M K Stalin
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
கடந்த 2023, செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கோரிக்கையாக வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவாவை அமல்படுத்த வேண்டுமென்றால், முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன்பிறகு தொகுதி மறுவரையறையும் செய்ய வேண்டும். பின்னரே மகளிருக்கான தொகுதி பங்கீட்டை முறைப்படுத்த முடியும் போன்ற சிக்கல்கள் உள்ளன. இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, 456 பேர் வாக்களித்ததில், 454 பேர் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் பல ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு, 2026-ல் நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கீட்டின்படி மகளிருக்கான இட ஒதுக்கீட்டை கணக்கிடலாம் என்று முடிவானது. இந்த சூழலில் தற்போது 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
* 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
* 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.
* எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
* மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
* தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
Also Read
-
மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்: 1.31 கோடி மகளிருக்கு அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்!
-
திராவிட மாடல் அரசின் திட்டங்களை தொடர்ந்த விஜய் : மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு!
-
“குதிரை பேரம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது” : த.வெ.க அரசு மீது பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
“சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்”... தனது கொள்கை முழக்கத்தை திமுக எப்போதும் கைவிடாது! - முரசொலி நெகிழ்ச்சி !
-
“வலிமையும் போர்க்குணமும் நமக்கே உரியதாகும்..” - தோழமைக் கட்சிகளுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி!