? காரசாரமான சாப்பாடு; பாரம்பரிய மாளிகை வீடுகள் கொண்ட செட்டிநாடு! திருப்பாச்சேத்தி அருவா! காளையார்கோவில் சிற்பம்! பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்! பிரான்மலை ஷேக் ஒளியுள்ள தர்கா, இடைக்காட்டூர் தேவாலயம் என திரும்பும் பக்கமெல்லாம் சிறப்புக்குரிய மாவட்டம், இந்த சிவகங்கை!
சிறப்புக்குரிய இந்த சிவகங்கை திராவிட மாடல் 2.0–க்கு ரெடியா? ரெடி (மக்கள்). மகிழ்ச்சி!
இந்த சிவகங்கை மண்ணுக்கு வரும்போதே, என்னுடைய உடல் எல்லாம் சிலிர்த்தது. காரணம் என்ன தெரியுமா? முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவர், வீரமங்கை வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் என வாழையடி வாழையாக, குடும்பம் குடும்பமாக தாய்நாட்டுக்காக போராடிய மண்! மானம் காத்த மருதிருவர் என போற்றப்பட்ட மருது சகோதரர்களின் மண்!
உயிருக்கு அஞ்சாமல் உடலில் நெருப்பைக் கட்டிக் கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்த வீரத்தாய் குயிலி வாழ்ந்த மண்! எல்லாவற்றிற்கும் மேல், நான் சட்டமன்றத்தில் தலைநிமிர்ந்து அறிவித்தேனே, இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று, பெருமிதத்தோடு சொல்ல வைத்திருக்கும் நம் தாய்மடி கீழடி இருக்கும் மண்!
இத்தனை சிறப்புகள் இருக்கும் காரணத்தினால், கடந்த 5 ஆண்டுகளில் அதிக முறை வந்து கொண்டேதான் இருந்தேன். இங்கு வந்தவுடன் என் நினைவுக்கு வந்தது, காரைக்குடியில் மரியாதைக்குரிய அண்ணன் ப. சிதம்பரம் அவர்கள் தன் தாயார் பெயரில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைத்திருக்கும் நூலகத்தை திறக்க வந்தேன். அன்றே, ஆதிதிராவிட நல மாணவிகள் விடுதிக்கு திடீர் ஆய்வுக்குச் சென்றேன்.
ஒக்கூரில் இலங்கைத் தமிழர் முகாமில் ஆய்வு,
மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்.
அதுட்டுமல்ல, 6 மாதங்களுக்கு முன்பு, இடைக்காட்டூரில் இருக்கும் பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்துக்கு வந்து மராமத்து பணிகளை தொடங்கி வைத்தது,
அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகள்,
காரைக்குடியில் மினி டைடல் பார்க்,
அரசு சட்டக் கல்லூரிக் கட்டடத்தின் திறப்பு விழா,
செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழா,
2 ஆயிரத்து 119 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டம்,
அண்ணல் காந்தியும் – தோழர் ஜீவாவும் சந்தித்த சிராவயலில், சிலையுடன்கூடிய அரங்கம் திறப்பு விழா,
கவிஞர் முடியரசனார் சிலை திறப்பு,
தந்தை பெரியாரும் – தலைவர் கலைஞரும் போற்றிய தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நினைவு கல்வெட்டு நிகழ்ச்சி – இன்னும் நிறைய இருக்கிறது.
அமைச்சர் பெரியகருப்பனும், அண்ணன் சிதம்பரம் அவர்களும், என்னுடைய சகோதரர் கார்த்தி சிதம்பரமும் உங்கள் மாவட்டத்துக்கு அவ்வளவு திட்டங்களை என்னிடம் எடுத்துச் சொல்லி, அதற்காக விழாவும் நடத்தியிருக்கிறார்கள்.
மீண்டும் சிவகங்கை மாவட்ட வளர்ச்சிக்காக நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன்.
முதலில், உங்கள் அனுமதியோடு நம்முடைய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தப் போகிறேன்.
