M K Stalin
”சபாநாயகர் அப்பாவுவால் சுதந்திர காற்றை சுவாசிக்கும் சட்டப்பேரவை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2025) சட்டமன்றப் பேரவையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த பேரவைத் தலைவர் அவர்களை பதவியிலிருந்துநீக்கக் கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆற்றிய உரை:-
பேரவைத் துணைத் தலைவர் அவர்களே! அ.தி.மு.க உறுப்பினர்களால் மு.அப்பாவு அவர்களை பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக்கோரும் தீர்மானம் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதைப் பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பதுதான் உண்மை.
கடந்த 2017-ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒருதீர்மானம் வந்தது. “தமிழக சட்டமன்ற வரலாறு நூற்றாண்டு விழாவினை இன்னும் நான்கு ஆண்டுகளில் காணப் போகிறது” எனக் கூறித் தொடங்கினேன்.இன்றைக்கு நூற்றாண்டு விழாவினைக் கண்டு 4 ஆண்டுகள் ஆகிறது எனக் கூறித்தொடங்குகிறேன். இப்பேரவை நூற்றாண்டு விழா கண்டுள்ளது.
இங்கே நமக்கெல்லாம் பாடமாக நிற்கிறாரே, தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு உள்ளது.
யாரும் யார் மீதும் விமர்சனம் வைக்கலாம், ஆனால் என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து விமர்சியுங்கள்’ என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் அவரை படமாக இல்லை, பாடமாக நிற்கிறார் என்று நான் குறிப்பிட்டேன்.
அவரது நூற்றாண்டு கொண்டாடும் வேளையில், இப்பேரவையின் தலைவராகப்பணியாற்றும் வாய்ப்பை மு.அப்பாவு அவர்கள் பெற்றிருக்கிறார். 2017-ஆம் ஆண்டு என்னால் இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டதை எண்ணி நான் அன்றைக்கு வருந்தினேன் என்று என் உரையில் பதிவு செய்துள்ளேன். ஆனால் இத்தீர்மானம் இன்றைக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் - கடந்த பேரவைகளின் செயல்பாடுகள், அன்றைய பேரவைத் தலைவர் ஜனநாயகத்தை
மதியாது நடந்துகொண்ட முறைகளையும் பற்றி இங்கேயுள்ள நம்முடைய பேரவை முன்னவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களுக்கும், ஏன், நம்முடைய எதிர்க்கட்சித்
தலைவர் அவர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். நான் மீண்டும் அதைச் சொல்ல வரும்பவில்லை. ஆனால் அவற்றோடு தற்போதைய பேரவைத் தலைவரின் செயல்பாடுகளைஒப்பீடு செய்து, நம்முடைய பேரவைத் தலைவர் எவ்வாறு நடுநிலையோடு
செயல்படுகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்த விவாதத்தைக் கருதுகிறேன்.
2006-2011 காலகட்டத்தில் நம்முடைய பேரவைத் தலைவர் அவர்களும் இந்த அவையில் உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது நான் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக அப்போது பணியாற்றினேன். அப்போதிலிருந்தே எனக்கு அவரை நன்றாகத் தெரியும். பேரவைத் தலைவர், ஜனநாயகக்
கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்கள் மனம் வருந்தாத அளவில், தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவர். நேர்மையாக கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கும் பண்பு கொண்டவர். அவரது நடுநிலையோடு நிற்கும் நேர்மைத் திறனும், அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பழகும் பாங்கும் என்னைக் கவர்ந்த காரணத்தால்தான் அவரை இப்பதவிக்கு நான் முன்மொழிந்தேன்.
ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் நம்முடைய அப்பாவு அவர்கள். கனிவானவர் - ஆனால் அதேநேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே பேரவைக்குத் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள்
என்று நான் நினைக்கிறேன். இவை இல்லாவிட்டால் அவையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்த இயலாது.இந்த அவையில், என்னுடைய தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ, பேரவை நடவடிக்கைகளில் இல்லாத வகையில் தான் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் நடந்து வருகிறார்கள். கடந்த காலங்களில் நடைபெற்றதுபோல் அல்லாமல், ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றே என நினைத்து செயலாற்றி வருகிறார்கள்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாசம், பற்று கொண்டு செயல்படுபவர் நம்முடைய பேரவைத் தலைவர்அவர்கள் என்பதை மனச்சாட்சியுடன் சிந்திப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள். பேரவைத் தலைவருக்கு அருகில் வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அன்போடுபேசிச் செல்வதை இந்தப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பார்த்த காட்சி தான். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்ஜாடையாக அவரோடு பேசி தங்கள் எண்ணத்தை குறிப்பால் உணர்த்துவதையும் உங்களில் பலரும் பார்த்திருக்கலாம்.
எங்களைப் பொருத்தவரையிலும், விவாதங்களில் விருப்பு, வெறுப்பின்றி நாகரிகமாக வாதங்களை வைக்க வேண்டும்என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். 23.3.2017 அன்று அன்றைக்கு இந்த அவையில் நான் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன். எத்தனை விதிமீறல்கள், மரபுகளிலிருந்து விலகல்கள்.
என்னுடைய உரையில் அன்றைக்குச் சுட்டிக்காட்டியுள்ளேன். நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. அதனை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். அதுமாதிரியா இன்றைக்கு நடக்கிறது? என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். நான் அன்றைக்கு உள்ளபடியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையின் வெளிப்பாடாகத்தான் அது மீண்டும் தொடரக் கூடாது என்று முடிவெடுத்தேன்.
இந்த அவையில் அதுமாதிரி நிகழ்வுகள், விதிமீறல், ஜனநாயகத்தை புறந்துள்ளும் மரபு மீறல்கள், எதுவும் நிகழக்கூடாது என்பதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நான் காட்டிய உறுதி, அப்பாவு அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கச் செய்தது. அவர்களும் முழுமையாக அதனை உணர்ந்து, பேரவைத் தலைவராக தன்னுடைய பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்து செயலாற்றுகிறார்.
இந்தத் தீர்மானம் மு.அப்பாவு அவர்களின்மீது சில அ.தி.மு.க. உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி அவர்கள் வைத்த வாதங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் உள்ள காரணத்தால், அதனை மறுத்து, விளக்கத்தை எடுத்து வைத்து – பேரவைத் தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய கடப்பாடு, கடமை, பொறுப்பு முதலமைச்சருக்கும் உள்ளது, இங்கே உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளது.
அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளாக அன்றைக்குப் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள், அருகதை, தகுதி, என்ன யோக்கியதை இருக்கிறது என்று திமுக உறுப்பினர்களைப் பார்த்து அன்றைக்குப் பேசப்பட்ட அந்த வார்த்தைகள், இன்றைக்கு அவையில் பேசப்படுமானால், உடனே பேரவைத் தலைவரால் அந்த வார்த்தைகள் நீக்கப்பெற்றுள்ளன.
அன்றைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினால் அவைக்குறிப்பில் இடம் பெறும். திமுக உறுப்பினர்கள் பேசினால் நீக்கப்படும் என்ற நிலை. இன்றைக்கு பேரவைத் தலைவர் அவர்கள் அப்படியா நடக்கிறார்? இல்லை. நம்முடைய பேரவைத் தலைவர் அவர்கள் அதிமுக உறுப்பினர்கள் பேசுகிற இதுபோன்ற ஒன்றிரண்டு வார்த்தைகளைக் கூட விட்டுவிடுகிறார். ஆளுங்கட்சி
உறுப்பினர்களிடம் கண்டிப்பாக நடந்துகொள்கிறார் என அமைச்சர்கள், உறுப்பினர்கள் சொல்லும்போது, அதைக்கேட்டு உள்ளபடியே எனது மனம் மகிழ்ச்சி அடைந்தது.
ஏனென்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் தர வேண்டும், அவர்கள் இந்த அரசின் செயல்பாட்டினை செம்மைப்படுத்துபவர்களாக உள்ளவர்கள் என்பதில் தலைவர் கலைஞர் அவர்களின் வழி நடக்கும் திராவிட மாடல் அரசுக்கு அந்த எண்ணம் உண்டு.
