M K Stalin

“திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சி!” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஜனவரி 8) 3 மூன்றாவது நாளாக கூடியது.

அப்போது கேள்வி நேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் விடையளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கட்டணமில்லா விடியல் பயணத்தில் தொடங்கி, கோடிக்கணக்கான மகளிருக்கு உரிமைத் தொகையை உறுதி செய்து, கல்லூரிக்கு வரும் அரசுப்பள்ளி மாணவிகளை புதுமைப் பெண்களாக வளர்த்தெடுக்கும் மகளிருக்கான ஆட்சி, ‘திராவிட மாடல் ஆட்சி.’

ன் தலைமையிலான அரசை பொறுத்தவரை, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, எந்த தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, காவல்துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியமே தவிர வேறு ஏதும் இல்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விவகாரத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி இல்லை. பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லும் குற்றச்சாட்டு உண்மை இல்லை. சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சுற்றுப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தான் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அரசின் மீது களங்கம் ஏற்படுத்துகிறோம் என்ற முயற்சியில் உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களின் கல்வியை கெடுத்து விடாதீர்கள்.

யார் அந்த சார் என்று பேட்ஜ் அணிந்து வந்திருக்கும் அதிமுகவினரை பார்த்து கேட்கிறேன். உங்கள் ஆட்சியில் இதுபோன்ற 100 சார்கள் இருந்தார்களே அவர்கள் எங்கே என்ற கேள்வியை எங்களாலும் கேட்க முடியும்.

யார் அந்த சார் என்று விமர்சிக்கும் அதிமுகவினர் முடிந்தால் ஒன்றிய அரசின் உதவியோடு யார் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். இந்த வழக்கில் அரசியல் செய்யவேண்டாம் என்று நீதிமன்றமே சொல்லிய பின்னரும் அரசியல் லாபம், வீண் விளம்பரத்துக்காக அதிமுகவினர் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் சி.பி.ஐ வசம் சென்ற பிறகு தான், விசாரணை நடத்தப்பட்டது. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொள்ளாச்சி சம்பவத்தால் இரண்டு வருடத்திற்கு மேலாக பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர். இச்சம்பவம் தான், அன்றைய முதலமைச்சர் ‘சார்’ ஆட்சியின் லட்சணம். பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச, இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை” என்றார்.

Also Read: #LIVE : சட்டப்பேரவை 2025 - குற்றவாளிகள் மீது தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை - முதலமைச்சர் உறுதி !