M K Stalin

கலைஞரின் உற்ற தோழர் திருவாரூர் கு.தென்னன் நூற்றாண்டு விழா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழர் திருவாரூர் கு.தென்னன் அவர்களி நூற்றாண்டு விழாவில் அவரது கழகப் பணிகளை இன்றைய தலைமுறையின் உடன்பிறப்புகள் அறிந்து பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளப் பதிவில், "நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழர் திருவாரூர் கு.தென்னன் அவர்களுக்கு நூற்றாண்டு விழா. பள்ளிப் பருவத்திலிருந்தே கொள்கை உறவுடன் கலைஞரின் தோழராக விளங்கியவர் தென்னன் அவர்கள். திருவாரூர் கமலாலயம் திருக்குளத்தின் நடுவண் கோயிலுக்குக் கலைஞரும் தென்னனும் நீந்திச் சென்ற அனுபவத்தை நெஞ்சுக்கு நீதியில் காணலாம்.

முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளை எனப்படும் முரசொலி தொடங்கப்பட்டபோது அதன் நிதிப் பொறுப்பைக் கவனிக்கக் கூடியவராகவும், அச்சிடப்பட்ட இதழ்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைக் கலைஞருடன் இணைந்து மேற்கொள்ளக் கூடியவராகவும் இருந்தவர் தென்னன் அவர்கள். 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குளித்தலைத் தொகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் முதன் முதலாகப் போட்டியிட்டபோது அவரது வெற்றிக்கு அல்லும் பகலும் பாடுபட்டவர்களில் ஒருவர்.

தலைவர் கலைஞர் அவர்களின் ஒவ்வொரு வெற்றியிலும் துணை நின்று அகம் மகிழ்ந்த நண்பர். கழகம் சந்தித்த நெருக்கடிகளின் போதெல்லாம் தலைவர் கலைஞருக்கு நிழலாகத் துணை நின்ற தோழர். பலன் கருதா நட்புக்குரியவரான தென்னன் அவர்களைத் திருவாரூர் நகர்மன்றத் தலைவராக்கி நட்பைப் போற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

என்னுடைய வளர்ச்சியில் எப்போதும் தனி அக்கறை கொண்டவர் கு.தென்னன். நான் திருவாரூர் சென்றாலும், அவர் சென்னைக்கு வந்தாலும் சந்திக்காமல் இருந்ததில்லை. அவரது குடும்பமே என் மீது பாசம் கொண்டிருக்கும்.

கொள்கை உறுதிமிக்க அவரது கழகப் பணிகளை இன்றைய தலைமுறையின் உடன்பிறப்புகள் அறிந்து பின்பற்றுவதே தென்னன் அவர்களின் நூற்றாண்டுக்கு நாம் செய்யும் சிறப்பு. நட்பென்ற சொல்லுக்குரியவராக வரலாற்றில் என்றும் வாழ்வார் திருவாரூர் கு.தென்னன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “கேட்கத் தயங்கும் கேள்விகள்.. முகம் சுளிக்காத கலைஞர் ” : பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞரின் பதில்கள் !