M K Stalin
“மொழி - இனம் - நாட்டை காக்க வேண்டும்!” : மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளில் முதலமைச்சர் பேருரை!
இன்று (25-01-2025) பல்லாவரத்தில் நடைபெற்ற மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி.மு.க சார்பில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பேருரை பின்வருமாறு,
* “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!”
* “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு!”
* “ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே!” என்று முழக்கங்களை எழுப்பி, தமிழ்நாட்டின் தெருக்களில் திரண்டு வந்து தங்கள் இன்னுயிரைத் தந்து தமிழைக் காத்த மொழிப்போர் மறவர்களுக்கு முதலில் என்னுடைய வீரவணக்கம்! தமிழ் வணக்கம்! தமிழ்த் தாயின் தியாகப் பிள்ளைகளே! தலைப் பிள்ளைகளே! உங்களை வணங்குகிறேன்!
இன்று காலை மூலக்கொத்தளத்தில் மொழிப்போரின் முதல் தியாகிகள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்து, என்னுடைய வணக்கத்தை செலுத்திவிட்டுதான் இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். எழும்பூரில் இருக்கும் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட தாளமுத்து – நடராசன் மாளிகையில் அவர்களின் திருவுருவச் சிலைகளையும் நம்முடைய அரசு விரைவில் நிறுவ இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் எடுத்து வைத்த கோரிக்கை இது.
கட்டாய இந்தியை எதிர்த்து, மறியல் நடத்தி, ஊர்வலம் சென்றதுக்காக சிறைத் தண்டனை பெற்றவர் டாக்டர் தருமாம்பாள் அவர்கள். இந்தி எதிர்ப்புப் போரில் பெண்கள் பங்கேற்பின் அடையாளங்களில் ஒருவர். அவரின் நினைவிடத்திலும் என்னுடைய வணக்கத்தை செலுத்தினேன்.
திராவிட இயக்கத் தீரர்களே. மொழிப்போர் வீரர்களே. உங்கள் தியாகம்தான் இன்றைக்கும் எங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறது! பல்வேறு காலக்கட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய தியாக வரலாறுதான், மொழிப்போர்! இன்றைக்கும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இந்தியைத் திணிக்கலாமா - சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என்றுதான் ஒன்றிய ஆட்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அன்னைத் தமிழை அழிக்க அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது, 1938-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு தொடங்கியபோது - இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்து தந்தை பெரியார் சிறை சென்றார். நடராசனும் - தாளமுத்துவும் சிறைக்களத்தில் உயிர்த் தியாகம் செய்தார்கள்! “இது அரசியல் போராட்டம் அல்ல, பண்பாட்டுப் போராட்டம்” என்று தந்தை பெரியார் அடையாளப்படுத்தினார். அதுமட்டுமல்ல, எச்சரிக்கையாக ஒன்றைச் சொன்னார். “இந்தியை அல்ல, எத்தனை மொழிகளை திணித்தாலும் தமிழ் அழிந்துவிடாது. ஆனால், தமிழனின் பண்பாடு அழிந்து போகும்” என்று சொன்னார்.
அதை முறியடிக்கத்தான் 1948-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை வகித்து நடத்தினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் உறுதியாக ஒன்றைச் சொன்னார். “மொழி ஆதிக்கம், நிர்வாக ஆதிக்கத்துக்கு இடமேற்படுத்தும். அது பொருளாதார ஆதிக்கத்துக்கு வழிகோலும். பிறகோ, தமிழர்கள் அரசியல் அடிமையாகி துன்பப்படுவார்கள்" என்று சொன்னார்.
அடுத்து, மூன்றாவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டமான 1963-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டக் குழு தலைவராக முத்தமிழறிஞர் கலைஞரை தலைமைக் கழகம் அறிவித்தது. தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் – சட்டப் பிரிவு நகலை எரிக்கும் போராட்டம் என்று இந்தி எதிர்ப்புப் போரை நடத்தினார் தலைவர் கலைஞர். இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் 1963 - 64 - 65 ஆகிய மூன்றாண்டு காலம் நடந்த மொழிப் போராட்டத்தின் மையப் புள்ளியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது. அதனால்தான், 1965 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டியதாக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மூன்றாவது மொழிப் போர்க்களத்தில், ஏராளமான கழகத் தொண்டர்களும், மொழி உணர்வாளர்களும் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள்!
* கீழப்பழுவூர் சின்னச்சாமி
* கோடம்பாக்கம் சிவலிங்கம்
* விருகம்பாக்கம் அரங்கநாதன்
* கீரனூர் முத்து
* அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்
* சத்தியமங்கலம் முத்து
* மயிலாடுதுறை சாரங்கபாணி
* சிவகங்கை மாணவர் இராசேந்திரன்
* விராலிமலை சண்முகம்
* பீளமேடு தண்டபாணி என்று ஏராளமான வீரர்கள் இந்தப் போர்க்களத்தில் தங்களின் இன்னுயிரை கொடுத்தார்கள். இந்தத் தியாகிகள்தான் தமிழ்த்தாயின் தலைப் பிள்ளைகள்! தியாகத்தின் திருவுருவங்கள்!
