M K Stalin

மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராட்டிர மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம், எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கி, அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.28) உயிரிழந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார், இன்று (ஜன.28) காலை 8.10 மணிக்கு மும்பையிலிருந்து சிறிய ரக விமானத்தில் பாராமதி புறப்பட்ட நிலையில், அவர் பயணித்த விமானம் நிலைதடுமாறி எதிர்பாராத விதமாக பாராமதி விமான நிலையம் அருகே எரிந்து நொறுங்கியது.

உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அஜித் பவார் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு தேசிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகாராட்டிரத்தில் இதுவரை 9 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள அவர், கண்ட தேர்தல்களிலெல்லாம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டது பின்வருமாறு,

“மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவாரும், அவரோடு பயணித்தவர்களும் விமான விபத்தில் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது.

சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.”

Also Read: “அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி எனபது பியூஸ் போன பல்புதான்!” : முரசொலி தலையங்கம்!