M K Stalin

“அவர்களது மூட நம்பிக்கைகளை உடைக்கிறேன் பாருங்கள்…” - தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.04.2026) தஞ்சையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை :-

மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று; யானை கட்டி போரடித்த மண், இந்த தஞ்சை மண்! காவிரித்தாயின் மண்ணுக்கு கலைஞரின் மகன் வந்திருக்கிறேன். மே 4 – திராவிட மாடல் 2.0 வெற்றியை அறுவடை செய்ய தஞ்சாவூர் தயாரா? தயார் (மக்கள்). நன்றி... அதற்கான களத்தை தயார் செய்யத்தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்திற்கு நான் வந்திருக்கிறேன்.

தஞ்சாவூர் வந்ததும் என்னுடைய நினைவுக்கு வந்தது, ‘டெல்டா மண்ணின் மைந்தர்’ மரியாதைக்குரிய அண்ணன் கோ.சி. மணி அவர்கள்! அவர் எப்படியெல்லாம் இந்தப் பகுதியை வளர்த்தெடுத்தார், தலைவர் கலைஞரின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதியாக இருந்தார் என்பதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்படி அவர் கட்டிக்காத்த மண்ணுக்கு - இந்த தஞ்சை மண்டலத்திற்கு நான் வந்திருக்கிறேன்.

தஞ்சைத் தரணிக்கு வந்தாலே, இனம்புரியாத ஒரு கம்பீரம் பிறக்கிறது. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி, சோழ சாம்ராஜ்யத்தை மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்திய ராஜ ராஜ சோழனும், கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழனும்தான் தமிழர்களின் கம்பீரத்துக்கு காரணம்! இப்படி சிறப்புகளுக்கு பஞ்சமில்லாத மாவட்டத்துக்கு, சிறப்பான நம் ஆட்சி தொடர ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன்.

தஞ்சைக்கு நான் வருவது புதிதா? பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, விழாக்களுக்கு வந்தது உண்டு. அரசு நலத்திட்ட விழாக்கள், கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடும் நிகழ்வு, பீமனோடை தூர்வாரும் பணிகள் ஆய்வு, ஆலக்குடியில் தூர்வாரும் பணிகள் ஆய்வு, திராவிடர் கழகம் நடத்திய கலைஞர் நூற்றாண்டு விழா, இங்கு மேடையில் இருக்கும் சகோதரர் துரை சந்திரசேகரன் இல்லத் திருமண விழா, நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறேன்.

அண்மையில்கூட, நம்முடைய அருமைச் சகோதரர் வைத்திலிங்கம் தலைமையில், பல்லாயிரம் பேர் கழகத்தில் இணைந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அது முடிந்ததும், டெல்டா மண்டல ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினோம். அதற்காகவும் வந்திருந்தேன்.

அடுத்து இப்போது, என்னுடைய பரப்புரைப் பயணத்தை தொடங்கியதும், இதே ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த, திருவாரூரில்தான்! தொடர்ந்து, மாநிலத்தில் தெற்கு, மேற்கு, வடக்கு என்று சுற்றி, மீண்டும் இதயப்பகுதியான டெல்டாவுக்கே வந்துவிட்டேன். திராவிட மாடல் நல்லாட்சி தொடர வேண்டும் என்று தமிழ்நாடே இன்றைக்கு சொல்கிறது. அதற்கு, தஞ்சையும் தயாரா? தயார் (மக்கள்). 200 உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! 200 தொகுதிகள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது 200 தொகுதிகளையும் தாண்டி வெல்வோம் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது!

நமது வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தலாமா?

முதலில், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் கோவி. செழியன் அவர்கள். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர். இப்போது உயர்கல்வித்துறை அமைச்சர். திருவிடைமருதூருக்கு புதிய அரசுக் கல்லூரி கொண்டு வந்திருக்கிறார். தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை, உயர்ந்த கல்வித்துறையாக மாற்றியது கோவி. செழியன் அவர்களின் சாதனை. அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, திருவையாறு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் துரை சந்திரசேகரன். தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர். திருவையாறு தொகுதியில் 7 முறை போட்டிபோட்டு 5 முறை வெற்றி பெற்றதே இவரின் மக்கள் செல்வாக்குக்கு சாட்சி. திருவையாறு பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம். திருக்காட்டுப்பள்ளியில் கலைக் கல்லூரி. செங்கிப்பட்டியில் சிப்காட் ஆகியவை இவரது சாதனைகள். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.

