M K Stalin
“வடசென்னை மக்களின் உயிர் காக்கும் - பெரியார் அரசு மருத்துவமனை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.2.2025) சென்னை, கொளத்தூர், பெரியார் நகரில், புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான “பெரியார் அரசு மருத்துவமனை” திறந்து வைத்து ஆற்றிய உரை பின்வருமாறு,
“பொதுவாக, என்னுடைய பிறந்தநாள் வரும்போது, மக்கள் நலனுக்காக என் மனதுக்கு நெருக்கமான ஒரு திட்டத்தை தொடங்கி வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறேன்!
அதிலும் குறிப்பாக, ஆட்சிக்கு வந்தவுடனே, நம்முடைய இளைஞர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்காக, திறன்மிக்கவர்களாக, எல்லா திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
இதற்காக என்னுடைய கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை 2022-இல் தொடங்கினோம்! அந்த கனவு திட்டம் நனவாகி, இதுவரைக்கும் 41 இலட்சம் பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, அவர்களில் இரண்டு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் உயர் பணிகளுக்கு சென்றுள்ளார்கள்!
அதுமட்டுமல்ல, “நான் முதல்வன் உயர்வுக்குப் படி” என்ற திட்டத்தின் மூலமாக, உயர்கல்வியில் இடைநின்ற 77 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்திருக்கிறோம்! ஒன்றிய அரசு பணிகளுக்கு தயாராகும் நம்முடைய இளைஞர்களுக்கு, “நான் முதல்வன்” போட்டித் தேர்வு பிரிவு மூலமாக ஊக்கத்தொகை வழங்குகிறோம்! இப்படி நம்முடைய பிள்ளைகளின் கல்விக்காக செய்வதைவிட எனக்கு என்ன மகிழ்ச்சி இருக்கிறது?
அடுத்து, 2023-இல் விளிம்பு நிலை மக்கள் நலனுக்காக, மனிதக் கழிவை மனிதனே அகற்றக்கூடிய அவல நிலையை மாற்ற, அதற்கான கருவிகளைத் தந்து பணியாளர்களையே தொழில்முனைவோர் ஆக்கும் திட்டத்தை அறிவித்தேன். அந்தத் திட்டத்தின் மூலமாக இதுவரைக்கும் 202 பேர் தொழில் முனைவோர்களாகி இருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டிருக்கிறது.
அடுத்து, 2024-இல் சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைக்க, நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தேன். இதோடு இந்த ஆண்டு என்னுடைய மன்னிக்கவும். நம்முடைய கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பியிருக்கிறோம். இந்த மருத்துவமனை வட சென்னை மக்களுக்கே உயிர்காக்கும் மருத்துவமனையாக காலா காலத்துக்கும் செயல்பட இருக்கிறது!
வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற நாம் எடுத்து வரும் முயற்சிகளில் இந்த பெரியார் மருத்துவமனை என்பது ஒரு மைல்கல்! வடசென்னையின் வளர்ச்சிக்காக நாம் எடுத்து வரும் முயற்சிகளை பார்த்தீர்கள் என்றால், இன்றைக்கு தினமணி பத்திரிகையில் பாராட்டியிருக்கிறது!
இந்த மருத்துவமனைக்கு பெயர் வைப்பது சம்பந்தமாக நம்முடைய திரு. சேகர்பாபு அவர்கள் என்னிடம் வந்து கேட்டார். அப்போது “பெரியார் நகரில் இருக்கும் இந்த பெரிய மருத்துவமனைக்கு, பெரியார் பெயரையே வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னேன்! ஏன் என்றால், அவர்தான் நம்முடைய சமூகத்தில் நிலவிய சமூகப் பிணிகளுக்கு மருத்துவம் பார்த்த சமூக மருத்துவர்” அவர். பெரியார் பெயரை சூட்டியதில் பெரியாரின் தொண்டனாக பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் நாள் மூன்று தளங்கள் இருப்பது மாதிரியான மருத்துவமனைக்குதான் அடிக்கல் நாட்டினேன். ஆனால், மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் வேண்டும் என்று இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு கடந்த ஆண்டு மார்ச் ஏழாம் நாள் அதற்கான அடிக்கல்லை நாட்டினேன்.
இன்றைக்கு 210 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் ஆறு அடுக்கு தளங்களில் 560 படுக்கை வசதிகளோடும், ஆறு அறுவை சிசிச்சை அரங்கம், நவீன ரத்த வங்கி, புற்றுநோயியல் பிரிவு, இருதயவியல் பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, நரம்பியல் பிரிவு, மகப்பேறு பிரிவு என்று எல்லா வசதிகளோடும் மிகப் பிரமாண்டமாக இந்த உயர்சிறப்பு மருத்துவமனை உருவாகியிருக்கிறது!