முதலில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள். சிவகங்கை மாவட்டக் கழகத்தின் சிங்கம். தொடர்ந்து நான்கு முறை திருப்பத்தூரில் வெற்றியைப் பெற்ற அவருக்கு, ஐந்தாவது முறையும் நீங்கள் வெற்றியை வழங்க வேண்டும். தன்னுடைய துறை சார்பாக தமிழ்நாட்டு மக்களின் வளத்துக்கும் – நலத்துக்கும் அயராமல் தொண்டாற்றியவர். பெரிய மீசைக்காரர். பெரியகருப்பனுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார். அமைச்சராக இருந்தவர். கடந்த முறை இதே மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்றவர். எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து செயல்படக் கூடியவர். மானாமதுரைக்கு பல்வேறு திட்டங்களையும் – பணிகளையும் செய்து கொடுத்த, தமிழரசி ரவிக்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, காரைக்குடி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த மாங்குடி அவர்கள். என்னுடைய அருமைச் சகோதரர் ராகுல் காந்தி மற்றும் மரியாதைக்குரிய ப.சிதம்பரம் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக மக்கள் பணியாற்றியவர்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவராக செயல்பட்டு வருபவர். காரைக்குடிக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போன்றே, மீண்டும் அவர் வெற்றி பெற கை சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, சிவகங்கை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் நிறுவனத் தலைவர் என்னுடைய இனிய சகோதரர் கருணாஸ் அவர்கள். கருணாஸுக்கு அறிமுகம் தேவையில்லை. தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்.
தன்னுடைய அமைப்பின் மூலமாக – தன்னுடைய எதார்த்த பேச்சின் மூலமாக நமது கூட்டணிக்கு வலு சேர்த்துக் கொண்டிருப்பவர். தோழமை இயக்கத்தைச் சேர்ந்த இவர், நம்முடைய வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார். சிவகங்கை தொகுதி சிறப்புபெற, சகோதரர் கருணாஸ் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை அளிக்க வேண்டும்.
இந்த நான்கு பேரின் வெற்றியும் உறுதிதானே? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் நான்கு பேரும் இப்போது உட்காரலாம். மக்கள் இப்போதே உங்கள் வெற்றியை உறுதி செய்துவிட்டார்கள். சீட் கன்ஃபார்ம்!
தொடக்கத்திலேயே, நான் சொன்ன திட்டங்கள் மட்டும் அல்லாமல், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உங்கள் மாவட்டத்திற்காக இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.
கீழடி அருங்காட்சியகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகம்,
காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்வு,
மானாமதுரையை நகராட்சியாக தரமுயர்வு,
சிவகங்கையில் தோழி விடுதி,
மானாமதுரையில் அரசு கலைக் கல்லூரி.
வீரமங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு முழுவுருவச் சிலை,
வாளுக்குவேலி அம்பலத்துக்கு சிலை,
வீரமங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் குயிலிக்கு சிலை,
இதுதவிர, பூலாங்குறிச்சி மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் ஆய்வகம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இலுப்பைக்குடி சிப்காட்டில் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் M.R.F. நிறுவனத்தின் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைய இருக்கிறது.
மானாமதுரையில் புதிய ஐ.டி.ஐ. மற்றும் மினி ஸ்டேடியம் அமைய இருக்கிறது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக 18 கோடி ரூபாயில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இது அனைத்தையும்விட நான் பெருமைப்படும் சாதனையைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால்,
ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை தலைவர் கலைஞர் முதலமைச்சராகி எப்படி ஓட்டிக் காட்டினாரோ, அதேபோன்று நானும், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை 18 ஆண்டுகளுக்கு பிறகு, 2024-ஆம் ஆண்டு நடத்திக் காட்டியிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியடைந்த அந்தப் பகுதி முக்கியஸ்தர்கள் அனைவரும், சென்னையில் கோட்டைக்கு வந்து என்னைச் சந்தித்து எனக்கு நன்றியைச் சொன்னார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய சொந்தத் தொகுதிக்கு எப்படி எதையும் தட்டாமல் செய்து கொடுப்பேனோ, அதேபோன்றுதான், சிவகங்கை மாவட்டத்திற்கும் கேட்டதையெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றித் தந்திருக்கிறேன்.
