M K Stalin
கழக தலைவரானது பெருமகிழ்ச்சியோடு எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது..- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
நன்றி மலர் தூவி, நற்பணி தொடருகிறேன்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
ஜனநாயகப் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-ஆவது தேர்தல் பல்வேறு நிலைகளில் நிறைவுற்று, கழகத் தலைவர் - பொதுச்செயலாளர் - பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் கழகத்தின் இதயமாம் பொதுக்குழு நேற்று (9-10-2022) மிகச் சிறப்பான முறையிலே கூடி, ஒரு மனதாகத் தேர்வு செய்து, ஜனநாயகக் கடமையைத் திட்பமாக நிறைவேற்றியுள்ளது. ஓர் இயக்கத்தின் அடி முதல் முடி வரையிலான கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் பொதுக்குழு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கான இலட்சிய இலக்கணத்தைப் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களும் வரையறுத்து நமக்கு வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த அரசியல் இலக்கணத்துக்கேற்ப நாம் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து கவனமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.
பேரறிஞர் அண்ணா இப்போது இல்லை; முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை. அண்ணாவுக்கு அருமைத் தம்பியாக, தலைவர் கலைஞருக்கு உற்ற நண்பராக காலமெலாம் இருந்து, எனக்கு பெரியப்பாவாக, அரசியல் பயிற்றுவித்த இனமானப் பேராசிரியர் அவர்களும் இல்லை. நம்மிடையே நடமாடிக் கொண்டிருந்த இவர்கள் மூவரும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடன் படங்களாக மேடையில் வீற்றிருந்தனர். அவர்களுக்கு மலர் தூவி என் நெஞ்சம் நிறைந்த வணக்கத்தைச் செலுத்தினேன்.
கழகத்தின் மூத்த முன்னோடி - தலைவர் கலைஞர் அவர்களின் நிழல் போல நீங்காதிருந்த அன்பிற்குரிய ஆர்க்காட்டார் அவர்கள் கழகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு, பொதுக்குழு மேடையில் அவர் அமர்ந்து, கழகத் தலைவராக உங்களில் ஒருவனான நான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிற அறிவிப்பை வெளியிட்டபோது, பொதுக்குழு நடைபெற்ற சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் ஹாலில் எழுந்த கரவொலியும் ஆர்ப்பரிப்பும், அலைகளின் பேரோசையை விஞ்சி, எனக்குப் பெருமகிழ்ச்சியை மட்டுமல்ல, பெரும் பொறுப்பு என் தோளில் இரண்டாவது முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது என்கிற கவனத்துடன் கூடிய எச்சரிக்கை உணர்வையும் சேர்த்தே ஏற்படுத்தியது. அந்த உணர்வுடன்தான் நான் மேடையில் ஏறி, பொதுக்குழு உறுப்பினர்களின் திருமுகங்களைக் கண்டு பரவசமடைந்தேன்.
பொதுக்குழுவுக்கு வரும் வழியெங்கும் கழகத்தின் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று வாழ்த்து முழக்கமிட்டு, வாஞ்சையுடன் தங்கள் அன்பினை வெளிப்படுத்தி, பரிசுகளை வழங்கி, உங்களில் ஒருவனான எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும், நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வழங்கினார்கள். இலட்சோப லட்சம் எளிய தொண்டர்களின் இணையற்ற இயக்கமல்லவா இது! வழிநெடுக இருந்த அந்தத் தொண்டர்களின் பிரதிநிதிகள்தான் நாம் என்பதை நினைவூட்டுவதாகவே பொதுக்குழு அரங்கம் அமைந்திருந்தது.
தொண்டர்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் திரட்டப்பட்ட நிதியினைக் கொண்டு உருவாகி எழுந்து நிற்கும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் போன்ற வடிவமைப்பில் பொதுக்குழு அரங்கம் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு அரங்கப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், எப்போதும் போலவே தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை, நாம் எண்ணி எதிர்பார்ப்பதற்கும் கூடுதலான சிறப்புடன் நிறைவேற்றிக் காட்டியிருந்தார். அவருக்கு உறுதுணையாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் அமைச்சர் சேகர்பாபு, திரு.சிற்றரசு ஆகியோர் இருந்து பொதுக்குழு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.
