M K Stalin

ரூ.145 கோடியில் தங்கும் விடுதி.. புதிய அடுக்குமாடி C வகை குடியிருப்பு.. திறந்து வைத்தார் முதலமைச்சர் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.2.2026) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தில் 45 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் 250 படுக்கைகள் வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதிக் கட்டடம் மற்றும்  சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 99.76 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 190 குடியிருப்புகளைக் கொண்ட அரசு பணியாளர்களுக்கான புதிய அடுக்குமாடி “C” வகை குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். 

=> முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதிக் கட்டடம் திறந்து வைத்தல் :

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரிகளுக்கு (CMC) சிகிச்சைக்காகவும், பணி மற்றும் கல்வி சேர்க்கைக்காகவும் வரும் பொதுமக்கள் தங்கும் நலன் கருதி, வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தில் 45 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் 68,400 சதுர அடி பரப்பளவில் 250 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

இப்புதிய விடுதிக் கட்டடம் தரை மற்றும் மூன்று தளங்களுடன், மொத்தம் 117-அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 46 இரட்டை படுக்கைகள் கொண்ட சிறப்பு அறைகள் (Deluxe Room), 49 இரு தனித்தனி படுக்கைகள் கொண்ட சிறப்பு பகிர்வு அறைகள் (Deluxe Twin Share), முக்கிய பிரமுகர்களுக்கான 8 தொகுப்பு அறைகள் (VIP Suite), குடும்பங்களுக்கான 10 சிறப்பு வகை அறைகள் (Family Deluxe) மற்றும் பல நபர்கள் ஓரே இடத்தில் தங்கும் வகையிலான 4 அறைகள் (Dormitory) இடம்பெற்றுள்ளன.

மேலும், சலவையக கட்டடம், பொது கழிப்பறைகள், இரண்டு மின்தூக்கிகள், உயர் மின்னழுத்த மின் இணைப்பு, உணவகம்  மற்றும் சமையலறை, சூரிய மின்உற்பத்தி அமைப்பு (Solar Power), ஜெனரேட்டர், கண்காணிப்பு கேமராக்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு  வசதிகளுடன் இயற்கை எழில் கொண்ட மலைகளின் நடுவே பசுமை சூழலில் இந்த விடுதிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

=> சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசுப் பணியாளர்களுக்காக  புதிய அடுக்குமாடி “C” வகை குடியிருப்பு கட்டடம் திறந்து வைத்தல் :

பொதுப்பணித்துறை சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 99 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் 2,28,984 சதுர அடி பரப்பளவில் அரசு பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி  “C” வகை குடியிருப்பு கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

இப்புதிய குடியிருப்புக் கட்டடம், கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 19 மேல் தளங்களைக் கொண்டதாகும்.  இக்கட்டடத்தில், தலா 700 சதுர அடி பரப்பளவில் வரவேற்பு மற்றும் உணவறை, சமையலறை, இரண்டு படுக்கையறைகள், இரண்டு கழிவறைகள் மற்றும் பால்கனி உள்ளிட்ட முழுமையான வசதிகளுடன் 190 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், கீழ்தளம் மற்றும் தரைத்தளத்தில், கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிட வசதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், 3 படிக்கட்டுகள், 5 மின்தூக்கிகள், மின் அறை, தீ அணைப்பு வசதிகள், உட்புற சாலை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read: வேலூரில் அணை அமைக்கும் பணி முதல் பாலாறு அணைக்கட்டு வரை... பணிகளை அடுத்தடுத்து தொடங்கி வைத்த முதலமைச்சர்!