அடுத்து, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன். தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றியவர். 15-க்கும் மேற்பட்ட கோயில் தேர்களுக்கு கொட்டகை அமைத்ததில் இருந்து பொதுமக்களுக்கு பட்டா வழங்குவது வரை ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செய்து தந்தவர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்கினை வழங்கிட வேண்டும்.

அடுத்து, ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஆர். வைத்திலிங்கம். முன்னாள் அமைச்சராக பல்வேறு துறைகளைக் கவனித்தவர். ஒரத்தநாடு வட்டாரத்தில் ஓய்வில்லாத உழைப்பாளி. இன்றைக்கு, அடிமைகளின் கூடாரமாக அ.தி.மு.க. மாறிவிட்ட சூழலில், கழகத்தில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் சகோதரர் வைத்திலிங்கம் அவர்கள். அவருக்கு, வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, பாபநாசம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் அவர்கள். கல்வியாளரான ஷாஜகான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். எனது பெருமதிப்பிற்குரிய தகைசால் தமிழர் பேராசிரியர் அய்யா திரு. காதர் மொகிதீன் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர். அவருக்கு, ஏணி சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அண்ணாத்துரை அவர்கள். இளைஞரணியில் இருந்து தொடர்ந்து, கழகப் பணியாற்றி, 1989, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றவர். பல்வேறு பணிகளை தொகுதிக்கு செய்திருக்கிறார். மீண்டும், அவருக்கு பட்டுக்கோட்டை மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.

அடுத்து, பேராவூரணி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அசோக்குமார் அவர்கள். விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர். ஏற்கெனவே பேராவூரணி சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றிருக்கிறார். சுற்றுலாத் தலமான மனோராவில் அழகிய பூங்காவும் – படகுகளும், மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவுத் திட்டமும் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் வாக்கினை வழங்கிட வேண்டும்.

நிறைவாக, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் சண். ராமநாதன். இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளராக இருக்கும் இவர், தஞ்சை மாநகராட்சி மேயராக சிறப்பாகப் பணியாற்றி, மாநகரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

இந்த 8 பேரின் வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் உட்காரலாம். இப்போதே உங்களுக்கு சீட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

வேளாண்மையில் சிறந்த தஞ்சை மாவட்டம், அனைத்துத் துறையிலும் சிறக்க வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளில் நிறையப் பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம்.

முக்கியமான சிலவற்றை மட்டும், ஹைலைட்டாக சொல்ல வேண்டும் என்றால், டெல்டா பகுதியின் முதல் டைடல் பூங்காவாக தஞ்சாவூர் - பிள்ளையார்பட்டியில் நான் திறந்து வைத்த நியோ டைடல் பார்க்! திறந்து வைத்த 2 வாரத்திலேயே ‘ஃபுல்’ ஆகிவிட்டது! இப்போது, தஞ்சாவூருக்கு இன்னொரு டைடல் பார்க் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மாநிலத்திலேயே முதன் முறையாக ஒரத்தநாடு வட்டம், பஞ்சநதிக்கோட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் நேரடி நெல் கொள்முதல் பெருநிலையம். நெல் தூற்றுவதில் இருந்து, சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை எல்லாமே இயந்திரமயம்! இதனால் நாளொன்றுக்கு, 5 ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய முடியும்.

பேராவூரணி வட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக பொது வசதியாக்கல் மையம்.

திருவையாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

திருவையாறு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு.

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவுக்கு கூடுதல் கட்டடம்.

திருவிடைமருதூரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

திருக்காட்டுப்பள்ளி அரசுக் கல்லூரி.

தஞ்சாவூரில் ‘சிவகங்கைப் பூங்கா’ புதுப்பிப்பு.

தஞ்சாவூரில் குழந்தைகளின் அறிவியல் தாகத்தை வளர்க்கும் ‘ஸ்டெம்’ பார்க்.

தஞ்சை ஆம்னி பேருந்து நிலையம்.

மாமன்னர் ராஜராஜன் பிறந்த ஐப்பசி சதய நாளை அரசு விழாவாக கொண்டாடுகிறோம்.

கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இருக்கிறோம்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நம் மாணவர்களுக்கு கும்பகோணத்தில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம்.

இதுமட்டுமல்ல, கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைய இருக்கிறது.

ஒரத்தநாடு வட்டம், நடுவூர் கிராமத்தில் 170 கோடி மதிப்பிலான புதிய சேமிப்பு கிடங்கு பணிகள் விரைவில் முடிக்கப்பட இருக்கிறது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில், மிகப் பெரிய சோழர்கள் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அந்தப் பணிகள் முடிந்து திறந்த பிறகு, அதைப் பார்ப்பதற்காக பல்வேறு இடத்திலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வரப் போகிறார்கள். மதுரைக்கு ஒரு கீழடி, நெல்லைக்கு ஒரு பொருநை அருங்காட்சியகம் போன்று, இனி தஞ்சைக்கு சோழர்கள் அருங்காட்சியகம் இருக்கும்.

செங்கிப்பட்டி மற்றும் பாளையப்பட்டி தெற்கு கிராமத்திலும், பட்டுக்கோட்டை வட்டம் - ராஜாமடம் கிராமத்திலும் சிப்காட் தொழிற்பேட்டை அமைய இருக்கிறது. அதிலும் ராஜாமடத்தில் அமையும் கடல்சார் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்காவால் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேல், ஆளுநராக இருந்த ரவி அவர்கள், வரவே

கூடாது என்று நினைத்து தடுத்த கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்தையும் திராவிட மாடல் 2.0-வில் அமைத்து, அதை திறந்தே தீருவோம்! நானே நேரில் வந்து திறந்து வைப்பேன். இது உறுதி! நீங்கள் 100 விழுக்காடு வெற்றியை மட்டும் கொடுங்கள்.

தஞ்சை மாவட்ட வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது! இப்படி, தொகுதிவாரியாக – துறைவாரியாக இத்தனை பணிகளை செய்வதால்தான், கம்பீரமாக – திமிராக – ஆணவத்தோடு உங்கள் முன்னால் நின்று, நான் வாக்கு கேட்கிறேன்!

நம்முடைய சாதனையைச் சொல்லும் இதே நேரத்தில் இன்னொரு அதிர்ச்சியான செய்தியையும் உங்களிடம் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

சீர்காழி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நான் சென்னைக்குச் சென்றேன். சென்றதும், அதிகாரிகள் ஒரு கடிதத்தை என்னிடம் காண்பித்தார்கள். அது என்ன தெரியுமா?

பழனிசாமியின் ஓனராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருக்கும் கடிதம் அது. இப்படிகூட ஒருவரால் யோசிக்க முடியுமா என்பதுபோன்று, அந்தக் கடிதம் அமைந்திருக்கிறது.

அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், “தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையால், நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம். அப்படி பெருகும் காரணத்தால், பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறதாம். அதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் ஊக்கத் தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாம்.” என்ன கொடுமை பாருங்கள்…

மொத்தத்தில், “நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கூடாது” என அறிவுறுத்தி ஒன்றிய அரசு நமக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அதுவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என மூச்சுக்கு மூச்சு சொல்லிக் கொள்ளும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களின் நிதியமைச்சகம்தான் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது.

உண்மையிலேயே தமிழர் என்ற உணர்வு இருந்தால் இதற்காவது, பழனிசாமி அவர்கள் வாய் திறந்து அவர்களின் ஓனரான பா.ஜ.க.வை கண்டிப்பாரா? வெட்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் பா.ஜ.க.வை. கண்டிக்க எடப்பாடி தயாரா? இல்லை… அசிங்கமாக, வழக்கம்போல, அவதூறு பேச மட்டும்தான் அவர் வாய் திறப்பாரா? விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது?

இன்னொரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் நான் நினைவுபடுத்துகிறேன்.

நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்த ‘போலி விவசாயி’ பழனிசாமி ஆட்சியில், தமிழ்நாட்டுக்கு உணவளிக்கும் வேளாண் பெருமக்களுக்கு மாநில அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை ‘ஒரு ரூபாய்’கூட அவர் உயர்த்தித் தரவில்லை. பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு, பழனிசாமி விவசாயிகளுக்கு செய்ததெல்லாம் பச்சைத் துரோகம்தான்!

இதுவே, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்த ஊக்கத் தொகையைச் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு, 70 ரூபாயில் இருந்து 156 ரூபாயாகவும்; பொது ரக நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு 50 ரூபாயில் இருந்து 131 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம். இதன்மூலம், “நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்குவோம்” என்று 2021-ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்து காட்டியிருக்கிறோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஊக்கத் தொகையாக மட்டும் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, இதனால், சுமார் 30 இலட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

நான் மீண்டும் இந்த தஞ்சை மண்ணில் நின்று உறுதியாக சொல்கிறேன்... நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என, 2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னோம்! சொன்னபடியே செய்தோம்! அதேபோன்று, இப்போது 2026 தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது போன்றே, அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில், குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் வழங்கப் போகிறோம் என்று உறுதியாக சொல்கிறேன்!

ஒன்றிய பா.ஜ.க. அரசும், அடிமை பழனிசாமியின் அ.தி.மு.க.வும் சேர்ந்து இதை தடுக்க என்ன முயற்சி செய்தாலும், எவ்வளவுதான் தடுக்க திட்டமிட்டாலும், அதையெல்லாம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முறியடிப்பான். உலகத்திற்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலையை நான் நிச்சயம் உறுதி செய்வேன்! முடிந்தால் தடுத்துப் பாருங்கள்!

இந்த டெல்டா மண்டல விவசாயிகளுக்காக இன்னும் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறோம் என்று நான் சுருக்கமாக சொல்கிறேன்.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக வேளாண்மைக்காக தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளாக, முக்கியமாக, குறித்த நாளில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்திருக்கிறேன்.

நம்முடைய ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மண்ணும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

காவிரி டெல்டா பகுதிகளில் 24 ஆயிரத்து 833 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகளை 459 கோடி ரூபாயில் சிறந்த முறையில் மேற்கொண்டு, கடைமடை விவசாயிகள் போற்றும் நிர்வாகத்தை வழங்கியிருக்கிறேன்.

2021-2022 முதல் கடந்த ஆண்டு வரை குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கியிருக்கிறேன். ஆனால், பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்யப்பட்டது எல்லாம் வெறும் வேதனைகள்தான்! விவசாயிகளுக்கு அவர் செய்த துரோகங்கள் ஒன்றா? இரண்டா? அதை எல்லாம் சொல்ல ஒரு நாள் போதுமா? போதாது.

'காவிரி காப்பாளர்' என்று தனக்குத் தானே பட்டப் பெயர் வைத்துக் கொண்டார். அவர் உண்மையான விவசாயியாக இருந்தால், இந்தியா முழுவதும் உழவர் பெருமக்கள் எதிர்த்துப் போராடிய மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்திருப்பாரா? போராட்டம் செய்த விவசாயிகளை ‘புரோக்கர்கள்’ என்று வாய்கூசாமல் சொன்ன புளுகுமூட்டைதான், இந்தப் பழனிசாமி.

அ.தி.மு.க. ஆட்சியில் இந்த டெல்டா மாவட்டங்களில் இயற்கைச் சீற்றம் நடந்தபோது இங்குள்ள மக்களை காப்பாற்றினாரா பழனிசாமி? இந்த டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அன்றைய அமைச்சர் ஓ.எஸ். மணியன் வந்தபோது, மக்களே விரட்டியடித்தார்களே... சுவர் மேல் ஏறிக் குதித்து, அவர் தப்பித்து ஓடும் நிலையெல்லாம் ஏற்பட்டது! நீங்களெல்லாம் வீடியோவில் பார்த்திருப்பீர்கள்… அதெல்லாம் நினைவில்லையா?

விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் ஊழல் நடந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை யாருக்கோ… கொடுத்தார் பழனிசாமி. இதுதான் போலி விவசாயியான பழனிசாமி ஆட்சி செய்த லட்சணம்!

இப்படிப்பட்டவர் யாருடம் சேர்ந்திருக்கிறார்? பிரதமர் மோடி தலைமையிலான NDA கூட்டணியில்... எப்படிப்பட்ட மோடி அவர்? வணிக சிலிண்டர்களின் விலையை ஏற்றி வியாபாரிகள் தலையில் இடியை இறக்கியிருக்கும் மோடி அவர்கள்.

