M K Stalin

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (3.12.2025) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2025-யை முன்னிட்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில், 400 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள், சக்கர நாற்காலியாகவும் மூன்று சக்கரம் வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறந்த முறையில் சேவை புரிந்த ஆசிரியர்கள், சமூக பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு விருதுகளை வழங்கி சிறப்பித்ததோடு, விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.  

மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார். 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திரப்  பராமரிப்பு உதவித் தொகையை இரண்டு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தியது,  மாற்றுத்திறனாளிகளுக்கு  நவீன உதவி உபகரணங்கள் வழங்குவது, அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியாகவோ அல்லது துணையாளர் ஒருவருடனோ பயணம் செய்ய 75% பயண கட்டண சலுகை வழங்குவது என, மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2025-யை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில் : 

=> மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் :

400 மாற்றுத்திறனாளிகளுக்கு 4.12 கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள்,
மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் மற்றும் சக்கர நாற்காலியாகவும் மூன்று சக்கரம் வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். 

=> மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பார்வையிடுதல்:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வளர்ச்சியையும் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், புறஉலக சிந்தனையற்றோருக்கான தகைசார் மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்விற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். 

=> மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்குதல்

கை, கால் பாதிக்கப்பட்ட / செவித்திறன் குறையுடைய / இரத்த ஒழுகு குறைபாடு உள்ள பணியாளர் / சுய தொழில் புரிபவர், பார்வை, செவித்திறன், அறிவுசார் குறையுடையோருக்கு  கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் மற்றும் அறிவுசார் குறையுடையோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், சிறந்த சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். 

=> விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்குதல்

மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற தென்சென்னை மாவட்டத்திற்கு கோப்பையையும், மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 12 நபர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.  

=> உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் (திருத்தச்) சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 16.4.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்தார். 

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்தச் சட்டமுன்வடிவுகளின் மூலம் மாற்றுத்திறனாளிகளுடைய குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகவும் திகழ்வார்கள்.

அதன் தொடக்கமாக, உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரையாற்றினர். 

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மேம்பட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் காணொலிக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.  

Also Read: “கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !