M K Stalin
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.10.2025) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொக்கர் அவர்களின் பேரனும், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் அவர்களின் மகனுமான சிவராஜா ஸ்ரீ ராஜா – எஸ். சாலுபாரதி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அதன் பிறகு அவர் ஆற்றிய உரை பின்வருமாறு,
மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீராஜா சொக்கர் – திருமதி பூர்ணிமா தம்பதியரின் அருமை மகன் சிவராஜா ஸ்ரீராஜா அவர்களுக்கும், தொழிலதிபர் சரவணன் – சுசிலா தம்பதியரின் அருமை மகள் சாலுபாரதி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது.
இந்த மணவிழா நிகழ்ச்சி ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறுகின்ற திருமணமாக நடந்தேறியிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள், சுயமரியாதை திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெற்றது என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறமுடியாத நிலையில் அந்த திருமணங்கள் நடந்தேறி இருக்கிறது.
ஆனால், 1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலாக சட்டமன்றத்தில் முதலமைச்சராக நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தந்திருக்கிறார்.
ஆகவே, இன்று நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற நிலையில் நடந்தேறியிருக்கிறது.
நம்முடைய ஸ்ரீராஜா சொக்கர் அவர்கள், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரின் தந்தையார் சொக்கர் அவர்கள், விருதுநகர், சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியவர்.
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் முக்கிய உறுப்பினராக இருந்து, வணிகர்களுடைய முன்னேற்றத்திற்கு, வணிகர்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் அவர் பாடுபட்டிருக்கிறார்; பணியாற்றியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
1989-ஆம் ஆண்டில் இருந்து நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் தலைவர்களோடு நெருங்கிப் பழகி அவரிடம் பாசத்தோடு, அன்போடு, பண்போடு இருந்து பழகியவர் நம்முடைய சொக்கர் அவர்கள்.
சட்டமன்றத்தில் அவர் இருந்தபோது, நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றி இருக்கிறேன். அவர் சட்டமன்றத்தில் பேசக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் நான் ரசித்ததுண்டு. வியந்து எண்ணியதுண்டு. அவர் தொகுதி மக்களுக்காக வாதாடுகின்ற, போராடுகின்ற அந்த காட்சிகள் எல்லாம் நான் பார்த்ததுண்டு.
இன்னொரு நிகழ்ச்சியை கூட நான் சொல்ல வேண்டும். ஒருமுறை சட்டமன்றத்தில் அன்றைக்கு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராமகிருஷ்ணன் என்ற ஒரு அமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கையை விவாதித்து அதற்கு பதில் சொல்கின்றபோது, அவர் பேசி முடித்ததற்கு பிறகு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்புக்களை வெளியிடுகின்றபோது, அதை முழுமையாக படித்தார். அப்படி படிக்கின்ற நேரத்தில், படித்து முடித்ததை மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். காரணம் என்னவென்று கேட்டால், அந்த அறிவிப்பின் பட்டியலை தட்டச்சு செய்தபோது, ஜெராக்ஸ் காப்பி எடுத்திருந்தார்கள். அந்த ஜெராக்ஸ் காப்பியையும் அவரிடம் வைத்து கொடுத்துவிட்டார்கள்.
அது அவருக்கு தெரியாது. அதனால், பதட்டத்தோடு, அவர் படிக்கின்றபோது மறுபடியும் அதையே படிக்க ஆரம்பித்தார். உடனே சொக்கர் அவர்கள் சட்டமன்றத்தில் பாயின்ட் ஆஃப் ஆர்டர் என்று சொல்லிவிட்டு, பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் படித்ததையே மறுபடியும் படிக்கின்றார் என்று சட்டமன்றத்தில் சொன்னார்.
உடனே முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் எழுந்து நானும் கவனித்தேன் – அவர் ஏன் படித்தார் என்றால், அவர் படிக்கின்றபோடு நம்முடைய சொக்கர் அவர்கள் கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை அயர்ந்து தூங்கிவிட்டாரோ என்று கருதி ஒருவேளை மறுபடியும் படித்திருப்பார்.