இங்கு மேடையில் இருக்கும் என்னுடைய பெருமதிப்பிற்குரிய அண்ணன் சிதம்பரம் அவர்கள், சில மாதங்களுக்கு முன்பு, அரசு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறபோது சொன்னார், “நான் மீண்டும் முதல்வர் ஆவேன். அப்போது சிவகங்கை மாவட்ட அடுத்தகட்ட கோரிக்கைகளுடன் வருவேன்” என்று சொன்னார்.
உறுதியாகச் சொல்கிறேன்… நாம்தான் வருவோம். நிச்சயம் அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். சிவகங்கை மட்டுமல்ல, எந்த மாவட்டத்துக்கு போனாலும், சாதனைகளைச் சொல்வதற்கு என்னிடம் மிகப்பெரிய சாதனைப் பட்டியலே இருக்கிறது.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம் என்ன இருக்கிறது? வாய் மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் ‘பர்சனல் அட்டாக்’ தாண்டி, பத்து வார்த்தைகூட அவரால் பேச முடியவில்லை.
இப்போது ஐ.பி.எல். போட்டி நடக்கிறது. அதில் வீரர்களை எப்படி ஏலம் எடுப்பார்களோ, அதுபோன்று அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, MLA-க்களை ஏலம் எடுத்து முதலமைச்சர் ஆனவர்தான் பழனிசாமி. முதலமைச்சராக இருந்த 4 ஆண்டுகளும் மருந்துக்குகூட எந்த நல்லதையும் செய்யவில்லை. அந்தச் சீரழிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு அனைத்து பிரிவுகளிலும் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கிறோம்.
ஒன்றிய அரசின் அனைத்து தரவரிசையிலும் தமிழ்நாட்டுக்கு முக்கியமான இடமும், ஏன் பல அமைச்சகங்களின் விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும், தமிழ்நாட்டுக்கு பிரசாரம் செய்ய வந்திருக்கும், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், “தமிழ்நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் பின்னோக்கிப் போகிறது” என்று, உளறிவிட்டு – பிதற்றிவிட்டு சென்றிருக்கிறார். பச்சைப் பொய் கேள்விப்பட்டிருக்கிறோம்! இது அதற்கும் மேல், கடைந்தெடுத்த ‘காவிப் பொய்’!
பொருளாதார வளர்ச்சியில் 11.19 விழுக்காட்டுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இன்றைக்கு நம்பர் ஒன். ஜி.டி.பி.லும் – தனிநபர் வருமானத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறதா, இல்லையா?
உயர் கல்விச் சேர்க்கையில் இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் கல்லூரிக்கு போகிறார்களா, இல்லையா?
இந்தியாவிலேயே வறுமை குறைந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா, இல்லையா?
இந்தியாவிலேயே பெண் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடாக இன்றைக்கு இருக்கிறது. அதுவும் மொத்த பணியாளர்களில் கிட்டதட்ட சரிபாதி அளவு தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.
ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் முதலிடம்,
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம்,
தோல் பொருள் ஏற்றுமதியில் முதலிடம்,
ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம்!
இவை மட்டுமல்ல, இப்போது இரண்டு நாள் முன்பு, ஒரு ரிப்போர்ட் வந்திருக்கிறது. கடந்த நிதியாண்டு நிலவரப்படி, இந்தியாவிலேயே தொழில் உற்பத்தியிலும் தமிழ்நாடுதான் முதலிடம் பிடித்திருக்கிறது.
இந்தியாவிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.
இன்னும் இப்படி நிறைய லிஸ்ட் போட முடியும். இதையெல்லாம் நாங்களா சொல்கிறோம்? ஒன்றிய பா.ஜ.க. அரசே சொல்லியிருக்கிறது. ஆய்வறிக்கைகளில் அதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இதைக்கூட படிக்காமல், இதுகூடிய புரியாமலா ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள்?
மகாராஷ்டிரா முதலமைச்சர் ஃபட்னாவிஸ் மதுரை வரை வந்தார். பிரதமர் மோடி அவர்கள் திருப்பரங்குன்றம் வரை வந்தார். ஆனால், கீழடியும் பக்கத்திலேயேதான் இருக்கிறது... அங்கு வராமல், எது இவர்களை தடுக்கிறது? கீழடி ஆய்வறிக்கையை ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்? தமிழர்களின் வரலாற்றுப் பெருமை உங்களுக்கு ஏன் கசக்கிறது? இது எதற்கும் அவர்களிடம் பதில் இருக்காது.
தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதையேதான் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் பிரசாரத்திற்காக வரும் வடநாட்டு பா.ஜ.க. தலைவர்கள். இப்போது வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக யார் குற்றம் செய்தாலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, விரைவாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, உச்சபட்ச தண்டனையும் பெற்று தரப்படுகிறது.
குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கிறோம் என்று ஒரு வழக்கையாவது நீங்கள் காட்ட முடியுமா? பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கவும் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம். பாலியல் குற்றவாளிகளுக்கு எக்காரணம் கொண்டும் முன்விடுதலை கிடையாது எனவும் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு வரும் ஒன்றிய அமைச்சர்கள், அவர்கள் ஆளும் மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு பற்றி பேசுவார்களா? உங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் நிலை என்ன? நான் சொல்லவா?
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கூலித் தொழிலாளியின் நான்கு வயதான சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சிறுமியின் பெற்றோர் மனம் வெறுத்து, போலீஸில் புகார் கொடுத்தபோது என்ன ஆனது தெரியுமா? அவர்கள் புகாரை பதிவு செய்ய மறுத்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெற்றோர்களையே லாக்கப்பில் கட்டி வைத்து அடித்து, உதைத்து, துன்புறுத்தி, இதை வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார்கள்.
கடைசியாக வேறு வழி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட F.I.R.-லும் போக்சோ பிரிவைக் கூட சேர்க்கவில்லை. இந்த கொடுமையைப் பார்த்து, உச்சநீதிமன்றமே உத்தரப்பிரதேச காவல்துறையை கடுமையாக கண்டித்திருக்கிறது. நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. காசியாபாத் காவல் ஆணையரை உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இப்படி ஒரு காட்டாட்சி பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில்தான் நடக்கிறது.
2020-ஆம் ஆண்டு இதே உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஹத்ராஸ் சம்பவத்தை மறக்க முடியுமா? 19 வயதான தலித் சிறுமி கேங்-ரேப் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலை, அவரது அப்பா, அம்மா அவர்களின் சம்மதம் ஏதும் கேட்காமலேயே, இரவோடு இரவாக போலீஸே எரித்தார்கள். ஆறுதல் சொல்லச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் தடுத்தார்கள்.
பிரதமர் மோடி அவர்களின் குஜராத் நிலைமை என்ன பெரிய உத்தமமா? கர்ப்பிணி பெண் என்றுகூட பார்க்காமல் பில்கிஸ் பானு அவர்களை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை ‘ரிலீஸ்’ செய்த மாபாதக அரசுதான் பா.ஜ.க. அரசு!
காஷ்மீரில் 8 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் பேரணி நடத்தினாரா, இல்லையா?
இன்னும், மணிப்பூரில் எத்தனை ஆயிரம் கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது! இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. தாங்கள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் குற்றவாளிகளை கொண்டாடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பா.ஜ.க.காரர்கள், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா?
அரசே குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மோசமான நிலைதான் பா.ஜ.க. மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கெல்லாம் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச, அதுவும் நள்ளிரவில் கூட பெண்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் வேலைகளுக்கு சென்றுவரும் தமிழ்நாடு பற்றி பேச அருகதை இல்லை.
இப்போது நான் சொன்னதையெல்லாம் மறுக்கும் தைரியம், தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் எந்த பா.ஜ.க. தலைவருக்காவது இருக்கிறதா?
பா.ஜ.க. தலைமையிலான N.D.A. உள்ளே வந்தால், குற்றவாளிகளும் கலவர கிரிமினல்களும்தான் ஆட்சி செய்வார்கள். N.D.A ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ எப்போதும் இடமே இருக்காது.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் பற்றி பேசுகிறார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு - சாத்தான்குளம் படுகொலை - முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிலேயே கொலை கொள்ளை – பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் – தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ‘சிட்டிங்’ அமைச்சர்களே சிக்கியது என அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள், சீனப் பெருஞ்சுவரைவிட நீளமாக போகும்! இந்த எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி செய்தது அ.தி.மு.க. அரசு!