நான் அடிக்கடி சொல்வதுதான், நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொருத்தவரைக்கும் கல்வியும் மருத்துவமும்தான் நம்முடைய இரு கண்கள்! அதனால்தான், கல்விக்கு கவனம் செலுத்துவது மாதிரியே மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு,
புதிய அரசு மருத்துவமனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்குவது மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மருத்துவக் கருவிகளை நிறுவுவது என்று மட்டுமல்லாமல் நாடு போற்றும் திட்டங்களான “மக்களைத் தேடி மருத்துவம்,” “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48” சுகாதார நடைபாதை திட்டம் போன்ற ஏராளமான திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் செயல்படுத்தி வருகிறோம்!
இந்த வரிசையில், இந்த பெரியார் மருத்துவமனையை நம்முடைய கொளத்தூர் தொகுதியில் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என்று எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களை நம்பி மருத்துவம் பார்க்க வரும் மக்களை - உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாருங்கள் - பரிவோடு சிகிச்சை கொடுங்கள்!
அதோடு, இலட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கப்போகும் இந்த மருத்துவமனை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்யுங்கள்! நான் வாரத்திற்கு ஒரு முறை எப்படியும் வந்துவிடுவேன். வரும்போதெல்லாம் இந்த மருத்துவமனைக்கு வராமல் செல்ல மாட்டேன்.
அதே மாதிரி, பொதுமக்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது என்ன என்றால் சுய ஒழுக்கம்தான் நம்முடைய எல்லோருக்கும் மிக முக்கியமானது! எனவே, அதை பின்பற்றி, பொது இடங்களில் தூய்மையை பேணிக் காக்க வேண்டும்! ஏன் என்றால், இது, நம்முடைய மருத்துவமனை! ஒரு கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ அதைவிட அதை பாதுகாப்பது மிகவும் முக்கியம்!
எல்லா பிறந்தநாளுக்கும் ஒரு திட்டத்தை அறிவிப்பேன் என்று சொன்னீர்களே... இந்த பிறந்தநாளுக்கு என்ன திட்டம் அறிவிக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்… மகிழ்ச்சியான இந்த தருணத்தில் மனநிறைவான ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
மாற்றுத் திறனாளிகள் என்ற பெயர் கொடுத்து, நம்முடைய சகோதர - சகோதரிகளின் சுயமரியாதையை காத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்! அவரது வழியில், அந்த துறையை என்னுடைய பொறுப்பில் வைத்துக்கொண்டு, நிறைய திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்!
இன்றைக்கு கூட, உட்கோட்ட அளவில் ஒன்பது மையங்கள் - வட்டார அளவில் 38 மையங்கள் என்று “விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை” திறந்து வைத்திருக்கிறேன். நான்கு விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை ஊர்திகளை தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த வரிசையில் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்க… அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்! மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் - 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - 1994 ஆகியவற்றில் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்!
இதன்மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் இடம் பெறுவது உறுதிசெய்யப்படும். அவர்களின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும்! அதிலும் முக்கியமாக விளிம்பு நிலை மக்களான மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம் பெறுவார்கள்! பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து அதிகாரமும் கிடைக்கும் நோக்கத்தோடு உருவானதுதான், திராவிட இயக்கம்!
இந்த இயக்கத்தின் இலக்குகளை மெய்ப்பிக்கும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான், திருநர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகளை திறந்து விடும் அரசாக இருக்கிறது என்பதன் அடையாளம்தான், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கும் பிரதிநிதித்துவம்!
இதுதான் உண்மையான சமூகநீதி அரசு! பெரியார் அரசு! இதுமாதிரியான திட்டங்களை செயல்படுத்தும் போதுதான் - நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து - நம்முடைய முற்போக்கான கொள்கைகளை செயல்படுத்துவதற்கான பலன் விளைகிறது என்று மகிழ்ச்சி அடைகிறேன்! இதுபோன்ற ஏராளமான திட்டங்களை ஏற்கெனவே செய்திருக்கிறோம்! இனியும் தொடர்ச்சியாக செய்வோம்! அப்படி தொண்டாற்றுவதுதான் எனது வாழ்நாள் கடமை!”
Also Read
-
பீகார் - வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஆபத்தானது : இந்திய தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி புகார்!
-
”கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : அமர்நாத் ராமகிருஷ்ணன் !
-
”இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
”இது நாங்கள் உருவாக்கிய கூட்டணி” : எடப்பாடி பழனிசாமிக்கு தொல்.திருமாவளவன் பதிலடி!
-
”ஓரணியில் தமிழ்நாடு” கைகோக்கும் குடும்பங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!