M K Stalin

ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.2000 பொங்கல் கருணைத்தொகை.. வழங்கினார் முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.01.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உயர்த்தப்பட்ட பொங்கல் கருணைக் கொடை ரூ.2,000/-  மற்றும் தொழிலாளர் சேமநலநிதி (EPF) மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் முதல் முறையாக பொங்கல் கருணைக் கொடை ரூ.2,000/- வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு  பொங்கல் கருணைக் கொடைக்கான  காசோலைகளை வழங்கினார். 

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல்,   திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல்  கருணைக் கொடை, குடியிருப்புகள், குடும்ப நலநிதி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முழு உடற் பரிசோதனைத் திட்டம் போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. 

இந்துசமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும்  நிரந்தர பணியாளர்கள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப்பின், 2023-24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, 2024 ஆம் ஆண்டு முதல்  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு முதன்முறையாக பொங்கல் கருணை கொடையாக ரூ.1000/-மும், அதனைதொடர்ந்து 2025 ஆம் ஆண்டு முதல்  குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் முதன்முறையாக பொங்கல் கருணை கொடையாக ரூ.1000/-ம் வழங்கப்பட்டது. 

2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில் “துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் கருணைக் கொடை ரூ.1000/–ம், அவர்களின் நலன் கருதி ரூ.2000/– ஆக உயர்த்தி வழங்கப்படும்“ என்றும், “திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, பணியாளர் சேமநலநிதி நிறுவனம் (EPF) மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் முதல்முறையாக பொங்கல் கருணைக்கொடை ரூ.2000/– வழங்கப்படும்“ என்றும் அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் அவர்கள், துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000/-த்தை ரூ.2,000/- ஆக  உயர்த்தி அதற்கான காசோலைகளையும், தொழிலாளர் சேமநலநிதி (EPF) மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் கருணை கொடை ரூ. 2,000/- க்கான  காசோலைகளையும் இன்று வழங்கினார். இதன் மூலம்  துறை நிலையிலான மற்றும் தொழிலாளர் சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,069 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 796 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.  

இந்துசமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் 6,894 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 4,893 தினக்கூலி/தொகுப்பூதிய பணியாளர்கள் ஆக மொத்தம் 11,787 பணியாளர்களுக்கும், 3,865 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள்  என மொத்தம் 15,652 நபர்கள் பொங்கல் கருணைக் கொடை பெற்று பயனடைகின்றனர். 

Also Read: மஹாராஷ்டிராவிலும் பிரிவினை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலை... தக்க பதிலடி கொடுத்த அரசியல் கட்சிகள்!