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலை 203 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வணிகர்கள் மட்டுமல்ல, எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டலில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக எகிறிவிட்டது. 12 ரூபாய் டீ; இப்போது 15 ரூபாயாக உயர்ந்துவிட்டது. 15 ரூபாய் காபி; இப்போது 20 ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது.

ஏற்கெனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல உணவகங்களை மூடிவிட்டார்கள். பல ஹோட்டல்களில் ஒரு சில ஐட்டம் மட்டும்தான் தயாரிக்கிறார்கள். ஹோட்டல் நடத்துபவர்களுக்கு கஷ்டம், அங்கு வேலை செய்பவர்களுக்கும் இப்போது வேலை பறிபோய்விட்டது.

அவசர ஆலோசனைக் கூட்டம் என்று மோடி அவர்கள் கூட்டம் கூட்டினார். ஆனால், உருப்படியாக எதுவும் பண்ணவில்லை. ஏன் என்றால், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பதில்தான், ஒன்றிய அரசின் மொத்த கவனமும் இப்போது இருக்கிறது.

தேர்தலில் தோற்கப் போகும் அச்சத்தில், ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்று கொண்டு வந்து, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்திருக்கிறார்கள். அதை முடித்துவிட்டு அடுத்ததாக என்ன செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்து தேர்தலில் தில்லுமுல்லு பண்ணலாம் என்று பார்க்கிறார்கள்.

எத்தனையோ தேர்தல்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. அமைதியான தேர்தல்களுக்கு தமிழ்நாடுதான் பெஸ்ட் எக்சாம்பிள். அப்படிப்பட்ட நம்முடைய மாநிலத்தில் முதன்முறையாக தேர்தலை காரணம் காட்டி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை இப்போது மாற்றியிருக்கிறார்கள். இவ்வளவு பயம் அவர்களுக்கு ஏன்?

வாக்களிக்கப் போகும் மக்களே... திராவிட மாடல் 2.0 வேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டார்கள். இதை ஏன் தேர்தல் ஆணையமும் - பா.ஜ.க.வும் உணராமல் இருக்கிறார்கள்? அதுகூட பரவாயில்லை, நிறைய கட்டுக் கதைகளை சொல்லிக் கொண்டு வேறு நப்பாசையில் அலைகிறார்கள்.

இப்படித்தான், 2021 தேர்தலின்போது, “முதலமைச்சர் ஆகும் யோகம் ஸ்டாலினுக்கு இல்லை” என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். யோகத்தை நம்பி சும்மா இருப்பவனா இந்த ஸ்டாலின்? அதிர்ஷ்டம் இல்லையென அலுத்துக் கொள்பவனா இந்த ஸ்டாலின்? நான் யோகத்தை நம்புபவன் இல்லை, என்னுடைய உழைப்பை நம்புபவன்! தலைவர் கலைஞரிடம் உழைப்பை கற்றுக்கொண்ட மாணவன் நான்!

அதேபோன்று இப்போது, 2026 தேர்தலுக்கு என்னென்ன சொல்கிறார்கள்? தி.மு.க.-வில் யாரும் தொடர்ந்து 2 முறை முதலமைச்சர் ஆனது இல்லையாம்... சென்ற முறை நீங்கள் சொன்னதை உடைத்து, நான் முதலமைச்சர் ஆனேன். 2–வது முறை இல்லை என்று சொல்கிறார்களே? அதையும் உடைக்கிறேன் பாருங்கள்…

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் உடைத்து 2021–இல் பெற்றதைவிட அதிக தொகுதியில் வென்று ஆட்சிக்கு வருவோம் பாருங்கள்…

எதிரிகள் வெட்டிக் கதை பேசிக் கொண்டு, கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். நாம் தமிழ்நாட்டை முன்னேற்றும் கனவை காண்போம்.

10 ஆண்டுகள் தொடர்ந்து ஆளும் வாய்ப்பு, தி.மு.க.வுக்கு கிடைக்கும்… கிடைத்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என 2031-இல் நாம் காட்டுவோம். ஆல்ரெடி ரிசல்ட் பார்த்துவிட்டோம். எப்படி தெரியுமா?

