M K Stalin
“பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்” -சேந்தமங்கலம் திமுக MLA மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
கொல்லிமலை வாழவந்தி நாடு எல்லை கிராய்பட்டி பகுதியில் வசித்து வந்த கே.பொன்னுசாமி். திமுகவில் இணைந்து மக்கள் சேவையில் களப்பணியாற்றிய இவர், கடந்த 2006-ம் ஆண்டு சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 2007 ஆம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்ட கழக மாவட்டக் கழக துணைச் செயளாலராக இருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இந்த சூழலில் மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு கழகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் கு.பொன்னுசாமி அவர்கள் மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
கழகத்தின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் - என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.
அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :-
சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக துணை செயலாளர் கே பொன்னுசாமி உடலுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி,நாமக்கல் கிழக்கு நகர செயலாளர் மாநகராட்சி துணை மேயருமான பூபதி, மேற்கு நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!