ஆனால், நம்முடைய ஆட்சியில், தவறு செய்தது காவலராக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, அவர்களைக் கைது செய்து, விரைவாக வழக்கு நடத்தி, தகுந்த தண்டனை பெற்றுத் தருகிறோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், மாவட்டந்தோறும் தோழி விடுதிகள், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, அரசு வீடுகள், குடும்பத்தலைவிகள் பெயரில் ஒதுக்கீடு, பெண்கள் பெயரில் சொத்தை பதிவு செய்தால் கட்டணச் சலுகை, இப்படி பெண்களுக்காகவே இயங்கும் அரசு ‘திராவிட மாடல்’ அரசு!
அதற்கு எடுத்துக்காட்டாக, ‘தி ஃபெடரல்’ என்கிற ஆங்கில ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நம்முடைய விடியல் பயணம் திட்டத்தில், பேருந்து பயணம் செய்யும் பெண்களிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள். பேட்டி எடுத்தவரும் ஒரு பெண் செய்தியாளர்தான்!
அதில் பெண்கள் எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்று சென்று பாருங்கள். “எந்த ஆட்சியிலும் இதற்கு முன்னர் இப்படி செய்ததில்லை. இந்த முறை கண்டிப்பாக தி.மு.க.வுக்குதான் எங்கள் ஓட்டு” என்று வெளிப்படையாக சொல்கிறார்கள். இதில் கூடுதல் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இதுவரை தி.மு.க.வுக்கு ஒருமுறைகூட வாக்களிக்காத பெண்கள்கூட, விடியல் பயணம் திட்டத்தின் காரணமாக தி.மு.க.வுக்கு வாக்களிக்க முடிவெடுத்துவிட்டார்கள் என்று அதில் சொல்கிறார்கள்.
இதனால், 2021-இல் நாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத மேற்கு மண்டலத்திலும் இந்த முறை தி.மு.க.தான் ஸ்வீப் பண்ணப் போகிறது என்று சொல்கிறார்கள். எல்லா சர்வேயிலும், எல்லா கருத்துக்கணிப்பிலும் இதுதான் பிரதிபலிக்கிறது.
போக்குவரத்துத் துறையை பொறுத்தவரையில், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 10 ஆயிரம் புதிய பேருந்துகளை இயக்கப் போகிறோம். பல புதிய வழித்தடங்களிலும் விடியல் பேருந்துகள், மினி பஸ் ஆகியவற்றை விடப் போகிறோம்.
பெண்களுக்காக ஏற்கெனவே இருக்கும் திட்டங்கள் மட்டுமே போதும் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் இன்னும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான், நம்முடைய சூப்பர்ஸ்டாரான தி.மு.க. தேர்தல் அறிக்கையைக் களத்தில் இறக்கியிருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் இந்த சூப்பர்ஸ்டாரும் நமக்காக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும், ஒரு சில சூப்பர் ஹிட் வாக்குறுதிகளை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு - இல்லத்தரசி திட்டம்! இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப்போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்! இந்தக் கூப்பனை வைத்து, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் என்று என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். எங்கே வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; எக்ஸ்சேஞ்சும் செய்து கொள்ளலாம். வீட்டுக்காரரிடமெல்லாம் கேட்காதீர்கள். அவர்கள் எதாவது சொன்னார்கள் என்றால், எங்கள் அண்ணனிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லுங்கள். இது முழுக்க முழுக்க உங்கள் சாய்ஸ்; உங்களுக்காக நான் கொண்டு வரும் திட்டம்! பெண்கள்தான் இதை டிசைட் பண்ண வேண்டும்!
எப்படி தலைவர் கலைஞர் சொன்னபடியே கலர் டிவியும், கேஸ் அடுப்பும் கொடுத்தாரோ... அவரது மகனான நான், சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன்.
அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. இப்போது மாதம் ஆயிரம் ரூபாய்! திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எவ்வளவு? அப்படியே டபுள்! மாதம் 2 ஆயிரம் ரூபாய்!
இப்போதே பெண்கள் எல்லோரும் கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கணக்கு? பொங்கலுக்கு முன்பு, சொல்லிவிட்டு 3 ஆயிரம்! பிப்ரவரியில், சொல்லாமலேயே 5 ஆயிரம்! ஆகமொத்தம் 8 ஆயிரம்! அடுத்து, இல்லத்தரசி கூப்பனில் 8 ஆயிரம். “எட்டு + எட்டு, உதயசூரியனுக்குதான் எங்கள் ஓட்டு” என பெண்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டார்கள்.