2026 தேர்தலின் சூப்பர்ஸ்டாரையே இறக்கிவிட்டோம்! அதாவது, நம்முடைய தேர்தல் அறிக்கை! இனி யார் வந்தாலும் நம்முடைய வெற்றியை தடுக்க முடியாது! நான் பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பே நம்முடைய சூப்பர்ஸ்டார், டி.வி. மூலமாக - பேப்பர் மூலமாக - சோஷியல் மீடியா மூலமாக - அனைவரிடமும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்! அதில் சில சூப்பர் டூப்பர் அறிவிப்புகளை மட்டும் இப்போது சொல்லவா?

முதலில் என்ன அறிவிப்பு? சொல்லுங்கள் பார்ப்போம்! ஆமாம்! இல்லத்தரசி திட்டம்! இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இதை வைத்து, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்‌ஷன் ஸ்டவ் - என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். எங்கே வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். நல்ல தரமானதான வாங்கிக் கொள்ளலாம். புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம். எக்ஸ்சேஞ்சும் பண்ணிக் கொள்ளலாம். இது முழுவதும் உங்களுக்காக நான் கொண்டு வரும் திட்டம்! பெண்கள்தான் டிசைட் செய்ய வேண்டும்! உங்கள் வீட்டுக்காரர் கேட்டால், எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுத்தது என்று சொல்லுங்கள். என்னைப் பொறுத்தவரை, நம்முடைய குடும்பத்தலைவிகளின் வீட்டு வேலை சுமை குறைய வேண்டும். அதற்காகத்தான் இந்தத் திட்டமே.

எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னபடியே கலர் டிவியும், கேஸ் அடுப்பும் கொடுத்தாரோ! அவரது மகனான நானும், சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன்.

அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. இப்போது மாதம் ஆயிரம் ரூபாய்! திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எவ்வளவு? இனிமேல் அப்படியே டபுள்! மாதம் 2 ஆயிரம் ரூபாய்!

இப்போதே பெண்கள் அனைவரும் கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கணக்கு? பொங்கலுக்கு முன்பு, சொல்லிவிட்டு 3 ஆயிரம்! பிப்ரவரியில், சொல்லாமலேயே 5 ஆயிரம்! ஆகமொத்தம் 8 ஆயிரம்! அடுத்து, இல்லத்தரசி கூப்பனில் 8 ஆயிரம். “எட்டு+எட்டு! உதயசூரியனுக்குதான் எங்கள் ஓட்டு!” என்று பெண்கள் அனைவரும் முடிவே செய்துவிட்டார்கள்.

மகளிர் மட்டுமல்ல, மாணவர்களுக்கும் ஸ்பெஷல் அறிவிப்பு இருக்கிறது.

கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு வழங்கி வரும் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன், உதவித்தொகையும் இனி, ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

2030-க்குள் கல்லூரி மாணவர்கள் 35 இலட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப் போகிறோம்.

மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கும் அனைத்து உதவித்தொகைகளுமே இனி இரண்டு மடங்காக வழங்கப் போகிறோம். திராவிட மாடல் 2.0-வில் எல்லாமே 2 மடங்குதான்!

அடுத்து, காவிரி நீர் போன்று தஞ்சை விவசாயிகளின் மனம் குளிர்விக்கும் அறிவிப்புகள்.

20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சார பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

குடிசைகளே இல்லாத தமிழ்நாடு என்ற தலைவர் கலைஞரின் கனவு நனவாக, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டி தரப்படும்.

வெண்ணாறு, வெட்டாறு பிரியும் தென்பெரம்பூரில் புதிய பாலம் கட்டப்படும்.

ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு வரை கல்லணை கால்வாய் 40 கோடியில் அகலப்படுத்தப்படும்.

தஞ்சாவூரில் மண்டல அளவிலான உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

தஞ்சாவூரில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள்.

தஞ்சையில் உணவு பதப்படுத்துதல் குழுமம்.

பட்டுக்கோட்டையில் வேளாண் தொழிற்பூங்கா.

தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும், உலர்களத்துடன் கூடிய நிரந்தர கட்டடங்களாக கட்டித் தருவோம்.