கூடிக் கலைவது அல்ல பொதுக்குழு. கழகத்தின் ஆணிவேராகத் திகழும் கிளைக் கழகங்கள் முதல் ஒன்றிய – நகர - பேரூர்க் கழகங்கள் வரை கட்சி அமைப்புக்கான தேர்தல் முறையின்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கூடி, தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தி.மு.கழகத்தின் உச்சபட்ச அதிகார அமைப்புதான் பொதுக்குழு.
நேற்றைய பொதுக்குழுவில் நான் உரையாற்றியது போல, கிளைகள் முதல் மாவட்ட நிர்வாகம் வரையிலான தேர்தலில் வழக்கமான சில சலசலப்புகளைத் தவிர, கழகத்தின் உட்கட்சித் தேர்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்ததற்குக் காரணமானவர்கள் கழகத்தின் சார்பிலான தேர்தல் ஆணையாளர்கள். அந்த ஆணையாளர்களைக் கடந்து, ஒரு சில இடங்களில் உருவான வாக்குவாதங்களையும் மனக்கசப்புகளையும் சரிசெய்வதற்காக, அவர்களைத் தலைமைக் கழகத்திற்கு அழைத்து, ஆற அமர உட்கார வைத்து ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசித்து, சுமுகமான முறையில் தீர்வு கண்டு, நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, அமைப்புத் துணைச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர்.
கிளைகள் முதல் மாவட்ட நிர்வாகம் வரை உள்கட்சி ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட பிறகே பொதுக்குழு கூடி, உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகவும், கழகப் பொதுச் செயலாளராக அண்ணன் துரைமுருகன் அவர்களையும், பொருளாளராக சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களையும் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது. நாங்கள் முறைப்படி தேர்வு பெற்றவுடன், முதன்மைச் செயலாளராக திரு.கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்களாக திரு.இ.பெரியசாமி, திரு.க.பொன்முடி, திரு.ஆ.ராசா, திரு.அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கழக சட்டதிட்டங்களுக்குட்பட்டு மீண்டும் நியமிக்கப்பட்டனர். மகளிருக்குரிய துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு அன்புத் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் நியமிக்கப்பட்டார்.
கழகத் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக திரு.முகமது சகி, திரு.கு.பிச்சாண்டி, திரு.வேலுச்சாமி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கழகச் சுற்றுச்சூழல் அணி, அயலக அணி ஆகியவற்றை அங்கீகரிக்கும் சட்டப் பிரிவு, தொ.மு.ச தொடர்பான சட்டத்திருத்தம், சட்டமன்றத் தொகுதிகளுக்கான தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு தொடர்பான சட்டத் திருத்தம் ஆகியவற்றைக் கழகத் சட்டத் திருத்தக் குழுச் செயலாளர் பி.வில்சன் அவர்கள் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு வைக்க, அவை ஏற்கப்பட்டன.
எதையும் கழக விதிகளுக்குட்பட்டு ஒருமனதாக நிறைவேற்றுவதுதான் கழகப் பொதுக்குழுவின் தனிச் சிறப்பு. அத்தகைய சிறப்புமிக்க பொதுக்குழுவில் தலைவர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளையும் பங்கேற்ற கழகத்தினரையும் வாழ்த்தி முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் உரையாற்றினார்கள். தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஏற்புரை வழங்கினர்.
தங்கை கனிமொழி தனது ஏற்புரையில், “அண்ணா.. அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன். கலைஞரின் இடத்தில் உங்களை இந்த நாடு பார்க்கிறது. உங்கள் வழிகாட்டுதலை எதிர்நோக்குகிறது” என்று குரல் தழுதழுக்க, உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார். நான் உரையாற்றும்போது, அண்ணா இல்லை.. கலைஞர் இல்லை என்பதை எடுத்துக்காட்டி, அவர்கள் இல்லாத நிலையில், இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை சுமப்பது எத்தகைய கடினமான பெரும்பணி என்பதையும் என்னென்ன சவால்கள் நமக்கு எதிரே ஏராளமாக இருக்கின்றன என்பதையும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்களில் ஒருவனான என்னுடன், உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் துணைநிற்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன்.
தலைவர் என்கிற பொறுப்பில் உள்ள தலைமைத் தொண்டனான எனக்கு அந்த வலிமை வேண்டும் என்பதற்காகப் பொதுக்குழு நிறைவடைந்தவுடன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி, உளப்பூர்வமாக அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, கோபாலபுரம் இல்லத்திலும் சி.ஐ.டி காலனி இல்லத்திலும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினேன். முன்னதாக, பேராசிரியர் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!