எனவே தவறாக நினைத்துவிட வேண்டாம் என்று சொல்லி, அதை சமாளித்து, ஒரு நகைச்சுவையான சம்பவத்தை அங்கு ஏற்படுத்தினார்கள். எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், அந்த அளவிற்கு கலைஞரிடத்தில் சொக்கர் உரிமையைப் பெற்றவர் – பாசத்தோடு பழகியவர் – என்னிடத்தில் பல நேரங்களில் பேசும்போதெல்லாம் சட்டமன்றத்தில் இப்படி எல்லாம் பேசவேண்டும் – எப்படிப்பட்ட கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும் – சட்டமன்ற உறுப்பினராக எப்படி எல்லாம் பணியாற்ற வேண்டும் என்று எனக்கே பல நேரங்களில் அவர் பாடம் நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் கலைஞர் அவர்களின் கையால் முதன்முதலாக தமிழ்நாடு அரசின் காமராசர் விருதை நம்முடைய சொக்கருக்குத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்து முதன்முதலாக அவர் வழங்கினார்.
அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்திருக்கக்கூடிய நம்முடைய அருமை சகோதரர் ஸ்ரீராஜா சொக்கர் அவர்களும், அதேபோல, காங்கிரஸ் பேரியக்கத்தில் இன்றைக்கு முக்கியத் தலைவராக அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கக்கூடியவராக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
மணமகனின் கொள்ளுத்தாத்தா மதிப்பிற்குரிய ராஜாக்கனி அவர்களும், நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மணமகள் குடும்பத்தினருக்கும், நமக்கும் ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது என்று சொல்லலாம். எப்படியென்றால், காஞ்சிபுரத்தில் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்திற்கு எதிரில் தான் மணமகளின் தந்தை சரவணன் சந்திரசேகரன் அவர்கள் வீடு இருக்கிறது.
இப்படிப்பட்ட இந்த இரண்டு குடும்பங்கள் இன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய மணவிழாவில் இணைவது உள்ளபடியே நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் பேரியக்கமும் ஒரு காலத்தில், வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்றைக்கு நாட்டின் நன்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒரே அணியில் - அதே சிந்தனையுடன் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
அதிலும், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் தனிப்பட்ட முறையில் என் மீது காட்டுகின்ற அன்பை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
“மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் பேசுகின்ற போது, விளிக்கின்ற போது யாரையும் நான் சகோதரர் என்று சொன்னது கிடையாது; ஆனால், ராகுல் காந்தியை பற்றி மட்டும் நான் விளிக்கின்றபோது அருமை சகோதரர் என்று நான் சொல்வதுண்டு. காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், அவர் என்னை அண்ணன், மூத்த அண்ணன் – எப்போது பார்த்தாலும், என்னிடம் ஃபோனில் பேசுகின்ற போதும் சரி – நேரடியாக பார்க்கும் போதும் மை டியர் பிரதர் என்று தான் சொல்வார்.
அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது. எதற்காக சொல்கிறேன் என்றால், இந்த அளவுக்கு அரசியல் நட்பு மட்டுமல்ல; கொள்கை உறவாகவும் வலுப்பெற்று, இந்தியாவின் குரலாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த உணர்வைதான் நாங்கள் எல்லோரிடமும் எதிர்பார்க்கிறோம். தனிமனிதர்களுடைய நலனைவிட நாட்டின் நலன்தான் முக்கியம் என்ற உணர்வோடு, அந்த நட்புணர்வு இன்றைக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு அரசியல் இயக்கங்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கின்ற இந்தப் புரிதலும் - கொள்கை உறவும் நிச்சயம் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும். அது உறுதி.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில், நான் மணமக்களிடம் அன்போது நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மணமக்கள் தங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்று நான் இந்த நேரத்தில், நான் பெற்றிருக்கக்கூடிய அந்த உரிமையோடு, அந்த குடும்பத்திற்கு என்னுடைய வேண்டுகோளாக வைத்து, மணமக்கள் அனைத்து நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்திடவேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச் சொல்லியபடி, “வீட்டிற்கு விளக்காக - நாட்டுக்குத் தொண்டர்களாக” இருந்து மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மனிதாபிமானமற்று செயல்படும் பா.ஜ.க அரசு : பெண் மருத்துவர் மரணம் - ராகுல் காந்தி விமர்சனம்!