தமிழ்நாட்டின் அடுத்த 30 ஆண்டுகளுக்கான குடிநீர்த் தேவையையும், வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளுக்கான தேவைகளையும் கணக்கிட்டு, அதை நிறைவுசெய்யும் வகையில் ‘தமிழ்நாடு நீர்ப் பாதுகாப்புச் செயல் திட்டம் 2056’ உருவாக்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் 10 ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீளத்துக்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நகரும் நெல் உலர்த்திகள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.

இப்போது சொல்லுங்கள்... தஞ்சாவூரில் பரப்புரையை இனி நீங்களே பார்த்துக் கொள்வீர்களா? பார்த்துக் கொள்வோம் (மக்கள்). இப்போது நான் உங்களுக்காக சொன்ன சாதனைகளையும் அறிவிப்புகளையும் அனைவரிடமும் கொண்டு சென்று சேர்ப்பீர்களா? சேர்ப்போம் (மக்கள்).

தஞ்சாவூரில் அனைத்து தொகுதியிலும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). சூப்பர்! தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல, தி.மு.க.வின் வாக்கு களஞ்சியம் என்று கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

டெல்லியின் காலடியில் தமிழ்நாட்டை அடகு வைப்பது பழனிசாமியின் விருப்பம்! ஆனால், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளையும் – சுயமரியாதையையும் டெல்லியிடம் சரண் அடையாமல் பாதுகாத்து, அதற்கு தடையாக இருப்பது இந்த ஸ்டாலின்.

அதனால், கடந்த இரண்டு நாட்களாக பழனிசாமி என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? “ஸ்டாலின் போயி சேரணும்” என்று தன்னுடைய ஆழ்மன விருப்பங்களை, அடிமனதில் இருக்கும் வக்கிரங்களை எல்லாம், பழனிசாமி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். எதிர்கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய, அன்புக்குரிய பழனிசாமி அவர்களே, பிறந்த எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள். மரணம் எல்லோருக்கும் ஏதோ ஒருநாள் வரத்தான் போகிறது! இந்த ஸ்டாலினுக்கும் வரும். ஆனால், இந்த ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களும், அந்தத் திட்டங்களால் வாழ்வு பெற்றவர்களும் என்றென்றைக்கும் என்னை நினைவில் வைத்துக் கொள்வார்கள். அந்த நினைவுகள் வாழும், அதை யாராலும் அழிக்க முடியாது. நான் மண்ணுக்கு போகலாம், ஆனால் நான் கொண்டு வந்த திட்டங்ககள் என்றைக்கும் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும்.

என்னைப் பொறுத்தவரை, தலைசிறந்த தமிழ்நாட்டை – தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க என்னுடைய இறுதிமூச்சு வரை ஓய்வில்லாமல் உழைப்பேன்! என் சக்தியை மீறியும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசுகளும், தி.மு.க.-வும் இருக்கும்வரை பழனிசாமியின் எண்ணம் பலிக்கவே பலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் பழனிசாமியின் ஆணவப் பேச்சுக்கு முடிவுகட்ட, அதற்குரிய நாள்தான் ஏப்ரல் 23!

அதற்கு, திருவிடைமருதூர் தொகுதியில் கோவி. செழியன் அவர்களுக்கும் - திருவையாறு தொகுதியில் துரை. சந்திரசேகரன் அவர்களுக்கும் - கும்பகோணம் தொகுதியில் சாக்கோட்டை அன்பழகன் அவர்களுக்கும் - ஒரத்தநாடு தொகுதியில் ஆர். வைத்திலிங்கம் அவர்களுக்கும் - பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாத்துரை அவர்களுக்கும் - பேராவூரணி தொகுதியில் அசோக்குமார் அவர்களுக்கும் - தஞ்சாவூர் தொகுதியில் சண். ராமநாதன் அவர்களுக்கும். உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை வழங்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்!

அதேபோன்று, பாபநாசம் தொகுதியில் நம் கொள்கைத் தோழமை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்!

ஒரு விஷத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். நாம் போராடுவது ஒரு கட்சியின் வெற்றிக்காகவோ, ஒரு கூட்டணியின் வெற்றிக்காகவோ அல்ல! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக!

உங்கள் அனைவரின் பேராதரவுடன் அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிப்போம்! அதற்கு ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை!

Also Read: தஞ்சை முதல் தூத்துக்குடி வரை.. முதலமைச்சரின் 4-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் விவரம் உள்ளே!