M K Stalin
பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கைகள் பொருத்திட முதலமைச்சர் ஆணை !
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவர்கள் எழுதியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in இணையதள முகவரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16% தேர்ச்சி. மாணவிகள் 94.66% தேர்ச்சி. அதேபோல் 1023 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கைகளையும் இழந்த அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர் 0-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நெடுமருதி என்ற பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது.
இங்கு படித்த க்ரித்தி வர்மா என்ற மாணவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 2 கைகள் இல்லாத போதிலும், படிப்பில் தீவிர ஆர்வம் காட்டி சாதனை படைத்துள்ள மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்! அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன்.
அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
4 வயதில் மின்விபத்தில் இரண்டு கைகளையும் பகுதியாக இழந்த நிலையிலும், கல்வி மீதான பற்றால், நம்பிக்கையோடு தொடர்ந்து படித்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் கீர்த்தி வர்மாவுடன் தாயாருடன் தொலைபேசியில் உரையாடி, மருத்துவ உதவிக்கு உறுதியளித்த முதலமைச்சர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!