இந்தி எதிர்ப்புப் போர் குறித்து தலைவர் கலைஞர் சொன்னது. “இது இன உரிமைப் போர்! ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்!" என்று முழங்கினார்! அதாவது, நாம் நடத்தும் இந்திக்கு எதிரான போர் என்பது, ஏதோ ஒரு மொழிக்கு எதிரான போர் அல்ல; நம்முடைய பண்பாட்டைக் காக்கும் போர்!
இப்படி மொழியைக் காக்க போராடிய நம்முடைய கழக ஆட்சி 1967-இல் அமைந்த பிறகுதான், தமிழ்நாட்டை இருமொழிக் கொள்கை கொண்ட மாநிலமாகப் பாதுகாத்தோம்! அதற்கு சிக்கலை உருவாக்கத்தான், மும்மொழித் திட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதே இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நமது மீது திணிக்க வேண்டும் என்றுதான்! இவ்வாறு, நாம் எத்தனையோ மொழித் திணிப்புகளையும், பண்பாட்டுத் திணிப்புகளையும் கடந்துதான் வந்திருக்கிறோம்!
இப்போது கூட, டி.ஆர். பாலு அவர்கள் சொன்னாரே, 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு தொழில்நுட்பம் இருந்த - உலகின் தொன்மையான பண்பாடும் நாகரிகமும் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்று நாம் ஆய்வுப்பூர்வமாக நிறுவி இருக்கிறோம். இந்த கண்டுபிடிப்பு, நாம் வாழும் காலத்தில், அதிலும் நான் ஆளும் காலத்தில் நிகழ்ந்திருக்குறது பெருமகிழ்ச்சியை கொடுக்கிறது! ஆனால், இந்த அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகளைக்கூட சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கான காரணத்தை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
இப்படிப்பட்ட தொல்சமூகமான தமிழ்ச்சமூகம் மேல், ஆரிய மொழியை நேரடியாகத் திணிக்க முடியவில்லை என்று பள்ளிகள் மூலமாக - பல்கலைக் கழகங்கள் மூலமாகத் திணிக்க நினைக்கிறார்கள்! மாநில அரசு நிதியால், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட நம்முடைய பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை மட்டும் ஆளுநர் நியமிப்பாரா? நான் கேட்க விரும்புவது. உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க – நிலம் கொடுத்து – அதை வளர்த்தெடுத்து கட்டடங்கள் கட்டி - பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் எங்களுக்கு - பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமிக்கத் தெரியாதா?
அண்மையில் யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை திரும்பப் பெற வேண்டும் என்று நாட்டிலேயே முதன்முறையாக நாம்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போன்று உங்கள் மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றுங்கள்" என்று இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினேன்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரள சட்டமன்றத்தில் இப்போது தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். கர்நாடக அரசும் எதிர்த்திருக்கிறது! பல்கலைக் கழகங்களை உருவாக்குவது மாநிலங்கள். அப்போது, பல்கலைக் கழகங்களை நிர்வகிக்கும் - வழிநடத்தும் - தலைமை வகிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வேண்டாமா? அதாவது, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் - எதைச் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்கிறது ஒன்றிய அரசு.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய இயற்கை பேரிடர் நிவாரண நிதியை தர மறுக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறைக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். புதிய சிறப்புத் திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார்கள். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை!
ஆனால், எதைச் செய்கிறார்கள் என்றால்? இந்தியைத் திணிப்பார்கள்! சமஸ்கிருதப் பெயர்களை புகுத்துவார்கள்! மாநில உரிமைகளில் தலையிடுவார்கள்! குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வருவார்கள்! நம்முடைய குழந்தைகளை பலிவாங்க நீட் நடத்துவார்கள்! புதிய கல்விக் கொள்கையை புகுத்துவார்கள்! இதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரம்!
ஒற்றை மதம்தான் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. ஒற்றை மொழிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இன்றைய தினம் அவர்கள் இந்தியின் ஆதரவாளர்களாகக் காண்பித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், உண்மை என்ன? நான் எப்போதுமே ஒன்றைச் சொல்வேன். பா.ஜ.க.வை பொருத்தவரைக்கும், எதிலுமே குறுகிய காலச் செயல்திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். அவர்கள் சமஸ்கிருத ஆதரவாளர்கள்! நேரடியாக சமஸ்கிருதத்தை சொன்னால் கடுமையாக எதிர்ப்பு வரும் என்று முதலில் இந்தியைச் சொல்கிறார்கள். இந்தியை அரியணையில் அமர வைத்த பிறகு சமஸ்கிருதத்தை கையில் எடுப்பார்கள். முதலில் இந்தி - பின்னர் சமஸ்கிருதம். இதுதான் பா.ஜ.க. கொள்கை!
இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை சாதாரணமாக அடையவில்லை. சமூக நீதிக்காக 100 ஆண்டுகள் போராடியிருக்கிறோம். உழைத்திருக்கிறோம். பேரறிஞர் அண்ணா ஏற்படுத்தித் தந்த அடித்தளத்தில் - நவீன தமிழ்நாட்டை தலைவர் கலைஞர் உருவாக்கினார். நம்முடைய திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை மேலும் உயர்த்தி வருகிறது.
* தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது.
* தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.4 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் 9.21 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
* பொருளாதாரக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது.
* மருத்துவம், கல்வி, சமூகநலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக இருக்கிறது.
* இந்தியாவின் வலிமை மிக்க விளையாட்டு மையமாகத் தமிழ்நாடு வளர்ந்துவிட்டது.
* மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - 2024-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அமைப்பு விருதை பெற்றிருக்கிறது.
* தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 2.2 விழுக்காடு மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தேசிய சராசரியான 14.96 விழுக்காட்டை விட மிகமிகக் குறைவு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ அரசு தொடங்க இருக்கிறது.
* தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால், பணிபுரியும் பெண்கள் அதிகமாக இருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்திய நாட்டின் மொத்தப் பெண் தொழில் பணியாளர்களில், 41 விழுக்காடு பெண்கள், தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.
* கடந்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, வான் நோக்கி வளர்ந்து வருகிறது தமிழ்நாடு. இந்த வளர்ச்சியை பல்வேறு ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை! இந்த வளர்ச்சியைத் தடுக்க மாநில சுயாட்சியைச் சிதைக்கிறார்கள்! கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கிறார்கள்! இந்தி மொழியை அனைத்து இடத்திலும் ஆதிக்க மனப்பான்மையுடன் திணிக்கிறார்கள். நிதியைத் தர மறுக்கிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டின் மீது, அரசியல் - பொருளாதார - சமூக - பண்பாட்டுப் படையெடுப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு நடத்திக் கொண்டு இருக்கிறது. அதற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் போராடிக் கொண்டு இருக்கிறது.
அதனால்தான் சொல்கிறேன், மொழிப்போர் இன்னும் முடியவில்லை, இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! எவ்வாறு சொல்கிறேன் என்றால், ஒன்றிய அரசுப் பணிகளுக்கு இந்தி தெரிய வேண்டும் என்று சொல்வது; பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதம் கொண்டாடுவது - அங்கு, தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல்திருநாடும் என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டுப் பாடுவது; நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பும் கடிதங்களுக்கு இந்தியில் பதில் அனுப்புவது; அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அறிக்கையில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.-இல் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது என்று மொழிப்போர் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மொழி சிதைந்தால் இனம் சிதையும்! இனம் சிதைந்தால், நம்முடைய பண்பாடே சிதைந்துவிடும்! பண்பாடு சிதைந்தால், நம்முடைய அடையாளம் போய்விடும்! அடையாளம் போனால், தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியையே இழந்துவிடுவோம்! தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்தும் பயனில்லை! எனவே, மொழியையும் - இனத்தையும் - நாட்டையும் காக்க வேண்டும்! இந்த மூன்றையும் காக்கும் கழகத்தைக் காக்க வேண்டும்! கழகம் உருவாக்கிய ஆட்சியை காக்க வேண்டும்!
அன்றைக்கு மாணவர்களும் - இளைஞர்களும் இணைந்து தமிழைக் காத்தார்கள், இன்றைக்கு அந்த மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த மேடையில் இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இன்றைக்கு நம்முடைய பல்கலைக் கழங்களை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் ஆபத்தை முறியடிக்க, நம்முடைய மாணவரணி சார்பில் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, மாபெரும் போராட்டம் நடைபெறும்! அன்றைக்கு, மொழிப்போரில் ஈடுபட்டு, இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகளை எல்லாம் காப்பாற்றினோம். இன்றைக்கு, கல்வி உரிமைப் போரில் ஈடுபட்டு, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களின் கல்வி உரிமையையும் காக்க கழக மாணவரணியினர் முன்கள வீரர்களாக டெல்லியில் திரளுவார்கள், கல்வி உரிமையையும் - மாநில உரிமைகளையும் காப்போம்!
வரும் 2026-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல், கொள்கை வாதிகளாக இருக்கும் நமக்கும் - கொத்தடிமைக் கூட்டமாக இருக்கும் அ.தி.மு.க.விற்கும் நடக்கும் தேர்தல். மறந்துவிடாதீர்கள்! தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் முன்னேற்றிய தி.மு.க.விற்கும் தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் அடமானம் வைத்த அ.தி.மு.க.விற்கும் நடக்கும் தேர்தல். 2019 முதல் நடந்த அனைத்து தேர்தலிலும் தொடர்ச்சியாக வென்றிருக்கிறோம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பின் நாம் சந்தித்த எல்லாத் தேர்களிலும் வென்று நாம் கலைஞர் அவர்களுக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். இது தொடரும்! நான் உறுதியாகச் சொல்கிறேன். தொடர்ந்து நான் ஒவ்வொரு மாவட்டமாக, சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே சந்திக்கும் மக்கள் முகங்களை எல்லாம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். 2026 தேர்தலிலும் நாம்தான் வெல்வோம்! ஏழாவது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காண்போம் என்று – மொழிப்போர் மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த நேரத்தில் உறுதியேற்போம்! உறுதியேற்போம்! உறுதியேற்போம்!
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!