M K Stalin

நாங்குநேரி சம்பவத்தில் சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் சின்னதுரை என்ற மாணவராய் 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து அவரை தங்களிடம் இருந்த அரிவாளால் தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது அதனை தடுக்கமுயன்ற சின்னத்துரையின் தங்கை சந்திராவையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணையில், சாதிய பாகுபாடு காரணமாக சின்னதுரையுடன் படிக்கும் சக மாணவர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அந்த மாணவரின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், "நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.

அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: 'சன்ஹிதா', 'சாக்‌ஷியா'.... - சட்டங்களின் பெயரை இந்தியில் மாற்றும் பாஜக அரசு.. முதலமைச்சர் கடும் கண்டனம் !