M K Stalin
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (8.2.2026) சென்னையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.
முதலில் உங்களிடம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நன்றி சொல்லி, நமக்கான உறவை தூரமாக்கிவிடாதீர்கள்! உங்கள் வியர்வைத் துளிகள் மதிக்கப்பட வேண்டும். கண்ணீர்துளிகள் துடைக்கப்பட வேண்டும் என்றுதான், உங்களின் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்!
மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காகப் பணியாற்றும் நீங்களும் சேர்ந்துதான், அரசாங்கம்! ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும், அமைச்சரவையையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
இந்த மகிழ்ச்சி, எனக்குள் மட்டுமல்ல; உங்களுக்குள்ளேயும் இருப்பதை, உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது! நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!
கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது! ”நிலம் நனைக்கும் வான் போல” அரசு ஊழியர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு மாநாடு போதாது! எனவே, அந்த சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் விரிவாக அல்ல. விளக்கமாக அல்ல. தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.
அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய, இரகசியக் குறிப்பேடு நீக்கம்!
இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி!
பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி!
ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாகப் பெறும் திட்டம் அமல்!
திருமணக் கடன், வாகனக் கடன், வீடுகட்டக் கடன்!
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!
6 மாதத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தும் போதெல்லாம், மாநில அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்கினார்!
பொங்கல் கருணைத் தொகையை போனஸாக வழங்கினார்!
ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல்கள்!
அரசுப் பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு!
பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம்!
ஏழாயிரம் மக்கள்நலப் பணியாளர்கள் நியமனம்!
பண்டிகை முன்பணத்திற்கு வட்டி நீக்கம்!
2 இலட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்!
ஓய்வுக்கால பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு!
புலவர் பட்டம் பி.லிட்., பட்டமாகி, தமிழாசிரியர் பணியிட பாகுபாடு நீக்கம்!
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஒன்றிய அரசுக்கு இணையான சம்பள விகிதங்கள்!
இப்படி, அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து நன்மையை மட்டுமே செய்த ஆட்சிதான், தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி! அரசியலில் கொள்கைப் பிடிப்போடு இயங்கும் நாங்கள், மக்கள் நலனுக்காக உருவாக்கும் திட்டங்களை, வெற்றிகரமாக அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் பெருங்கடமையை செய்பவர்கள், அரசு ஊழியர்களான நீங்கள்தான்!
அதேபோல், ஆசிரியர்கள் செய்வதை பணி என்று சொல்ல மாட்டேன்! நீங்கள் செய்வது தொண்டு! உங்களால்தான், இந்தியாவில் பள்ளிக்கல்வியில் இரண்டாவது சிறந்த மாநிலமாக, நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக்கொண்டு இருக்கிறது!
நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள்தான், உலகம் முழுவதும் நல்ல பணிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து நமக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறார்கள்! இப்படி, இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களை உருவாக்கக்கூடிய, உருவாக்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் நலனைப் பாதுகாக்கும் அரசுதான், திராவிட முன்னேற்றக் கழக அரசு!
நம்முடைய திராவிட மாடல் அரசில், நாட்டிற்கே முன்னோடியான முத்திரைத் திட்டங்களை செயல்படுத்திகொண்டு இருக்கிறோம். இங்கு நண்பர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
மகளிர் விடியல் பயணம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
புதுமைப்பெண்
தமிழ்ப்புதல்வன்
நான் முதல்வன்
இல்லம் தேடிக் கல்வி
எண்ணும் எழுத்தும்
ஊட்டச்சத்தை உறுதிசெய்
மக்களைத் தேடி மருத்துவம்
இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48
நலன் காக்கும் ஸ்டாலின்
பாதம் காப்போம்
இதயம் காப்போம்
கலைஞர் கனவு இல்லம்
அன்புக் கரங்கள் திட்டம்
அன்புச் சோலை திட்டம்
தோழி விடுதி
குறு சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
உங்களுடன் ஸ்டாலின்
கலைஞர் கைவினைத் திட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம்
முதலமைச்சர் கோப்பை
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
தொல்குடி திட்டம்
டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்
பேராசிரியர் அன்பழகனார் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டம்
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினித் திட்டம் என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்!
இந்த திட்டங்களால் திராவிட மாடல் அரசுக்கு நற்பெயரும், செல்வாக்கும் கிடைத்திருக்கிறது என்றால், அந்தப் பெருமையில் பெரும்பங்கு அரசு ஊழியர்களான உங்களுக்குதான் இருக்கிறது! அதற்கான எங்களின் நன்றியை சொல்வதற்கான வாய்ப்பாக, இந்த மாநாட்டை நான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்! இந்த மேடையில் நின்று, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நன்றியை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்!
அரசின் கண்களாக, கரங்களாக செயல்பட்டு வரும் உங்களுக்காக, நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால்,
கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை, 2022 முதல், ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தி வழங்கியதுடன், ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
உங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், அரசுப் பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறோம்.
நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கிகொண்டு இருக்கிறோம்!
பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் முதல், பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம், பத்தாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.
அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி முன்பணம் – தொழிற்கல்விக்கு ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும் - கலை மற்றும் அறிவியல் கல்விக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம்!
அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம், 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிகொண்டு இருக்கிறோம்!
ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வுபெற அனுமதித்து ஆணையிட்டிருக்கிறோம்.
ஓய்வூதியப் பணிக்கொடையை 20 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்.
ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!
பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதங்களிலிருந்து, 12 மாதங்களாக உயர்த்தியிருக்கிறோம்.
பெண் அரசு ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பில் செல்ல நேர்ந்தால், அந்தக் காலத்தையும் தகுதிகாண் பருவமாக கருத வேண்டும் என்று ஆணை வெளியிட்டிருக்கிறோம்.
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி இருக்கிறோம்.
குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்களின் பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை, ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!
அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்கள் உள்ளிட்ட, இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் இந்தப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்காக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.
இது எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுவது போன்று, உங்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய, புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” செயல்படுத்தியிருக்கிறோம்.
இந்த அறிவிப்பு வெளியான அன்று கோட்டையில் நாம் இனிப்புகள் பரிமாறிக் கொண்ட, அந்த பாசக் காட்சி, தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை பார்க்காத காட்சி! இவ்வளவு பெரிய திட்டத்தை, எப்படிப்பட்ட சூழலில் நிறைவேற்றியிருக்கிறோம் என்று மற்ற எல்லோரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும்!
ஒவ்வொரு ஆண்டும், நமக்கான வரிப்பகிர்வை ஒன்றிய அரசு குறைத்துகொண்டே இருக்கிறது! ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட குறைத்துகொண்டு இருக்கிறார்கள்! அந்த நிதியையும் முறையாக வழங்குவதில்லை! ஜி.எஸ்.டி மாற்றங்களால் மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துகொண்டே வருகிறது! இப்படிப்பட்ட சூழலில், எல்லா துறைகளிலும் நலத்திட்டங்களை செய்தாக வேண்டும்!
வருமானம் குறைவு - செலவு அதிகம், இதுதான் நம்முடைய நிலை! பேரறிஞர் அண்ணாதான் சொன்னார். பெட்டி இருக்கிறது! பூட்டு இருக்கிறது! சாவி இருக்கிறது! ஆனால், பெட்டி காலியாக இருக்கிறது என்று சொன்னார். திட்டமிட்டு செயற்கையாக இந்த நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்! அரசியல் ரீதியாக மட்டுமல்ல, நிர்வாகரீதியாகவும் அவர்களை வெற்றிகரமாக சமாளித்துதான், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிகொண்டு இருக்கிறோம்!
பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை 22 ஆண்டுகளாக நீங்கள் வைத்துகொண்டு இருக்கிறீர்கள்! யார் ஆட்சியில் இந்த உரிமை பறிக்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில்! அப்போது, நீங்கள் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதா? வியர்வைத்துளி சிந்தி உழைத்த உங்களுக்கு இரத்தக்கண்ணீரை வர வைத்ததுதான், கருணையில்லா அ.தி.மு.க. ஆட்சி! ஆனால், இது அனைவரையும் அரவணைக்கும் கருணையே வடிவான தி.மு.க. ஆட்சி!
அதனால்தான், உங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவதற்கான, தகுந்த பரிந்துரைகளை வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில், ஒரு குழுவை அமைத்தோம். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உங்களிடம் உட்கார்ந்து தொடர்ந்து பேசினார்கள்.
உங்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், தமிழ்நாட்டின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு என்று எல்லாவற்றையும் பரீசிலனை செய்துதான், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” அறிவித்தோம்!
இந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில், 50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு, பணியாளர்களின் 10 விழுக்காடு பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்!
50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 விழுக்காடு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்!
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல், பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல், பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர், இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். இனி, இதை கருணை ஓய்வூதியம் என்று சொல்லாமல், உங்களின் உழைப்பிற்கான உரிமைத்தொகை என்றே வழங்குவோம்!
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு தமிழ்நாடு அரசு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்! இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.
இப்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்று, இப்போது சொன்ன அத்தனை செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்!
இந்த ஓய்வூதியத் திட்டம் எவ்வளவு சிறப்பானது என்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் உள்ளிட்ட பலரும் பேட்டிகளை கொடுத்திருந்தீர்கள்! அதையெல்லாம், நீங்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்!
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி அவர்கள், ஆட்சியில் இருந்தபோது, அரசு ஊழியர்களை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி பேசினார்? இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்களே… எப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் நான் அதிகம் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை! ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக கூட்டணி அமைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பார்களா? சிந்திச்சுப் பாருங்கள்! ஆனால், நாங்கள் அப்படி இல்லை!
எங்களை பொறுத்தவரைக்கும், சொன்னதைச் செய்வோம்! சொல்வதைத் தான் செய்வோம்! செய்து, உங்களின் பாராட்டுகளை பெறுவோம்! நான் உறுதியாக சொல்கிறேன். உங்களின் கோரிக்கைகள் - கனவுகள் - எதிர்ப்பார்ப்புகளை நாங்கள் நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்! உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்!
Also Read
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!