பல நேரங்களில் கடந்த காலங்களில் நான் பெற்ற கசப்பான உணர்வு என் நினைவிற்கு வரும். இங்கே, அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தால், தொடர்ந்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தால் அவர்களை அமைதிப்படுத்தி, அமர வைக்கத்தான் பேரவைத் தலைவர் முயல்வாரே தவிர முந்தைய பேரவைகளில் நாங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதைப் போல, என்றும் வெளியேற்றம் செய்ய பேரவைத் தலைவர் நினைத்ததில்லை.
கூட்டணியில் உள்ள எங்கள் கட்சி உறுப்பினர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களில் பங்குபெற, முன்பு அளிக்கப்பட்டதுபோல தனியே வாய்ப்பு அளிக்காமல், எங்கள் கணக்கிலேயே பேரவைத் தலைவர் சேர்த்துவிடுகிறார். கேட்டால், உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர்கள் என்ற காரணத்தால் என்பார். அது மாதிரியா முன்னர் நடந்தது? ஒன்றிரண்டு விஷயங்களை இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். கடந்த 10.1.2025 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள். 1.40 மணிக்குத் தொடங்கி 4.32 மணிக்குத் தான் முடித்தார். 2 மணிநேரம் 52 நிமிடம் பேசியுள்ளார். அமைச்சர்களின் குறுக்கீடுகள் 1 மணி நேரம். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மட்டும் பேசியது 1 மணிநேரம் 51 நிமிடம்.
இங்கே எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள் உரையாற்றுகையில் அமைச்சர்கள் விளக்கம் அளிக்க எழுந்தால், உரையை முடித்த பிறகு விளக்கம் அளிக்கலாம் என அமர வைத்துள்ளார்.
அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முன்வரிசைத் தலைவர்கள் எழுந்தால் உடன் அனுமதி அளித்திடுவார். நான் குறையாகச் சொல்லவில்லை, பெருமையாகவே சொல்கிறேன். அமைச்சர்கள் குறுக்கீடும் உறுப்பினர்கள் கணக்கில் ஏற்கெனவே கடந்த காலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுப்பினர் பேசுகிற நேரத்தை மட்டும் கணக்கிட்டு, இங்கே உள்ள ஸ்கீரினிலேயே காண்பிக்கிறார்கள். அனைத்து வகைகளிலும் எங்களை லாக் செய்கிறார் என எங்கள் கட்சி உறுப்பினர்கள் சொன்னாலும் – சுதந்திரக் காற்றை இந்தப்பேரவை தற்போது சுவாசிக்கிற காரணத்தால், பேரவைத் தலைவர் செயல்பாட்டினை எண்ணி மகிழ்ச்சியுற்றுள்ளேன்.
பேரவைத் தலைவராக மட்டுமல்ல, பேரவை கடைப்பிடிக்க வேண்டிய பண்பாட்டின் தலைவராக அப்பாவு அவர்கள் செயல்பட்டுள்ளார் என்றே குறிப்பிட விரும்புகிறேன். பல நாட்களில் அ.தி.மு.க. உறுப்பினர்களை பேச அனுமதித்துவிட்டு, தி.மு.க. உறுப்பினர்கள் பேச பெயர் பட்டியலில் இடம் பெற்றும், இன்னொரு நாள் பேசலாம் என்றும் சொல்லி இருக்கிறார்.
பேரவைத் தலைவர் அவர்களின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக பாராட்ட முடியாவிட்டாலும், மனதிற்குள் பாராட்டிக் கொண்டு தான் இருப்பார்கள். இந்த அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு தீர்மானமா - உள்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா - என்ற விவாதத்தை வெளியில் உள்ளவர்கள் நடத்தட்டும். நாம் நடத்த வேண்டாம்.
ஆனால் இப்படி ஒருவர் மீது இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தோமே என்று எதிர்காலத்தில் உங்கள் மனச்சாட்சி உறுத்தும். பேரவைத் தலைவர் அவர்கள் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை இந்த அவை ஏற்காது,
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!