M K Stalin

“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

தமிழ் திரையுலகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் AVM நிறுவனம். 40'களில் இருந்து தற்போது வரை பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளது இந்நிறுவனம். காரைக்குடியை சேர்ந்த ஏ.வி.மெய்யப்பன் தொடங்கிய இந்த நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களை தயாரித்துள்ளது.

அதோடு தமிழ் சினிமாவில் இன்றியமையாத திரைப்படமான பராசக்தி படத்தையும் தயாரித்த இந்நிறுவனம், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்களையும் தயாரித்துள்ளது. இதனிடையே ஏ.வி.மெய்யப்பன் மறைந்த நிலையில், ஏ.வி.எம். நிறுவனத்தை அவரது மகன் சரவணன் சூர்யா மணி நடத்தினார்.

சரவணன் சூர்யா மணி, நாளடைவில் ஏ.வி.எம். சரவணன் என்று அறியப்பட்டார். இவரது கைகளுக்கு ஏ.வி.எம். நிறுவனம் சென்ற பிறகு, எஜமான், மின்சார கனவு பேரழகன், வேட்டைக்காரன், சிவாஜி, அயன் உள்ளிட்ட பல ஹிட் படங்கள் தயாரிக்கப்பட்டது.

இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'இதுவும் கடந்த போகும்' படம் தயாரிக்கப்பட்டது. தமிழ் திரையுலக ஆளுமைகளில் ஒருவராக கருதப்படும் இவர், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாட்டுச் சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்நிறுவனம் 180-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மட்டுமின்றி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளது. அதோடு தமிழக அரசின் கலைமாமணி, ராஜா சாண்டோ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவர், முயற்சி திருவினையாக்கும், மனதில் நிற்கும் மனிதர்கள் (4 பாகங்கள்), ஏவிஎம் 60 சினிமா ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்த சூழலில் ஏ.வி.எம்.சரவணனின் உடல்நிலை காரணமாக, ஏ.வி.எம். நிறுவனத்தை அவரது மகன் எம்.எஸ். குகன் தற்போது நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஏ.வி.எம்.சரவணன், ஒரு மாதத்திற்கு முன்புதான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் ஏ.வி.எம்.சரவணன் வயது மூப்பின் காரணமாக தனது 86-வது வயதில் காலமானார். ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு திரையுலகினர், திரை ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ஏ.வி.எம். சரவணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் இரங்கல் பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு வருமாறு : -

தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.

புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!