ஒரு பாட்டு இருக்கிறது. “எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ, நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சிக்கோ”, இது பாட்ஷா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பாடிய பாட்டு. அதுபோன்று, திராவிட மாடல் ஆட்சியில், எட்டு எட்டாக நம்முடைய பெண்கள் எல்லாம் கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், நம்முடைய வெற்றியும் இந்த முறை யாரும் எட்டாத உயரத்திற்கு போகப் போகிறது!
மகளிர் மட்டுமல்ல, மாணவர்களுக்கும் ஸ்பெஷல் அறிவிப்புகள் இருக்கின்றன. கல்லூரிக்குப் போகும் மாணவர்களுக்கு வழங்கி வரும் புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன், உதவித்தொகை, இனி ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
2030-க்குள் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப் போகிறோம்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
காலை உணவுத் திட்டம், ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
திராவிட மாடல் 2.0-வில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் ஆகியோர், தொழில் தொடங்க கடன் பெறும் உச்சவரம்பு 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்காக, நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, இனி எந்த சூரிட்டியும் இல்லாமலேயே 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க வங்கிக் கடன் வசதி ஏற்படுத்தி தரப்படும்!
இது எல்லாவற்றையும் உங்கள் அக்கா, தங்கச்சி, மதினி, நாத்தனார், பக்கத்து வீட்டு பெண்கள் எல்லோருக்கும் சொல்வீர்களா? இந்த அண்ணன் ஸ்டாலினுக்காக பெண்கள் நீங்களே பிரசாரத்தில் இறங்க வேண்டும்.
இத்தனை அருமையான வாக்குறுதிகளை கொடுத்திருக்கும் இந்த ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா? இல்லை, பெண்கள் பற்றி எல்லா கூட்டத்திலும் தரக்குறைவாக பேசும் பழனிசாமியின் ஓனரான N.D.A. ஆட்சி வேண்டுமா?
2026 ஜனநாயகப் போரில், வெல்லப்போவது, தமிழ்நாடு அணியா டெல்லி அணியா? தமிழ்நாடு அணி (மக்கள்). நடக்க இருக்கும் தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டுமா அல்லது சிறிது நேரம் முன்பு நான் சொன்ன பா.ஜ.க. மாநிலங்கள் மாதிரி படுகுழிக்குப் போக வேண்டுமா என முடிவு செய்யும் தேர்தல்.
ஏன், அ.தி.மு.க. என்று சொல்லாமல் பா.ஜ.க. என சொல்கிறேன் என்ற புரிந்து கொள்ளுங்கள். அ.தி.மு.க.வே ஜெயித்தாலும் பா.ஜ.க. ஆட்சிதான் இங்கு அமையும்! தி.மு.க. கூட்டணியைத் தவிர, வேறு எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் அது பா.ஜ.க.வுக்கு செலுத்தும் வாக்குதான்!
எனவே, சொன்னதைச் செய்யும் கலைஞரின் மகனாக கேட்கிறேன்...
திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன் அவர்களுக்கும் - மானாமதுரை தொகுதியில் தமிழரசி ரவிக்குமார் அவர்களுக்கும் - சிவகங்கை தொகுதியில் கருணாஸ் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்!
அதேபோன்று, காரைக்குடி தொகுதியில் நம் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை நாங்கள் வழங்குவோம். அதற்கு, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
நன்றி, வணக்கம்!
Also Read
-
”N.D.A. எனும் பேரிடர்.. டெல்லி அடிமை தான் பழனிசாமி!” புதுக்கோட்டையில் அனல் பறந்த முதலமைச்சரின் பேச்சு!
-
“234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சந்தீப் மிட்டலை திரும்பப் பெறுக : தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு MP கடிதம்!
-
நிதானம் கெட்ட பழனிசாமி : மே முதல் வாரத்தில் மொத்தமாக திமிர் அடங்கிவிடும் - முரசொலி!
-
“அவர்களது மூட நம்பிக்கைகளை உடைக்கிறேன் பாருங்கள்…” - தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!