M K Stalin

“படிக்க வேண்டிய, பயிற்சிபெற வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது!” : மாணவர்களிடையே முதலமைச்சர் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.9.2025) கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஆற்றிய உரை.

காலையிலிருந்து சற்றேறக்குறைய 2 மணி நேரமாக நம்முடைய கொளத்தூர் தொகுதியில் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள்… எப்போதும் கொளத்தூருக்கு வந்தால் நம்முடைய அமைச்சர் மாவட்டச் செயலாளர் சேகர்பாபு அவர்கள், “ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பவர்” என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், நம்முடைய சேகர்பாபு அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கக்கூடியவர். ஐந்து, ஆறு இடங்களில் அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, ஆய்வுப் பணிகள், என பல்வேறு நிகழ்ச்சிகள், அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி.

இப்படி பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இடையில் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு அதாவது, அனிதா அச்சிவர்ஸ் அகாடெமி நிகழ்ச்சி என்னுடைய களைப்பெல்லாம் நீங்கி, உற்சாகத்தை வழங்கக்கூடிய நிகழ்ச்சி.

உங்களையெல்லாம் பார்க்கின்றபோது… உங்கள் முகத்தை பார்க்கும்போது… அந்த முகத்தில் தோன்றக்கூடிய மகிழ்ச்சியைப் பார்க்கும்போது… உங்களுடைய முகத்தில் தோன்றக்கூடிய நம்பிக்கையைப் பார்க்கும்போது… இன்னும் நான் என்னுடைய கடமையை வேகமாக நிறைவேற்றிட வேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த அனிதா அச்சீவர்ஸ் மூலமாக பலன் பெற்றிருக்கக்கூடிய இரண்டு சகோதரிகள் பேசும்போது குறிப்பிட்டு சொன்னார்கள். இன்னும் செய்ய வேண்டும். மாணவர்களாகிய நாங்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய பணிகளை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் இன்னும் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.

அதனால், நிச்சயமாக சொல்கிறேன். உறுதியாக சொல்கிறேன். என்னுடைய உடலில் உயிர் இருக்கும் வரையில் தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுக்கொடுத்திருக்கும் அந்த உழைப்பு என்னுடைய உதிரத்தில் இருக்கும் வரையில் நிச்சயமாக உறுதியாக நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் இருக்கிறேன். எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

என்னவோ தெரியவில்லை. கொளத்தூருக்கு வந்துவிட்டால் எனக்கு இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது. அதுவும் அனிதா அச்சீவர்ஸ் அகாடெமியில் பயின்றுகொண்டிருக்கும் மாணவியர்களையும், மாணவர்களையும் பார்க்கின்றபோது இதுபோல் எண்ணம் வருகிறது.

இன்றைக்கு காலையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகள். கண் கண்ணாடிகள் வழங்கி, அதிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு கண் மருத்துவமனையில், தொடர்ந்து வழங்கி, இன்றோடு சேர்த்து, 9 ஆயிரத்து 123 பேருக்குக் கண்ணாடி வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரைக்கும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை சேர்ந்த 126 மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப்பும்- 356 பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கியிருக்கிறோம்.

இங்கு அந்த மாணவ - மாணவிகள் எல்லாம் இருக்கிறீர்கள்… உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, இந்த அகாடமியில் நீங்கள் பெற்றிருக்கும் பயிற்சி, ஒரு சிறிய துவக்கம்தான். இந்தப் பயிற்சி உங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காட்டக்கூடிய கதவை திறந்து வைக்கும் அவ்வளவுதான். ஆனால், அந்தப் பாதையில் நீங்கள் வெற்றிகரமாக நடைபோட வேண்டும் என்றால், கற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துவிடக் கூடாது.

இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மனிதர்களின் வேலைச் சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்துகொண்டு வருகிறது. அதற்கு ஏற்ற மாதிரி நீங்களும் Upgrade ஆகிக்கொண்டே வரவேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம்.

இன்றைக்கு இணையம் முழுவதும் அறிவுத் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களை பார்த்து உங்கள் திறமையை மேலும், மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய Online Course இருக்கிறது. எது உங்களுக்கு உதவியாக இருக்குமோ, அதைத் தேடி படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கெல்லாம் இருக்கிறது. படித்துவிட்டோம் - வேலை கிடைத்துவிட்டது என்று இருந்துவிடாதீர்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பை Continue செய்யுங்கள்.

படிப்புதான் உங்களுக்கு கடைசிவரை துணை நிற்கும். அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்த - கல்வியினால் பெறப்படும் அறிவைக் கொச்சைப்படுத்த பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களைச் சொல்லி பின்னுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, எதிர்காலத்திற்கு என்ன தேவையோ, உங்களுக்கு என்ன தேவையோ அதை நோக்கி நீங்கள் நடைபோட வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். அதிலும் குறிப்பாக உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்பதை மறந்துவிடவேண்டாம். அதனால்தான், நாம் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு உறுதி எடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்பது நம்முடைய ஒற்றுமையைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் கல்வியாகும். அதை நீங்கள் நல்ல முறையில் கற்று, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் மனதார, உளமாற, மகிழ்ச்சியோடு இந்த நல்ல நேரத்தில் உங்கள் அத்தனை பேரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Also Read: சென்னையில் புதிய பள்ளிக் கட்டடங்கள், விளையாட்டுத் திடல்கள்! - மாணவர்களுக்கு மடிக்கணினி! : விவரம் உள்ளே!