M K Stalin

உயிர்நீத்த 22 தியாகிகளுக்கு நினைவுத் தூண் : தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் சிலை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.2.2026 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திருத்தணியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் திருவுருவச் சிலை, தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு மயிலாடுதுறையில் 4.70 கோடி ரூபாய் செலவில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம், சுதந்திரப் போராட்ட தியாகி சாமிநாகப்பன் படையாட்சி அவர்களுக்கு மயிலாடுதுறையில் 44.40 இலட்சம் ரூபாய் செலவில் திருவுருவச் சிலை மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி  வை. நாடிமுத்துப்பிள்ளை அவர்களுக்கு பட்டுக்கோட்டையில் 38 இலட்சம் ரூபாய் செலவில் திருவுருவச் சிலை ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும், சேலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சேலம் சிறையில் உயிர்நீத்த 22 தியாகிகளின் நினைவுத் தூண் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.   

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும்,  செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திருவுருவச் சிலை :

2024-25 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், ஆசிரியராகப் பணிபுரிந்த மிகப்பெரும் கல்வியாளரும், பல்கலைக்கழக ஆணையத்தின் தலைவராகத் திகழ்ந்தவரும், பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சிறப்பான கொள்கைகளை வருத்தவரும், சுத்திர இந்தியாவின் இரண்டவது குடியரசுத் தலைவராக விளங்கியவருமான பரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் திருவருவச்சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் :

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில்,  தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பின்படி, மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு மயிலாடுதுறையில் 4.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை மற்றும் அரங்கத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

சுதந்திரப் போராட்ட தியாகி சாமிநாகப்பன் படையாட்சி அவர்களுக்கு திருவுருவச் சிலை :

முதலமைச்சர் அவர்கள் 16.07.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் கலந்துகொண்டு, உயிர்த் தியாகம் செய்த, சுதந்திரப் போராட்ட தியாகியான சாமிநாகப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மயிலாடுதுறையில் அவரின் திருவுருவச் சிலை அரசால் நிறுவப்படும்" என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலை, நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி சாமிநாகப்பன் படையாட்சி அவர்களுக்கு 44 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

சுதந்திரப் போராட்ட தியாகி வை. நாடிமுத்துப்பிள்ளை அவர்களுக்கு திருவுருவச் சிலை :

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், "இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றவரும். பொதுமக்களால் தென்னாட்டு ஜவகர்" என்று அழைக்கப்பட்டவருமான பட்டுக்கோட்டை தியாகி வை. நாடிமுத்துப்பிள்ளை அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருவுருவச் சிலை நிறுவப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நாடியாம்மாள்புரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி நாடிமுத்துப்பிள்ளை அவர்களுக்கு 38 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

சேலம் மாவட்டத்தில் 22 சிறைத் தியாகிகள் நினைவுத் தூண் மண்டபம் :

முதலமைச்சர் அவர்கள் 16.08.2025 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில், சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதன் நினைவாக சேலத்தில் சிறைத் தியாகிகள் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். 

அந்த அறிவிப்பிற்கிணங்க, சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், அஸ்தம்பட்டியில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள சேலம் சிறையில் உயிர்நீத்த 22 தியாகிகளின் நினைவுத் தூண் மண்டபத்திற்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 

Also Read: இதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பிறந்தநாள் பரிசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!